ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் .

182

ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து வருகிறது. கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி.

இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். ராம்குமாரை புழல் மத்திய சிறையில் வைத்து போலீசார் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இதேபோல, ராம்குமாரின் கையெழுத்தை பரிசோதித்து பார்க்கவும் போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. கடந்த 17ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்திற்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் ராம்குமாரை அழைத்து வந்தனர்.

பின்னர் அவர் மாஜிஸ்திரேட் கோபிநாதன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மாஜிஸ்திரேட் ராம்குமாரிடம் உங்கள் கையெழுத்து மாதிரியை எடுத்து, பரிசோதனை நடக்க உள்ளது, அதற்கு சம்மதிக்கிறீர்களா? என்று மாஜிஸ்திரேட்டு கோபிநாத் கேட்டார். உடனே கையெழுத்து பரிசோதனைக்கு நான் சம்மதிக்கவில்லை என்று ராம்குமார் மறுத்தார். மேலும் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் அவர் கூறியதாக தெரிகிறது. அதையடுத்து அரசு உதவி வழக்கறிஞர், சரி நீங்கள் கூறுவதை அப்படியே எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள் எனக் கூறியதும் ”நான் கையெழுத்திட விரும்பவில்லை” எனக் கூறி நீதிமன்ற ஆவணங்களில் கைப்பட எழுதிக் கொடுத்த ராம்குமார் அதில் கையெழுத்தும் போட்டார்.

இதனையடுத்து மாஜிஸ்திரேட் ராம்குமாரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். ஜூலை 1ம் தேதி ராம்குமார் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முதலாக நீதிமன்றத்தில் தன் மீதுள்ள குற்றச்சாட்டை நேரடியாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்குமார் கையெழுத்து பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தது, சுவாதி கொலை வழக்கில் பின்னடைவை ஏற்படுத்தாது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கை பொறுத்தமட்டில் குற்றத்தை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் உள்ளன என்றும் போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சூளைமேடு மேன்சனில் தங்கியிருந்தபோது ராம்குமார் போட்டுக் கொடுத்த கையெழுத்தும், தற்போது ராம்குமார் போட்டுக் கொடுத்த கையெழுத்தும் ஒன்றிப்போகிறதா என்பதை அவர் கையெழுத்து போட்டதையே ஆதாரமாக தடயவியல் சோதனைக்கு அனுப்பி குற்றச்சாட்டை உறுதி செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர். ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தக் கொலையில் பல உண்மை களை போலீஸார் மறைத்துவிட்டனர். வேண்டுமென்றே எனது மகன் ராம்குமாரை குற்றவாளியாக்கியுள்ளனர். மோசமான புலன் விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பிவிடுவர். ஆகவே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கொலை தொடர்பாக நண்பர் முகமது பிலால் உள்பட 6 சாட்சியங்களின் வாக்குமூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ரத்த மாதிரி உள்பட 28 தடயங்களை சமர்ப்பிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.suvate

SHARE