கஞ்சா சேர்த்த குளிர்பானங்களைத் தயாரிக்க கோகோ கோலா நிறுவனம்

189

சமீபகாலமாக உடல் நலம் மீதுள்ள அக்கறையால் சோடா அருந்தும் மக்களின் எண்ணிக்கை, அல்லது மக்கள் அருந்தும் சோடாவின் அளவு குறைந்து வருவதால், சந்தையில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதற்காக கஞ்சா சேர்த்த குளிர்பானங்களைத் தயாரிக்க கோகோ கோலா நிறுவனம் அதிரடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அதிகரித்துவரும் CB(Cannabidiol) பயன்பாட்டை உற்று கவனித்து வருவதாகவும், உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் குளிர்பானங்களில் அதை சேர்ப்பது குறித்து சிந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBD (Cannabidiol) என்பது கஞ்சா செடியிலிருந்து கிடைக்கும் ஒரு பொருள், ஆனால் அது போதையை ஏற்படுத்தாது.

அதன் காரணமாக அது மருத்துவத் துறையில் வீக்கம், வலி, மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனடாவில் கஞ்சா உற்பத்தி செய்து வரும் நிறுவனமான Aurora Cannabis நிறுவனத்துடன் கோகோ கோலா நிறுவனம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதேபோல் கஞ்சா சேர்த்த குளிர்பானங்களை தயாரிப்பதில் தனக்கு உள்ள ஆர்வத்தை Aurora நிறுவனமும் வெளிப்படுத்தியுள்ளது.

என்றாலும் இது குறித்து கருத்து கேட்ட போது இரண்டு நிறுவனங்களும் கருத்துக் கூறவில்லை.

கனடாவில் இத்திட்டம் தொடங்குவதாக ஒரு தோற்றம் காணப்பட்டாலும், கோகோ கோலா நிறுவனம் வெறும் 35 மில்லியன் மக்கள் உள்ள கனடாவை மட்டும் குறிவைத்து இத்திட்டத்தை முன்வைக்கும் என்று சொல்ல முடியாது.

கண்டிப்பாக மிகப்பெரிய சந்தையான அமெரிக்கா மீதும் அதற்கு ஒரு கண் இருக்கும். கனடா கஞ்சாவை மருத்துவ ரீதியாக மட்டுமின்றி மதுபானம் போன்ற மகிழ்ச்சியூட்டும் பானமாகவும் சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

ஆனால் அமெரிக்காவின் சில மாகாணங்கள் தவிர பிற பாகங்களில் கஞ்சா சட்டவிரோதமானது. என்றாலும் ஜூன் மாதத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை Epidiolex என்னும் வலிப்பு நோய்க்கான மருந்தை அங்கீகரித்துள்ளது.

இது அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல் கஞ்சா அடிப்படையிலான மருந்தாகும். அதிலும் CBD (Cannabidiol) உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே படிப்படியாக CBD மற்றும் இதர கஞ்சா தயாரிப்புகள் சட்டப்பூர்வமாக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவிலும் கோகோ கோலா நிறுவனம் தனது புதிய தயாரிப்புடன் ஆழக் காலூன்ற முடியும்.

SHARE