“உங்களை காயப்படுத்துவதற்கான கேள்விகளோ, சந்தேகங்களோ அல்ல… நிலவுகின்ற சூழலை புடம் போடுவதற்கான வழிமுறையே…”

293

 

ஜனநாயகப் போராளிகளே....

முள்ளிவாய்க்காலின் பின் முன்னாள் போராளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகள் சார்பில் பலருடன் தொடர்பு கொண்டிருக்கிறேன்.. இவர்களில் பலர் ஆண் போராளிகள்.. பலர் பெண் போராளிகள்…
வாழ்வாதாரப் பிரச்சனைகள் காரணமாக துயரங்களை அனுபவித்தவர்களுக்கு சிலரிடம் இருந்து உதவிகளை பெற்று கொடுத்திருக்கிறேன்… இந்த பதிவைப் பார்க்கும் என்னுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு இதன் உண்மைத் தன்மை புரியும்…
அண்மையில் முன்னாள் போராளி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பல விடயங்களை தொடராக குறிப்பிட்டார்…
யுத்தத்தில் அனைத்தையும் இழந்தமை, தொழில் வாய்ப்பின்மை, அவையவங்களை இழந்து தொழிற்பட முடியாமை, சமூகத்தால் ஒதுக்கப்படும் நிலை, இன்னும் சிறையில் உள்ள முன்னாள் போராளிகள், அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், முன்னாள் பெண் போராளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் என ஏகப்பட்ட துயரங்களை சொல்லி இவற்றுக்கெல்லாம் தீர்வு எப்போது எனக் கேட்டார்….
அதன் போது நான் கேட்டேன் அரசியலுக்கு அப்பால் முன்னாள் போராளிகள் இணைந்து உங்கள் பிரச்சனைகளை வெளிக் கொணர்ந்து, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்ப்பதற்கு முயற்சி செய்யலாமே எனக் கேட்டேன்…
அரசியலில் ஈடுபட்டால் தானே இலங்கை அரசாங்கத்தினதும், படைப் புலனாய்வாளா்களதும் கண்காணிப்புக்கும், பிரச்சனைகளுக்கும் உள்ளாவீர்கள்… அதனால் அரசியலைத் தவிர்த்து ஏன் நீங்கள் ஒரு அமைப்பை உருவாக்கி செயற்பட முடியாது எனக் கேட்டேன்…

உங்கள் பிரச்சனைகளை அரசியல்வாதிகள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்றால் அவர்களை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை என நீங்கள் கருதினால் உங்கள் பிரச்சனைகை தீர்க்க, அவற்றை வெளிக்கொணர நீங்கள்  அமைப்பாக செயற்படலாமே எனக் கேட்டேன்…
அதற்கு அவர் சொன்ன பதில் “அண்ணை இங்குள்ள நடைமுறைப் பிரச்சனை பலருக்கு புரிவதில்லை… நாங்கள் முன்னாள் போராளிகள் இருவருக்கு மேல் ஒன்று கூடிக் கதைத்தாலே படைப் புலனாய்வாளா்கள் அடுத்தநாள் எங்களை அழைத்து விசாரிக்கிறார்கள்…
முன்னாள் போராளிகளாகிய நாம் எதனைச் செய்தாலும் புலனாய்வாளா்1கள் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார்கள்.. பின் தொடர்கிறார்கள்… அவ்வாறு இருக்கும் போது எப்படி ஒரு அமைப்பாக நாம் ஒன்று சேர்வது? அது தற்போதைக்கு சாத்தியம் இல்லை” என்றார் அந்த முன்னாள் போராளி….
இப்படி இருக்க முன்னாள் போராளிகள் ஒருங்கிணைந்து ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்பை உருவாக்கி பாராளுமன்றத் தேர்தலில் மாவட்டம் தோறும் தலா 2 பேருக்கு வேட்பு மனுக் கேட்பது எவ்வாறு சாத்தியம் ஆக முடியும்?
தாம் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சனைகளை வெளிக் கொணர்வதற்கான அரசியல் சாராத அமைப்பொன்றை, பொதுவான சமூக அமைப்பொன்றை, உருவாக்க முடியாவிடின்; அரசியலை முன்னிறுத்தி முன்னாள் போராளிகள் ஒரு அமைப்பாக ஒன்று திரள்வது எவ்வாறு சாத்தியம்?
சர்வதேச அளவில், புலம்பெயர் நாடுகளில்  விடுதலைப் புலிகளின் செயற்பாடு உயிர்ப்புடன் இருப்பதாக அமெரிக்க, இந்திய அரசுகளின் அறிக்கைகள் தெரிவிக்கும் பொழுது, அது குறித்து இலங்கை அரசாங்கமும், படையினரும் எச்சரிக்கை விடுத்து வரும் பொழுது, முன்னாள் போராளிகள், ஒன்று திரண்டு அரசியல் அமைப்பாக உருவாக எப்படி இலங்கைப் படையினரும் படைப் புலனாய்வாரள்களும் அனுமதி அளிப்பார்கள்?

கருணா, பிள்ளையான் தரப்பு அரசியலில் இணைந்தார்கள்… ஆளும் தரப்போடு இணைந்தார்கள்… விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முன்னரே அவ்வமைப்பில் இருந்து பிரிந்து அரசுடன் இணைந்தார்கள்… ஆனால் ஜனநாயகப் போராளிகள் அமைப்பில் இருப்பவர்களோ முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரை புலிகளுடன் இயங்கி, பின் அரச படையினரால் கைது செய்ய்பட்டு புணர்வாழ்வுக்கு உட்பட்டவர்கள்.. அவர்களை மீண்டும் ஒருங்கிணைய இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு தரப்பு எப்படி அனுமதிக்கும்?
ஜனநாயகப் போராளிகளே உங்கள் கடந்தகால தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவை.. அதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை… ஆனால் உங்களின் திடீர் அரசியல் பிரவேசம் பல கேள்விகளை, சந்தேகங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததே… முள்ளிவாய்க்காலுக்கு பின்னான அரசியல் விசச் சூழலாக மாறியிருக்கிறது… கடந்த கால அனுபவங்கள்,  தவிர்க்க முடியாதவாறு ஒவ்வொரு செயற்பாடுகள் மீதும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பிக் கொண்டிருக்கின்றன… நீண்ட அவதானிப்பின், ஆய்வின் பின்னரே பலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு இந்த விசச் சூழல் அனைவரையும் இட்டுச் சென்றிருக்கிறது…
இவை உங்களை காயப்படுத்துவதற்கான கேள்விகளோ, சந்தேகங்களோ அல்ல… நிலவுகின்ற சூழலை புடம்போடுவதற்கான ஒரு வழிமுறையே…

SHARE