ஐ போனுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்!

261

சீனாவில் ஒரு தம்பதி, நவீன செல்லிடப் பேசியான “ஐ-போன்’ வாங்குவதற்காக தாம் பெற்றெடுத்த குழந்தையை 3,530 டொலருக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாவுக்கு ) விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொலிஸார் தெரிவித்ததாவது,
சீனாவின் ஃபியூஜி மாகாணத்தைச் சேர்ந்த ஆ துவான் என்பவர் பெரும்பாலும் இணையதள மையங்களிலேயே பொழுதைக் கழிப்பவர். அவருக்கு ஸியாவோ மேய் என்ற பெண்ணுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமண வயதை எட்டாத நிலையில், ஸியாவோ மேய்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சட்ட விரோதமாகப் பிறந்த அந்தக் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில், அதனை விற்பனை செய்துவிட ஸியாவோ மேயும், ஆ துவானும் முடிவு செய்துள்ளனர்.

குழந்தையை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு “ஐ-போனும்’, மோட்டார் சைக்கிளும் வாங்க அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சமூக வலைத்தளம் மூலம் 3,530 டொலருக்கு அந்தக் குழந்தையை ஆ துவான் விற்பனை செய்தார். இணையத்தளம் மூலம் சட்ட விரோதமாகச் செய்யப்படும் விற்பனைகள் குறித்து விசாரித்து வரும் பொலிஸார் இந்த விற்பனையைக் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆ துவானும், ஸியோவோ மேயும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆ துவானுக்கு 3 ஆண்டுகளும், ஸியோவோ மேய்க்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்தது. குழந்தையை வளர்க்கும் நிலையில் அவர்கள் இல்லாததால், குழந்தையை விலைக்கு வாங்கியவரிடமே அந்தக் குழந்தை தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சீனாவில் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் கடத்தி, இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
iphonesoldbaby

SHARE