உடனடி கலந்துரையாடல் – அதிரடி முடிவு

182

க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவர்கள் குறைந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு புள்ளிகளைப்பெரும் நோக்கில் நுவரெலியா மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை காரணமாக எழுந்துள்ள பிரச்சினைக்கும் எதிர்காலத்தில் இதற்கு முற்று புள்ளிவைக்கும் நோக்கில் பரீட்சை திணைக்களத்தின் பிரதம ஆனையாளர் நாயகம் புஸ்பகுமார, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அமைச்சரின் செயலாளர்கள் உடனான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் கலந்துரையாடியமைக்கு இணங்க மேற்படி பிரச்சினை குறித்து முறைப்பாடுகள் கிடைத்த பாடசாலைகள் பரீட்சை திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளும் அதேவேளை ஏனைய பாடசாலைகளிலும் நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளது. விசாரணைகள் மூலம் நிலைமை உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் சம்பந்தபட்ட அதிபர் உட்பட ஆசிரியர்கள், அதிகாரிகள் இடை நிறுத்தம் மற்றும் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். தற்போது பரீட்சை எழுதிய பிறமாவட்ட மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கான புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு தங்கள் பிள்ளைகளை பிற மாவட்டங்களில் பரீட்சை எழுதுவதற்கும் அதற்காக அதிபர்களுக்கும் ஏனையோருக்கும் பணமாக இலஞ்சம் வழங்கிய பெற்றோர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தையும் குறுகிய காலத்தில் நிறைவு செய்வதற்கு பரீட்சை திணைக்களத்தின் பிரதம ஆணை10யாளர் நாயகம் புஸ்பகுமார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் என்னை வாக்களித்து தெரிவு செய்ததன் காரணமாகவே நான் இன்று நாடு முழுவதற்குமான ஒரு கல்வி அமைச்சராக பதவியில் அமர்ந்திருக்கின்றேன். அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்பொழுது நடைபெற்றுவரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவர்கள் குறைந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் நுவரெலியா மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். வெட்டுப்புள்ளி குறைவான மாவட்டங்களில் மாணவர்கள் பலவேறு அசௌகரியங்களை அனுபவிப்பதன் காரணமாகவும், ஆசிரியர் பற்றாக்குறை உட்பட பல காரணங்களையும் உள்ளடக்கியே அவர்களுக்கு வெட்டுப்புள்ளியில் சலுகை வழங்கப்படுகின்றது. அந்தச் சலுகை அவர்களை முறையாகச் சென்றடைவதற்கு கல்வி அமைச்சு என்ற வகையில் எமக்கு பாரிய ஒரு பொறுப்பு இருக்கின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு நன்கு தெரியும். அந்த மாணவர்களின் சிரமங்கள். நான் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இது தொடர்பாக நான் பல தீர்மானங்களை எடுத்திருக்கின்றேன். இந்த விடயம் தொடர்பாக முழுமையான பொறுப்பு அதிபர்களிடம் இருக்கின்றது. ஏனெனில் அதிபர்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பாக முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்த அதிகாரத்தை அவர்கள் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது.

அதிபர்கள் தமது கடமையை உணர்ந்து செயற்படவேண்டும். அதிபர்கள் சுற்றுநிரூபத்தின்படி செயற்படவேண்டும். இந்த விடயம் தமிழ் மாணவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்களையும் இது பாதிக்கின்றது. எனவே கல்வி அமைச்சு என்ற வகையில் நாம் பரீட்சை திணைக்களத்துடன் இணைந்து மாகாண பணிப்பாளர்கள் ஊடாக முறையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருக்கின்றோம் என்று கூறினார்.

படங்களும் தகவல்களும் :- பா.திருஞானம்

unnamed

SHARE