எனது குரலை நசுக்கவே என்னை கைது செய்தார்கள்” – சிவகரன்:

237

 

 

ஜனநாயக ரீதியான எனது போராட்டத்தையும் எனது குரலையும் நசுக்கவுமே இந்த கைது நாடகம் நடாத்தப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்து உள்ளார்.

sivakaran_1
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான சிவகரன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் நேற்றைய தினம் என்னை கைது செய்தனர். கடந்த மாதம் சாவகச்சேரி பகுதியில் கைபற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் தொடர்பில் என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அவைக்கும் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தேன்.
அதன் பின்னர் வேறு விடயம் தொடர்பில் என்னிடம் விசாரணைகளை மேற்கொள்ள வில்லை இன்று காலை கூறினார்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தி  விடுதலை செய்ய போவதாக  அதன் படி நீதிமன்றில் முற்படுத்தி தற்போது பிணையில் செல்ல அனுமதித்து உள்ளார்கள்.
அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் பத்தாம் மாதம் 27ம் திகதி க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கைது நடவடிக்கை ஆனது நான் தொடர்ந்து இராணுவத்தின் நிலஅபகரிப்பு, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை எதிர்த்தும், மக்களுக்காக ஜனநாயக ரீதியாக போராடி வருவதாலும் என்னை முடக்கும் எண்ணத்துடனையே மேற்கொள்ளப்பட்டது.
இந்த கைது நடவடிக்கைக்காக நான் பயந்து போராட்டங்களில் இருந்து ஒதுங்கி போக மாட்டேன். தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுப்பேன். மக்களுக்காக தொடர்ந்து ஜனநாயக ரீதியாக போராடுவேன் என தெரிவித்தார்.
சிவகரன் பிணையில் விடுதலை:

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பகுதியில் நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சிவகரன் வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசராணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். நீதிமன்ற விசாரணைகளை தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் , வழக்கு முடிவடையும் வரையில் வெளிநாடு செல்ல முடியாது அவ்வாறு செல்ல வேண்டிய தேவை ஏற்படின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அனுமதியினை பெற்று செல்ல முடியும். அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனும் நிபந்தனைகளுடன் நீதவான் பிணையில் செல்ல அனுமதித்தார்

SHARE