கட்டுரை : ஒக்டோபர் 09 ஆம் திகதி உலக அஞ்சல் தினம்

291

உலக தபால் தினம் ஒக்டோபர் 9 ஆம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலில் 1874 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேர்கன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பேர்ன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஒக்டோபர் 9 ஆம் திகதியை அனைத்துலக அஞ்சல் தினமாக (World Post Day) பிரகடனப்படுத்துவதற்கு, 1969 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது தீர்மானிக்கப்பட்டது.  1984 ஆம் ஆண்டு ஹெம்பேர்க் மாநாட்டில் அனைத்துலக அஞ்சல் தினம்,  உலக அஞ்சல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1798 இல் ஒல்லாந்தர்கள் தமது ஆட்சி காலத்தில் கடலோர பகுதிகளில் முதலாவது அஞ்சல் அலுவலகம் அமைத்தல் மற்றும் 1799 இல் முதன்முறையாக அஞ்சல் விதிமுறைகளை வெளியிடுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அஞ்சல் சேவைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாறு காணப்படுகிறது.

தொழில்நுட்ப மற்றும் நிதி வரையறைகள் இன்றி மிகவும் நெருங்கிய மற்றும் மலிவு விலையில் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் அஞ்சல் சேவை குறித்து இன்னும் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இலங்கை அஞ்சல் சேவையால் மக்களுக்கு ஆற்றப்படும் சேவை அளப்பரியதாகும். ஆண்டுகள் தோறும் விரிவாக்கப்படும் அஞ்சல் சேவையினூடாக உலகின் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே தொடர்பாடல் மாத்திரமின்றி பொருள் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறுகிறது. பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான சேவையை அஞ்சல் மூலம் வழங்குவதுடன், நவீன தொழில்நுட்பத்தினூடாக மிகவும் பயனுள்ள பல சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை காலத்திற்கு உகந்ததாகும்.

இணைய வர்த்தகம் (e-commerce), B- Post ஆகிய முறைகளின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை பாதுகாப்பாக இந்நாட்டிற்கு கொண்டுவருதல், சிறு மற்றும் நடுத்தர வர்க்க வர்த்தகர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு தொழில்முனைவோருக்கு ஆற்றும் சேவை விசாலமானதாகும். அஞ்சல்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பான தொன்றாகும். இது மனித வாழ்வின் அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது  அஞ்சல்துறைதான்.

ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன. உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்றும் அஞ்சல்முறை அவசியமாகின்றது.
ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர்.

1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville) மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தால் அஞ்சல் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அஞ்சல் பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் அஞ்சல் பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும். அஞ்சல் துறையில் எத்தனையோ நலத்திட்டங்கள் உள்ளன. இத்துறை உள்நாட்டு தொழில் முனைவோருக்கும் பொது மக்களுக்கும் ஆற்றும் சேவைகள் விசாலமானதாகும்.

எம்.எம். அப்துல் முபாறக் (JP)
உப தபால் அதிபர்,
உப தபால் அலுவலகம்
ஆஸ்பத்திரி வீதி ,
சாய்ந்தமருது.

SHARE