ஐரோப்பியக் கவுன்சிலுக்குத் தலைமை: திட்டத்தைக் கைவிட்டது பிரிட்டன்

195

625.117.560.350.160.300.053.800.210.160.90

சுழற்சி முறையில் ஐரோப்பியக் கவுன்சிலின் தலைமைப் பதவியை அடுத்த ஆண்டு ஏற்கப்போவதில்லை என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.

இதன்மூலம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரியும் நடவடிக்கைகளை பிரிட்டன் தொடங்கியுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் அலுவலக செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை கூறியதாவது:

சுழற்சி முறை அடிப்படையில், ஐரோப்பியக் கவுன்சிலில் தலைமைப் பதவியை அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் 6 மாதங்களுக்கு பிரிட்டன் ஏற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அந்தப் பதவியை ஏற்பதைவிட, பொதுவாக்கெடுப்பில் மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கே முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாக ஐரோப்பியக் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்கிடம் பிரதமர் தெரசா மே தொலைபேசியில் தெரிவித்தார்.

இந்த முடிவை டொனால்டு டஸ்க் வரவேற்றார்.

பிரதமரின் இந்த துரித முடிவால், அடுத்த ஆண்டு பிற்பகுதியில் கவுன்சிலின் தலைமைப் பதவிக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்குப் போதிய அவகாசம் கிடைத்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்தார் என்றார் அவர்.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிப்பது குறித்து அந்த நாட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.

அவருக்குப் பதிலாக, உள்துறை அமைச்சராக இருந்த தெரசா மே புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE