கலாசாலை நன்மைக்காக தோள் கொடுத்த உயர்ந்த மனிதரை…

74

கலாசாலை நன்மைக்காக தோள் கொடுத்த உயர்ந்த மனிதரை, ஒரு தியாகியை இன்று நாம் இழந்து இருக்கின்றோம் : சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாபீடம் 

நூருல் ஹுதா உமர் 

அண்மையில் காலமான மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய ஓய்வுபெற்ற பிரதியதிபரும், சாய்ந்தமருதின் மூத்த உலமாவுமான யு.எல்.எம். காசிம் அவர்களின் நினைவாக அன்னார் நீண்டகாலம் தலைமை வகித்த சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாபீடத்தின் தற்போதைய நிர்வாகம் சார்பில் தவிசாளர் சட்டத்தரணி அஷ் ஷெய்க் என். எம். அப்துல் முஜீப் இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், எமது சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் முன்னாள் தவிசாளரும், சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் முன்னாள் உப தலைவரும், சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், எமது ஊரின் பிரபல ஆலிமுமான மதிப்புக்குரிய அல்ஹாஜ் யு.எல்.எம். காசிம் (கியாதி) ஹழ்ரத் அவர்களின் மரணம் எம் எல்லோருடைய மனதிலும் மிகுந்த கவலையையும் வேதனையும் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அந்த செய்தியில் குறிப்பாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 03 திகதி ஆளுநர் சபையின் பார்வையாளராக இருந்த மதிப்புக்குரிய ராசிக் அவர்களையும் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, எமது கலாசாலையில் நீண்ட காலமாக பொருளாளராக கடமையாற்றிய எமது மதிப்புக்குரிய பொருளாளர் அல்ஹாஜ் ஹதிய்யதுல்லாஹ் அவர்களையும் அதேபோன்று 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆளுநர் சபையின் மற்றுமொரு முக்கிய உறுப்பினராக கடமையாற்றிய மதிப்பிக்குரிய ரஷீத் அவர்களையும் எமது கலாசாலை இழந்திருக்கிறது.

அந்த வரிசையில் இன்று 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி எமது கலாசாலையின் நீண்ட காலம் தவிசாளராக இருந்த அல்ஹாஜ் மௌலவி யு.எல்.எம். காசிம் கியாதி ஹழ்ரத் அவர்களையும் இழந்திருக்கிறது. உண்மையில் அல்லாஹுத்தஆலா உடைய முடிவை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும் என்ற இறுக்கமான சூழ்நிலையில் அவரின் மரணத்தால் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை நிரப்புவது என்பது மிகவும் கடினமான பொறுப்பாக இருக்கிறது. அவர் எமது கலாசாலையின் உட்கட்டமான வேலைகளை மேற்கொண்டு அதனை வடிவமைப்பதிலும் நிர்வாக ரீதியாக கலாசாலையை ஒழுங்கு படுத்துவதிலும் மிகப்பெரிய பங்காற்றியவர்.

தனது வாழ்நாளில் கலாசாலையை இலக்காக எடுத்து நடத்தியவர். தனது மூச்சும் பொழுதும் கலாசாலையாகவே இருந்து அதற்காகவே உழைத்த ஒரு உன்னதமான ஆளுமை அது. அல்ஹாஜ் காசிம் கியாதி ஹழ்ரத் என்றால் அது மிகையாகாது. இன்று இந்த கலாசாலை இவ்வளவு பிரமாண்டமாக காட்சியளிப்பதற்கும் அதன் வளர்ச்சிக்கும் தலைவராக இருந்தது மாத்திரமின்றி தனது தலைமைத்துவ பொறுப்பிற்குப் பின்னரும் முற்றுமுழுதாக கலாசாலை நன்மைக்காக தோள் கொடுத்த உயர்ந்த மனிதரை ஒரு தியாகியை இன்று நாம் இழந்து இருக்கின்றோம்.

அல்லாஹுத்தஆலா அவருடைய பாவங்களை மன்னித்து அவருக்கு ஜன்னத்துல் அஃலா என்ற உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என்றும் இவ்விடத்தில் பிரார்த்தித்துக்கொள்கின்றோம். உண்மையில் நமது மாணவர்களும் உஸ்தாதமார்களும் அவர் சுகயீனமுற்று இருக்கின்றார் என்ற செய்தியை கேட்டதிலிருந்து அவருக்காக வேண்டி ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் விசேட துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர் என்றாலும் அல்லாஹுத்தஆலாவுடைய முடிவு அவன் கைவசம் இருக்கின்றது. அல்லாஹுத்தஆலா இப்புனித ரமழானுடைய மாதத்தில் அவருக்குரிய அந்த அழைப்பை ஏற்படுத்தியிருக்கிறான்.

அவருடைய இந்த இழப்பு எமது கலாசாலைக்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகும் அவரது இழப்பால் நமது நிர்வாகம் உண்மையிலேயே தளர்ந்திருக்கிறது. அதேபோன்று அவரது இழப்பால் கவலையுறும் குடும்பத்தினர்கள் உறவினர்கள் அவரது பிள்ளைகள் அனைவருக்கும் இவ்விடத்திலே எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு எமது ஆறுதல்களையும்  தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். உண்மையில் அல்லாஹ்விடமிருந்து தான் நாங்கள் எல்லோரும் வந்திருக்கிறோம் மீண்டும் அல்லாஹ்விடமே நாங்கள் திரும்பி செல்ல இருக்கின்றோம் என்பதை இவ்விடத்தில் ஞாபகமூட்டி இது அல்லாஹ்வின் முடிவு இதை ஏற்பது நம் அனைவரின் கடமை என்ற அடிப்படையில் அல்ஹாஜ் மர்{ஹம் காசிம் கியாதி ஹழ்ரத்துடைய இந்த பிரிவால் துன்பட்டிருக்கும் அவருடைய குடும்பத்தினர் உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹுத்தஆலா ஆறுதலளிக்க போதுமானவன் என்று பிரார்த்தித்து மீண்டும் அல்லாஹுத்தஆலா அவருடைய பாவத்தை மன்னித்து அவருக்கு அதி உயர் சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜன்னத்துல் அஃலாவில் அவருடைய இடத்தை கொடுக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

SHARE