ஐ.தே.க. விடம் சோரம் போகும் தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்கள்!-கோழிக் குஞ்சுகளையும் இரண்டு தையல் மிசின்களையும் வழங்கிவிட்டு பத்திரிகைகளில் படத்தோடு போட்டுக்கொள்ளும் இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்காக இவ்வாறு பெரியளவிலான நிதி பெற்றுக்கொண்டது பற்றியும் அது தொடர்பில் தாம் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி பற்றியும் எந்தப் பத்திரிகையிலும் வெளிப்படுத்தாதன் நோக்கம் என்ன?

312

 

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்றும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த தகவல்களும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

11084272_937237962973495_1380954966749064119_n maithri-jaffna-visit-400-260515-seithy mathri jaffna tna_north_members Vavuniya_TNA_meeting_August_26-2013_5

வடமாகாணத்தின் அபிவிருத்தி செயற்திட்டம் என்கின்றபேரில் கூட்டமைப்பைச் சேர்ந்த குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தென்னிலங்கைக்கு அழைக்கப்பட்டு தனிப்பட்ட பேரம்பேசல்களின் மூலமாக பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இது கூட்டமைப்பினரிடையே பிளவினை ஏற்படுத்தக்கூடிய செயல் எனவும் குற்றஞ்சாட்டும் தொனியில் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தனது அதிர்ச்சியை வெளியிட்ட ஜனாதிபதி இந்த விடயத்தில் தான் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி தொடர்பில் மேலும் விபரம் அறியும் பொருட்டு ஆராய்ந்த போது அதிர்ச்சி தரக்கூடிய பல்வேறு தகவல்கள் வெளிவந்ததுடன் கூட்டமைப்பினரதும் அதில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்களினதும் நேர்மைத்தன்மையினையும் தமிழ் மக்கள் தொடர்பான அவர்களது விசுவாசத்தினையும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவர்களுக்கு இருக்கக் கூடிய அர்ப்பணிப்பினையும் சந்தேகம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்தல் என்ற பெயரில் ஐ.தே.க விடம் இருந்து தனிப்பட்ட ரீதியில் பெருந்தொகையான நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது.

அது தவிர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நன்றிவிசுவாசத்தினைப் பாராட்டி பல மில்லியன் பெறுமதி வாய்ந்த வாகனம் ஒன்றையும் ஐ.தே.க வினர் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்விடயங்களில் தொடர்பு இருப்பதாக அறியமுடிகிறது. இந்நிலையில் கூட்டமைப்பின் ஒவ்வொருவரும் எனக்குக் குறையத் தான் கிடைத்துள்ளது அந்தக் கட்சியின் உறுப்பினருக்கு கூடக்கிடைத்துள்ளது எனவும் அவருக்கு கொஞ்சமாவது கிடைத்துள்ளது எனக்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும் ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பல இணையத்தளங்களில் இது பற்றிய செய்திகள் வெளிவந்ததைப் பார்த்த வடக்கு மக்கள் தமது தலைவிதியை நொந்து ஒப்பாரிவைக்கத் தொடங்கியுள்ளனர். ஆயினும் இப்பத்தி எழுதும் வரை கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் இதுதொடர்பில் எவ்வித கருத்தினையும் வெளியிட்டிருக்கவில்லை. இது மக்கள் மத்தியில் சந்தேகங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

எனவே இது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தி தமது தூய்மையினை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது கூட்டமைப்பினரது கடமையாகும்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் மூலம் மைந்த ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டு மைதிரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக்கப்பட்டதை தமிழர் தரப்பு மகிழ்வுடன் வரவேற்றாலும் கூட ஐ.தே.க.வின் தலைவர் நாட்டின் பிரதமரான சம்பவத்தை ஓர் எச்சரிக்கையுடனேயே பார்த்தனர்.

2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற பேச்சவார்த்தையினைப் பயன்படுத்தி மிகவும் தந்திரமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பினுள் ஒர் பிளவினை ஏற்படுத்தி அவர்களை பலவீனமடையச் செய்ததில் ஐ.தே.க தலைவரின் பங்கு குறித்து அனைவரும் அறிவர்.

இதுபோன்றதோர் நிலைமை கூட்டமைப்பினருக்கும் ஏற்படலாம் என சில அரசியல் ஆய்வாளர்கள் வெளிப்படையாகவே எச்சரித்திருந்தனர். கடந்த கால நிகழ்வுகளை மாத்திரம் வைத்துக்கொண்டு முடிவுக்கு வரமுடியாது எனவும் இது தேவையில்லாத மனப்பிரமை எனவும் கூறிய சில தமிழ் அரசியல் வாதிகள் தமது இணக்க அரசியல் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்கியிருந்தனர்.

முஸ்லிம் அரசியல் தலைமைகளை முன்னுதாரணமாகக் காட்டி நாமும் ஏன் அவர்களைப் போல் நடந்து இணக்க அரசியல் மூலம் அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெற்று எமது சமூகத்திற்கு நல்லது செய்யலாம் தானே என்கின்றன கருத்துருவாக்கமும் மக்கள் மத்தியில் தோன்றச் செய்யப்பட்டது. அதன் உச்சக்கட்டமாக புதிய அமைச்சரவையில் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து நிலையை உருவாக்கவும் முயற்சிக்கப்பட்டது.

ஆயினும் மக்கள் மத்தியிலும், கூட்டமைப்பின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய சக்திகளிடமும் இது குறித்து எதிர்ப்புக்கள் கிளம்பவே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தமது கனவைத் தள்ளிப்போட்டனர். தமிழ்த்தேசிய அரசியல் பெருவழியினை உற்றுநோக்குகின்ற ஒருவர் ஒரு விடயத்தினை இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஆரம்பத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் மாத்திரமே ஐ.தே.க அரசுடன் நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தனர். ஏனையோர் ஒருவகையான விமர்சப் போக்கினை அல்லது இடைவெளியினைக் கடைப்பிடித்தனர்.

ஆனால் படிப்படியாக தற்போது கூட்டமைப்பைச் சேர்ந்த பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏதோ ஒரு வகையில் ஐ.தே.க அரசினை துதிபாடுபவர்களாக அல்லது ஆகக் குறைந்தது குறை சொல்லாதவர்களாக காணப்படுகின்றனர். ஏன் இந்த மாற்றம்? 100 நாட்களில் எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்? என்கின்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.

இந்த நிலையில் தான் வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்துள்ளார். அதன்படி கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு அவர்களுடன் சில டீல்கள் பேசப்பட்டு அதனடிப்படையில் ஐ.தே.க அரசாங்கத்தால் பெரிய தொகைப் பணம் அபிவிருத்தி என்ற பெயரில் கைமாற்றப்பட்டுள்ளது.

இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் சட்டரீதியானதா? சட்டரீதியற்றதா? அல்லது தனிப்பட்ட நட்புரீதியானதா என உறுதிப்படுத்தமுடியவில்லை. ஆயினும் இக்கொடுக்கல் வாங்கல்கள் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

1. அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற இவ்வாறான நிதிப்பரிமாற்றம் தொடர்பான விடயங்களை முதலமைச்சர் ஜனாதிபதிக்குத் தெரிவித்த போது அவர் தனது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தார் என செய்திகள் வெளிவந்துள்ளபடியால் இந்நிதிப் பரிமாற்றம் தொடர்பில் ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவையோ அறிந்திருக்கவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது.

அமைச்சரவைக்குத் தெரியாமல் பிரத்தியேக அடிப்படையில் எவ்வாறு இப்படியான பெருந்தொகைப் பணம் கைமாறியுள்ளது அவ்வாறாயின் இது அரச பணமா அல்லது ஐ.தே.க வின் பணமா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

2. அபிவிருத்திச் செயற்திட்டங்களைச் செயற்படுத்த திட்டமுன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டே இந்நிதி பெறப்பட்டதாக ஒரு சில சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.

அபிவிருத்திச் செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்கு அமைச்சர் அல்லாத அதுவும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திட்ட முன்மொழிவினை சமர்ப்பித்து விசேட நிதியினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நடைமுறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அப்படியாயின் இவர்களுக்கு மாத்திரம் ஏன் இவ்வாறு பிரத்தியேக நடைமுறை பின்பற்றப்பட்டது? பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமோ அல்லது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமோ இவ்வாறான ஓர் விசேட நிதி வழங்கும் பொதுவான திட்டம் எதுவும் காணப்படாத நிலையில் கூட்டமைப்பைச் சேர்ந்த குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் பெருந்தொகையான நிதி வழங்கப்பட்டது ஏன்?

3. மாகாணசபையையும் அதன் செயற்பாடுகளையும் பலப்படுத்துதல் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு முக்கியமானது. வடமாகாணசபையினர் தமது அதிகரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் மத்திய அரசுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அபிவிருத்தி செயல்திட்டங்களைச் செயற்படுத்த வேண்டுமாயின் அதற்கான திட்டவரைபினை மாகாணசபையினூடாக அல்லது மாகாணசபையுடன் இணைந்து ஆளும் ஐ.தே.க அரசுக்கு சமர்ப்பித்து பெற்றிருக்கமுடியும்.

அதைவிடுத்து கூட்டமைப்பு எம்பிக்கள் பிரத்தியேகமாகச் சென்று ஐ.தே.கவிடம் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொண்டது சந்தேகங் கொள்ளச் செய்துள்ளது என்பதுடன் கூட்டமைப்பின் அடிப்படைக்கொள்கைகளுக்கு முரணானதாகவும் அமைந்துள்ளது. வவுனியாவுக்குள்ளே வடக்கில் ஒரு கதையையும் வவுனியாவுக்கு வெளியே தெற்கில் இன்னொரு கதையைப் பேசுவது என்பது இனியும் நீண்டகாலத்திற்கு சாத்தியப்படும் ஓர் தந்திரோபாயமாக அமையப்போவதில்லை என்பதை கூட்டமைப்பினர் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

4. பணம் மற்றும் ஏனைய விசேட சலுகைகளைப் பிரத்தியேக ரீதியில் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி தத்தமது கட்சிகளின் மத்திய குழுவிற்கு அறிவித்தார்களா? அல்லது இது பற்றிப் பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்களா?

10 கோழிக் குஞ்சுகளையும் இரண்டு தையல் மிசின்களையும் வழங்கிவிட்டு பத்திரிகைகளில் படத்தோடு போட்டுக்கொள்ளும் இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்காக இவ்வாறு பெரியளவிலான நிதி பெற்றுக்கொண்டது பற்றியும் அது தொடர்பில் தாம் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி பற்றியும் எந்தப் பத்திரிகையிலும் வெளிப்படுத்தாதன் நோக்கம் என்ன? இதையேன் இருட்டடிப்புச் செய்தார்கள்?

5. பிரதமர் யாழ்ப்பாணம் வந்தபோது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஓடோடிப்போய் அவருடன் உராய்ந்துகொண்டு மேடையில் நின்றது இப்படியான அற்ப சலுகைகளைப் பெறுவதற்காகவா?

6. அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என முடிவெடுக்கப்பட்டதன் நோக்கம் நாம் சலுகைகளுக்கு விலைபோக மாட்டோம் என்பதையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன்னுரிமை கொடுப்போம் என்பதையும் வெளிக்காட்டவுமே ஆகும்.

அவ்வாறு இருக்கையில் இப்படி இரகசியமாக தனிப்பட்ட ரீதியில் சென்று அபிவிருத்திச் செயற்திட்டம் என்ற பெயரில் நிதியினை பெற்றுக்கொண்டது எவ்வகையில் சரியானது? இது மக்களிடத்து ஒன்றைச் சொல்வதுவும் இன்னொன்றைச் செய்வதுவும் என்ற இரட்டை வேடத்தை தோற்றுவிக்காதா?

மக்கள் மத்தியில் பல்வேறுசந்தேகங்களை உருவாக்கியுள்ள இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தவேண்டிய பெறுப்பும் கடமையும் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சித்தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு எனக் கூறலாம்.

இல்லாதுவிடில் ஒரு சிலர் செய்த தவறுக்கு அனைவரும் பழிச்சொல் ஏற்கவேண்டிய நிலமைக்கு ஆளாவர். வரலாற்றில் தமிழ்த்தேசிய தலைவர்களுக்கு இழுக்கினைத் தேடித்தரும் ஒன்றாக இது அமைந்துவிடும். எனவே யார் யார் எவ்வாறு தனிப்பட்ட பேரம்பேசலின் மூலம் நிதியினைப் பெற்றுக்கொண்டார்கள்.

எந்தெந்தக் காரணங்களுக்காக பெற்றுக்கொண்டார்கள் அவை மக்களுக்குச் சென்றடைந்தா எனத் தெரியப்படுத்த வேண்டும். மறுபுறத்தில் இப்படியான எந்த ஒரு பிரத்தியேக நிதி ஒருக்கீட்டினையோ அல்லது வேறு சலுகைகளையோ ஐ.தே.க அரசாங்கத்திடமிருந்து கூட்டமைப்பு எம்.பிக்கள் பெற்றுக்கொள்ளவில்லையாயின் அது குறித்தாவது தெரியப்படுத்த முன்வரவேண்டும்.

அதைவிடுத்து தொடர்ச்சியாக மௌனத்தைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியமான அரசியல் செயற்பாடல்ல என்பதுடன் சந்தேகங்களை அதிகரிக்கவல்லது. உண்மையில் கூட்டமைப்பினருக்கு ஓர் பலமான எதிர்க்கட்சியினர் இல்லாத குறையினை இது உணர்த்துகிறது. நாம் எதுவும் செய்யலாம். மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என்ற எண்ணம் கூட்டமைப்பினர் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது.

ஆனால் ஒன்று இவ்வாறான எண்ணம் கொண்ட பலர் இறுதியில் மக்களால் தூக்கியெறியப்பட்டார்கள் என்பது உலக வரலாறு. ஏன் இலங்கையிலும் கூட. எல்லோரையும் எல்லாக்காலத்திலும் ஏமாற்ற முடியாது என்கின்ற வாசகம் இங்கு ஞாபகத்திற்கு வருவதை ஏனோ தவிர்க்கமுடியாதுள்ளது.

SHARE