காசா இஸ்ரேல் போர் ஏன் இடம்பெறுகிறது -4000 வருடக் கதை.நான்கு வரியில் சொல்லக் கூடியதல்ல..

334

 

4000 வருடக் கதை.நான்கு வரியில் சொல்லக் கூடியதல்ல.. முழுவதும் ஓரளவு..அதாவது இது கூட நுனிப்புல் தான்.. விரும்பியவர்கள் தொடரலாம்..

” யூதர்களை நம்பாதீர்கள். அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள். தங்களுக்கென்று ஒரு தேசம் உருவாகும் வரை தான் அவர்கள் அமைதியுடன் இருப்பார்கள். அப்படியொரு தேசம் உதித்துவிட்டால் , மறுகணமே அரேபியரின் மீது படையெடுத்து , எங்களின் நிலப்பரப்பை அபகரித்துக் கொள்வார்கள். “

அவலக்குரல் கொடுத்தோர் பாலஸ்தீனிய அரபு முஸ்லிம்கள்.. இதை யூதர்களே .. நம்பவில்லை. கடவுளின் பிள்ளைகள் நாங்கள். அதோடு நம் இருவரது இனங்களுக்கும் மூதாதையர் ஒருவரே ( தந்தை ஆப்ரஹாம்..அதாவது முஸ்லிம்களின் இப்ராஹிம்.) ஆனால் நடந்தது பாலஸ்தீனியர்கள் நினைத்தபடியே..

ஓரளவு இந்த கதையை ஆரம்பத்தில் இருந்து புரிந்து கொண்டால் மேற்கொண்டு புரிந்து கொள்ள உதவும்.

விவிலியம் , பழைய ஏற்பாடு , யூதர்களின் தோரா , இஸ்லாமியரின் குரான்.. இவற்றில் கூறப்படும் ஆதி முதல் ஆண் ஆதாம் , பெண் ஏவாள்.

ஆதாம் ஏவாளுக்குப்பின் பதினாறாவது தலைமுறையின் தந்தை ஆப்ரஹாம்.. குரானில் இப்ராஹிம்.

ஆப்ரஹாமின் முதல் மனைவி சாராள். இரண்டாம் மனைவி ஆகார்.( குழந்தை இல்லாத நிலையில் பணிப் பெண் ஆகாரை ஆப்ரஹாமுக்கு மணம் முடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகாருக்கு ஆண் குழந்தை இஸ்மாயில் பிறந்தான். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து சாராளுக்கு ஆண் குழந்தை ( ஈசாக் ) பிறந்தது.

மூத்த மகனுக்குரிய உரிமை பணிப் பெண் ஆகாரின் மகனுக்கு கிடைப்பதை விரும்பாத சாரா ஆகாரை வெறுக்க..வேறு வழியின்றி ஆப்ரஹாம் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.

ஆப்ரஹாம் ஆகாரையும் இஸ்மாயிலையும் வெளியேற்றுதல்.

ஆகார் தனது மகனை எகிப்து அழைத்துச் சென்று வாழ்கிறார்.இஸ்மாயிலின் வழிவந்தோர் அரேபியர்கள். ஈசாக்கின் வம்சத்தோர் யூதர்கள். ஈசாக்கின் மனைவி ரெபேக்காள்.இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் . மூத்தவன் ஈசா , இளையவன் ஜேக்கப். வயதான ஈசாக்கிற்க்கு பார்வை இல்லாத நிலையில் ஜேக்கப் , ஈசாவைப் போல நடித்து ஏமாற்றி தந்தையிடமிருந்து வரங்களைப் பெறுகிறான். அண்ணனை ஏமாற்றி மூத்தவனுக்குரிய உரிமையையும் பெற்றுக் கொள்ளவே, உண்மை தெரிந்து ஈசா , ஜேக்கப்பை பழி வாங்க நினைக்கவே..அவன் தாய் ஜேக்கப்பை தனது அண்ணனிடம் அனுப்பி வைக்கிறாள்.

மூத்தவனுக்குரிய பிறப்புரிமையை ஈசா ஜேக்கப்புக்கு கொடுக்கிறான்.

ஜேக்கப் தனது மாமனின் நாட்டுக்குச் செல்லும் வழியில் , தனது அண்ணனுக்குச் செய்த துரோகத்தை நினைத்து மனம் வருந்தவே இறைவன் அவரிடம் ” உனது பாவங்களை நினைத்து வருந்தியதால் , உன்னை ஆசிர்வதிக்கிறேன்.இனி நீ ஏமாற்றுபவன் என்ற அர்த்தத்தைக் குறிக்கும் ஜேக்கப் என்ற பெயர் நீங்கி இஸ்ரவேல் என்று அழைக்கப்படுவாய் ” என்று கூறுகிறார்.

ஜேக்கப் தனது மாமன் இருப்பிடம் சென்று, அவரது மகள் ரேச்சலை திருமணம் செய்கிறார். அவரது தமக்கையையும் , மணமுடிக்கிறார்.இவர் மூலம் 12 ஆண்களும் ஒரு பெண்ணும் பிறக்கின்றனர். இந்த பன்னிரண்டு பேரின் வழிவந்தோர் இஸ்ரவேலர்கள் எனப்பட்டனர். இவர்கள் அனைவருடனும் ஜேக்கப் இறைவனின் கட்டளைப்படி , தனது தந்தையின் இருப்பிடமான கானான் சென்று அடைகிறார். ஏசாவும் நடந்தவற்றை மன்னித்து தம்பியை ஏற்றுக் கொள்கிறார்.

ஏசா ஜேக்கப்பை ஏற்றுக் கொள்ளல்.

இவர்களில் ஜோசப் என்ற மகனை ஜேக்கப் மிகவும் நேசிக்கவே , பொறாமையால் அவரது சகோதரர்கள் , வழியில் சென்று கொண்டிருந்த அரேபியர்களிடம் விற்று விட்டு , தந்தையிடம் அவனை விலங்கு அடித்து கொன்றுவிட்டதாகக் கூறுகின்றனர்.

எகிப்து சென்று ஜோசப் தனது கனவுக்கு பலன் கூறும் திறமையால் . மன்னனின் மதிப்பைப் பெற்று , வரவிருக்கும் கொடும் பஞ்சம் பற்றி யும் , அதைத் சமாளிக்கும் திட்டங்களை வகுத்தும் நாட்டை பஞ்சத்திலிருந்து காப்பாற்ற, நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்படுகிறார்.

கொடும் பஞ்சத்தால் உணவுப் பொருட்களை வாங்க ஜேக்கப் தனது மகன்களை எகிப்துக்கு அனுப்ப , ஜோசப் சகோதர்களைக் கண்டு கொண்டு, தனது தந்தையையும் வரவழைக்கிறார் .எகிப்தில் ஜேக்கப்பின் பன்னிரண்டு மகன்களின் வம்சத்தவரும் தழைக்கின்றனர்.

நாளடைவில் இஸ்ரவேலர்கள் பல்கிப் பெருக , அவர்களது அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு மன்னன் , தங்களை இஸ்ரவேலர்கள் அடிமையாக்கி விடக்கூடும் என அஞ்சி, பலவிதமான துன்பங்களை கொடுக்கிறான்.

மோசஸ் பிறப்பு :

இஸ்ரவேலர்களின் ஆண்குழந்தைகளை மன்னனின் கட்டளைப்படி கொன்று குவிக்கின்றனர்.இவ்வேளையில் இவ்வினத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்க , அதை பாதுகாக்கும் பொருட்டு , ஒரு துணியில் சுற்றி, நதிக்கரையில் வைக்க , மன்னனின் மகள் கண்டு , மோசஸ் என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பிக்கிறாள். மோசஸ் வளர்ந்த பிறகு , தனது பிறப்பின் ரகசியத்தை அறிகிறார்.இஸ்ரவேலர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இவரைப் பற்றிய உண்மை தெரியவே நாட்டை விட்டு வெளியேறுகிறார்.

ஒரு நாள் இறைவன் , தனது மக்களைக் காப்பாற்றி , அவர்களை தான் அவர்களுக்கு வாக்களித்த பூமிக்கு அழைத்துச் செல்ல ஆணையிடவே..மோசஸ் இறைவனின் துணையுடன் அவர்களை செங்கடலை இரண்டாகப் பிளந்து .. அழைத்துச் செல்கிறார். இதன் பிறகு தனது தளபதி ஜோஷுவா விடம் மக்களை ஒப்படைத்து விட்டு மரணம் அடைகிறார். ஜோஷுவா மக்களை வழிநடத்தி அங்கே ஏற்கனவே இருந்த மக்களை போரில் வென்று , வாக்களிக்கப்பட்ட தேசமான கானானில் குடியமர்கிறார்கள். ( கி.மு .1272) ல் இக்குடியேற்றம் நடந்தது. குடவோலை முறைப்படி இவர்களுக்கான நாடுகள் பிரித்தளிக்கப்பட்டன.

400 ஆண்டுகள் கழித்து :

இஸ்ரவேலர்களும் ஏற்கனவே அங்கே ( பாலஸ்தீனர்கள் )வாழ்ந்திருந்த மக்களும் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வாழ்ந்தனர். இதன் பிறகு வந்த மன்னர்களில் முக்கியமானவர் தாவீது ( இவர் ஜேக்கப் பின் சகோதரர் ஏசாவின் இளையமகன். கோலியாத்தை வென்றவன் ) இவனுடைய மகன் புகழ் பெற்ற சாலமோன். இவரது காலத்தில் மிகப் பெரிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் தான் மோசசுக்கு இறைவன் அளித்த பத்து கட்டளைகள் அடங்கிய பேழை வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது .ரோமானியர்களின் ஆட்சியின் போது , இவ்வாலயம் இடித்து நொறுக்கப்பட்டது. இதன் பிறகு பாலஸ்தீனம் ( பண்டைய கானான் ) கவர்னர்களின் பொறுப்பில் விடப்பட்டது. அவர்களில் ஒருவனே ஏரோது. இக்காலத்தில் யூத மத குருமார்கள் வலிமை பெற்றிருந்தனர். இவர்களின் கீழேயே ஆட்சியாளர்கள்.

சாலமோன் ஆலயம் மீண்டும்:

இந்த ஏரோத் புரட்சி செய்ததாகத் கூறி ஒரு குறிப்பிட்ட யூத குழுவினரை , விசாரிக்காமல் கொன்று விட , யூத குருமார்கள் து விசாரணைக்கு அஞ்சி, வெளியேறி , ரோம் ஆட்சிக்குட்பட்ட நாட்டுக்கு செல்கிறார். அங்கே மார்க் ஆன்டனி ( கறுப்பு ஆப்பிள் கிளியோபாட்ரா வின் காதல் கணவன் ) ஏரோதுக்கு படையுதவி செய்து , மீண்டும் ஜுதேயா என்ற இஸ்ரேலைப் பிடித்து, ஏரோது கையில் ஒப்படைக்கிறார்.

இப்போது யூதர்கள் ஒரு யூத மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை அனுபவித்தனர்.இவன் செய்த ஒரே நல்ல காரியம் இடிக்கப்பட்ட சாலமோன் ஆலயத்தை மீண்டும் எழுப்பியது தான். அதோடு வேளாண்மைக்கு வித்திட்டவர் இவரே.இதற்காகவே இவனது ஆட்சியை பொறுத்துக் கொண்டனர்.( இக்கோவில் தான் மோசஸ் இறைவனிடமிருந்து பெற்ற கட்டளைகள் அடங்கிய புனித பெட்டி வைக்கப்பட்டிருந்தது.)

மனித குமாரன் வருகிறார் பரா..க்..:( ஜோஸுவா )

இயேசு பிரார்த்தனை செய்த ஹெஸ்தமனே தோட்டம்.

தங்களை மீட்க ஆப்ரஹாம் , மோசஸ் போல மீண்டும் ஒரு தேவதூதன் தோன்றுவார் என அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருந்த காலம் அது. தீர்க்கதரிசிகள் புனித குழந்தை , தோன்றும் இடம், காலம் அனைத்தையும் கூறியிருந்தனர். ” காத்திருந்தேன் காத்திருந்தேன். காலமெல்லாம் காத்திருந்தேன்.காத்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா” ஆவலுடன் வரவேற்க காத்திருந்தனர். பெத்லஹேமில் பிறந்த புனிதப்பிறவி பற்றி யூத குருமார்கள் தங்கள் உள்ளுணர்வு மூலம் அறிந்து கொண்டனர். விஷயம் ஏரோதின் காதுகளில் ஓதப்பட்டது.

ஆத்திரம்.. ஆத்திரம்.. அதெப்படி ..யூதர்களை ஆட்கொள்ள ஒருவன் பிறப்பதாவது.. அதுவும் எனக்கு எதிராக. பிறந்தால் தானே.?. பிறக்க விட்டால் தானே.?பெத்லஹேமில் இருந்த இரண்டு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொன்று குவிக்க கட்டளையிட . ( இயேசுவைக் காப்பாற்ற ஜோசப்பின் குடும்பம் ஏற்கனவே எகிப்து சென்று விட்டது ) இதை அறியாமல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்.ஏரோது இறந்த பின் தான் அவர்கள் மீண்டும் நாசரேத் வந்தடைந்தனர். அப்போது ஏசுவுக்கு வயது எட்டு. வாலிப வயதில் மீண்டும் ஜெருசலேம். நாளெல்லாம் சாலமோன் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.ஜான் என்ற தீர்க்கதரிசியிடம் ஞானஸ்நானம் பெற்ற பின் மக்களிடையே சொற்பொழிவாற்றினார். பல அதிசயங்கள் நிகழ்த்தவே , அவரைத் தேடி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. தங்களது பெருமை ஏசுவால் மறைந்து போவதாக நினைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு அவர்மீது ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு, முள்முடி சூட்டி.சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.இது அனைவருக்கும் தெரிந்ததே..

கிறித்தவ மதம் தோன்றுதல்:

இயேசு ஒரு யூதரே..யூதாசும் யூதரே.. இயேசு இறக்கும் வரை கிறிஸ்தவ மதம் உருவாகவில்லை. இயேசு இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதை யூதர்கள் நம்பவில்லை. அடுத்தது சாலமோன் ஆலயம் மீண்டும் இடிக்கப்படும் என்று அவர் கூறியதை யூதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதெப்படி? தங்களது புனித தேவாலயம் இடிக்கப்படும் என்று கூறுவது ராஜ துரோகம் தானே? அதோடு புனித மதமான யூத மதத்தைக் குறைகள் கூறுபவர் கண்டிப்பாக நாம் எதிர் பார்த்த தேவதூதனாக இருக்கவே இயலாது. இவரை எப்படி இறைத்தூதராக ஏற்றுக் கொள்ள முடியும்? இயேசு உயிர்த்தெழுந்ததையும் , அவர் செய்த புதுமைகளை யும் நம்பியவர்கள் அவரை இறைவனாக வழிபட ஆரம்பித்தனர். ஏழைகளின் துயரம் போக்கிய தேவ தூதனைக் காட்டிக் கொடுத்தவர்கள் என யூதர்கள் பழிக்கப்பட்டனர். யூத மதம் இரண்டாக பிளவுபட்டது.

ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன் கி.பி 312 ல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி யூதர்கள் தலையில் மண்ணையும் இடியையும் ஒரு சேரப் போட்டான். கிறிஸ்தவர்களின் தண்டனைக்கு பயந்தும் , சலுகைகளுக்கு ஆசைப்பட்டும் , உண்மையில் ஏசுவை இறைவனாக நம்பியும் பலர் கிறிஸ்தவர்களாக மாறினர். கிறித்தவ மதம் அமுல் பேபி போல புஷ்டியாக வளர, யூத மதம் தனது உறுப்பினர்களை இழந்து தேய ஆரம்பித்தது.. “நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே..” என பெருமூச்சு விட மட்டுமே.முடிந்தது .தங்களது மீட்பர் இனிமேல் தான் வருவார் என நம்பிய சனாதன யூதர்களால்.

பாலஸ்தீனத்தில் அப்போது இருந்த யூதர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. லட்சம் கூட இல்லை .ஆயிரக்கணக்கில் மட்டுமே இருந்தனர்.அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்களாக மாறியிருந்தது காலத்தின் கட்டாயம்.

இதற்கு பயந்த மிச்சமுள்ள யூதர்கள் பலர் ரோமானிய ஆட்சிக்குட்படாத பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர். சில யூத குழுக்கள் ரோமானியர்களுக்கு எதிராக புரட்சி செய்ததால் , அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டதோடு , மீண்டும் சாலமோன் தேவாலயம் , ஏசு சொன்னது போல் இடிக்கப்பட்டது. மிஞ்சி இருப்பது ஒரே ஒரு சுவர் மட்டுமே.இன்று வரை தங்களது மீட்பர் வருவார்.மீண்டும் ஆலயம் எழுப்பப்படும் என நம்பிக்கையுடன் அதன் அருகில் தொழுகையை நடத்துகின்றனர். இந்த யூதக் குழுக்களின் புரட்சி கடுமையாக ரோமானியரால் ஒடுக்கப்பட்டது.

யூதர்கள் பெர்ஷியர்களுடன் இணைந்து மீண்டும் பாலஸ்தீனத்தை கைப்பற்றினாலும் , ரோமானியர்கள் மீண்டும் போர் தொடுத்ததில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் .மீதமுள்ளஅனைத்து யூதர்களும் விரட்டப்பட்டனர். ரோமானியர்களிடம் அகப்படுவதை விரும்பாத பல யூத குடும்பங்கள் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்டனர். ஜெருசலேம் பகுதியில் யூதர்கள் யாரும் இருக்க அனுமதிக்கப்படவில்லை. ஜுதேயா ( இஸ்ரேல் ) என்ற பெயரும் ஏலியா கேப்டோலினா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இனி ஜெருசலேம், இஸ்ரேல் கிடையாது . அப்பகுதியில் யூதர்கள் சுத்தமாக துடைத்தெறியப்பட்டனர்.

இஸ்லாமின் இறைதூதர் நபிகள் நாயகம்:

கிறிஸ்தவர்களின் மீட்பரை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, யூதர்கள் காத்திருக்க, ஏழ்மையில் உழன்ற அரேபியர்களும் தங்களது மீட்பருக்காக காத்திருந்தனர். அதற்கான காலமும் வந்தது. சிலைகளை வைத்து பூஜித்துக் கொண்டிருந்த அரேபிய குரேஷிகளிடையே நபிகள் நாயகம் தோன்றினார்.இஸ்லாம் என்ற ஒரு மதம் இவரால் உருவாக்கப்பட்டபோது , குரைஷிகள் இவருக்கு எதிராக கிளம்பினர். இந்த குறைஷிகளே.விரட்டப்பட்ட ஆப்ரஹாமின் மகன் இஸ்மாயீலின் வம்சா வழியினர்.

ஏசுவுக்கு எப்படி சாலமோன் தேவாலயமோ அப்படியே நபிகளுக்கு மெக்காவிலுள்ள ‘ க ‘ அபா. அங்கே தொழுதுவிட்டு , அங்கேயே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். அவ்வேளையில் ஜிப்ரில் என்ற இறை தூதர் வந்து அவரது கையைப் பற்றி , அங்கே கோவேறு கழுதை போன்ற சிறகுகளையுடைய வெள்ளை நிற விலங்கின் மீது அழைத்துச் சென்றார். ஜெருசலேமில் உள்ள ஒரு குன்றின் மீது நபிகள் இறக்கி விடப் பட்டார் . கிறித்தவ தேவாலயங்களால் நிரம்பியிருந்த ஜெருசலேம் , இஸ்லாமியருக்கும் புனித பூமியாக வேண்டும் என்ற விதியின் படியே , முகமது தனது காலடியை எடுத்து வைத்தார். பின் வானுலகம் அழைத்துச் செல்லப்பட்டு, இறைவனிடமிருந்து இஸ்லாம் குறித்த முக்கிய பிரமாணங்களைப் பெற்றுக் கொண்டதும், மீண்டும் ஜெருசலேம் வந்து, அடுத்து மெக்காவில் இறக்கி விடப் பட்டார். இவை அனைத்தும் ஒரே இரவில் நடந்தது.

ஒற்றைச் சுவர் ..( அடையாளமிட்டிருப்பது) தூரத்தில் தெரிவது Dome of the Rock.

அந்த குன்றின் பெயர் Dome of the Rock. அங்கே இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலம் ஒன்றை , கலீஃபா உமர் உருவாக்க , அது அவர்களது புனித குன்றானது. இத்துடன் அல் – அக்ஸா என்ற பள்ளிவாசல் கட்டப்பட்டது. இந்த இரண்டு தலங்களும் இணைந்து பைத்துல் முகத்தஸ் என அழைக்கப்படுகிறது. இங்கே முகம்மதுவுக்கு இறையால் அருளப்பட்ட பிரசாரங்கள் அடங்கிய பேழை , அவரது புனித கைத்தடி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இடிக்கப்பட்ட சாலமோன் தேவாலயத்தில் தான் இது கட்டப்பட்டதாக பிரச்சினை இருந்து வருகிறது.( பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்சினை போல )

அல்- அக்ஸா பள்ளிவாசல்.

குறைஷிகளின் தொந்தரவு தாங்காமல் முகமது கி.பி 622 ல் மெக்காவில் இருந்து மதினா சென்றார். அங்கே யூதர்களே அதிகம் வாழ்ந்தனர்.முகமதுவின் பேச்சு , நடவடிக்கைகள் ,அவரை ஒரு இறைத்தூதராக அங்கிருந்த அரேபியர்கள் நம்பி இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டனர்.அக்கம் பக்கத்து நாடுகளில் நபிகள் பற்றிய புகழ் பரவ இஸ்லாம் மதம் வேகமாக பரவ ஆரம்பித்தது.இதை யூதர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களது இறைத்தூதர் எப்போது வருவார்? என்ற ஏக்கம் மட்டுமே அவர்கள் மனதில் உறைந்திருந்தது.

விரிசல் உருவாகிறது :

ஒற்றைச் சுவரின் முன்பு அழுது…பிரார்த்தனை.

ஆரம்ப காலத்தில் அரேபியர்களும் யூதர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். ரோமானியர்களால் விரட்டி அடிக்கப்பட்ட போது , அவர்களைப் பெருந்தன்மையுடன் அரேபியர்கள் ஏற்றுக் கொண்டனர்.ரோமானியர்களுக்கும் , அப்புறம் கிறிஸ்தவர்களுக்கும் பகையாகிப்போன யூதர்கள் , அரேபியர்களுக்கு எந்தவிதத்திலும் எதிரியாகத் தோன்றவில்லை. ஆனால் இஸ்லாம் மதம் அரபு நாடுகளில் புயலாகப் பரவ ஆரம்பித்தது யூதர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. யூதர்களின் எண்ணிக்கையும் , யூத மதமும் காற்று போன பலூனாக சுருங்கிக் போக, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானான இஸ்லாம் திடீரென விஷ்வரூபமெடுப்பது போல் தோன்றியது.. ஆனால் என்ன செய்வது? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறிப் போயினர். நபிகள் யாரையும் மதம் மாறச் சொல்லவில்லை. மாறாக ஜெருசலேம் நோக்கி தொழுகை செய்யுங்கள் என்றார். அறிவில் சிறந்த யூதர்கள், உடல் வலிமை மிக்க அரேபியர்கள் இருவரும் இணைந்து வாழ வலியுறுத்தினார். இரண்டாண்டுகளில் மதீனாவின் மன்னரானார்.

என்னதான் சம உரிமை இருந்தாலும் யூதர்கள் முஸ்லிம்களிடமிருந்து சற்று விலகியே வாழ ஆரம்பித்தனர். பெரும்பான்மையினரான முஸ்லிம்கள் மீது சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தனர்.கி.பி 630ல் மிகப்பெரிய படைதிரட்டிச் சென்று முகமது மெக்காவைக் கைப்பற்றினார்.கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்த வெற்றி.அவரது படையின் விஸ்தீரணத்தைப் பார்த்ததும் குரைஷிகள் சரணடைந்தனர். நபி முகமது அனைவரையும் மன்னித்து அரவணைத்தது மேலும் பலரை இஸ்லாம் நோக்கி இழுத்தது நிஜம் . கி.பி 632 ல் முகமது இறந்த பின் , அபுபக்கர் , பின் உமர் இவர்கள் செய்த போர்கள் மூலம். இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைய , கடைசியில் கலீஃபா உமரது ஆட்சியில் புனித ஜெருசலேம் ( எகிப்தின் பைசான்டிய கிறிஸ்தவர்கள் கைகளில் இருந்தது ) கைகளில் விழுந்தது.அதாவது முஸ்லிம்கள் கையில்.

சிலுவைப் போர்கள்: 1096 முதல் 1250 .

(மேற்கண்ட தொகுப்பில் சிலுவைப் போர்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.)

மூட்டைப்பூச்சி நசுக்குவதுபோல அப்பாவியாக இருந்த யூதர்களை நசுக்கி, இஸ்ரேல் என்ற வீட்டை சுத்தப்படுத்தி வைக்கப்போக , இப்போது முஸ்லிம்கள் கையில் இஸ்ரேல்.. அதுவும் ஏசுவின் பாதம் பட்ட புனித இடமான ஜெருசலேம்!!! ஐரோப்பிய கிறிஸ்தவ அமைப்புகளின் வயிற்றில் அமிலம் சுரந்தது. ஆட்சியாளர்களை விட மதகுருமார்கள், அதற்கும் மேலாக போப் அதிக அதிகாரம் பெற்றிருந்தார்கள்.

இக்கால கட்டத்தில் தங்களது புனித தலமான ஜெருசலேமை தரிசிக்க ஐரோப்பாவிலிருந்து.. சாரை சாரையாக வந்து சென்ற கிறித்தவர்கள். தங்களது நாடு திரும்பியதும் , ஜெருசலேமில் கிறித்தவர்கள் அங்கு ஆட்சி செய்யும் இஸ்லாமியர்களால் துன்பப் படுத்தப் படுகிறார்கள். என்று ( அப்படி ஒன்றும் ..பெரிதாக நடந்துவிட வில்லை ) ஒவ்வொரு விஷயத்துக்கும் கண் காது மூக்கு .. என்னவெல்லாம் வைக்க வேண்டுமோ.. அத்தனையையும் வைத்து கதை பரப்பினார்கள்..

போப் அர்பன் – 2 கிறிஸ்தவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு , மீண்டும் பாலஸ்தீனம் , அதைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகள் மீது போர் தொடுத்து அங்கே ஒரு மிகப்பெரிய கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும். என அறைகூவல் விடுத்தார்.லட்சக்கணக்கான கிறித்தவர்கள் தங்கள் கைகளில் சிலுவைகளை ஏந்தி போர் செய்தனர். கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் இப்போர் நடைபெற்றது.

கிறித்தவர்களின் புனித பூமியான ஜெருசலேமை மீட்டே தீருவது என்ற முடிவுடன் , கிறித்தவ நாடுகள் இணைந்து பல ஆண்டுகளாக போர் தொடுத்தன. முதல் மூன்று சிலுவைப் போர்கள் போல , அடுத்த மூன்று போர்கள் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. வெற்றி தோல்வி என மாறி மாறி வந்து போனது . இறுதியாக கிறிஸ்தவ மன்னனது ஆட்சி ஜெருசலேமில் மீண்டும் உதயமானது. இஸ்லாமிய மன்னர் சலாவுதீன் திட்டமிட்டு நடத்திய போர்களின் மூலம் புனித நகரம் மீண்டும் தக்கவைக்கப் பட்டது .ஜெருசலேமிலிருந்து அதை ஆண்ட கிறிஸ்தவ மன்னனது குடும்பம், எஞ்சியிருந்த சிலுவைப்போர் வீரர்களும் மிகுந்த மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மன்னர் சலாவுதீன் எதிரிக்கும் நன்மை செய்யும் மனிதநேயமிக்கவர்.

இப்போரில் போது ஒரு கொடுமை முஸ்லிம்களோடு , அப்பாவிகளாக ஒதுங்கி வாழ்ந்த யூதர்களும் , சிலுவைப்போர்வீரர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.போர் நடந்து கொண்டிருந்த போதே , எஞ்சியிருந்த யூதர்கள் ( சலாவுதீன் ஆட்சியின் போது வெளியேறிய யூதர்கள் பலர் அவரது அழைப்பை ஏற்று பாலஸ்தீனத்தில் குடியேறியிருந்தனர்.) அனைவரும் ஒட்டு மொத்தமாக யாரும் அறியாத வாறு வெளியேறியிருந்தனர்.

பாலஸ்தீனத்தில் இருந்து கிளம்பிச் சென்ற யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் தங்க ஆரம்பித்தனர்.. தங்களது எதிர் காலம் இருண்டு விட்டதாக நினைத்தார்கள். தங்களுக்கென்று ஒரு தேசம்.அது தங்கள் தந்தையின் தேசம்.அது மட்டுமே கிடைக்க வேண்டும். என்ன விலையென்றாலும்.. அதுவரை பொறு மனமே..வீட்டை வாங்கலாம். . ஒரு நாட்டை எவ்வாறு வாங்குவது? தூணிலும் துரும்பிலும் , கிறித்தவர்களும் , முஸ்லிம்களும் அல்லவா நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.!!

நினைத்தது நடக்க வேண்டும் என்றால்.. முதலில் நம்மை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.தன்னிலையை அடைய கூட்டுக்குள் தன்னை அடைத்துக் கொள்ளும் கூட்டுப்புழுவாய் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டனர். சில தனிப்பட்ட அடையாளங்களுடன் ஒதுங்கி வாழ ஆரம்பித்தனர்.

என்னென்ன முறைகளில் வருமானத்தைப் பெருக்க முடியுமோ , அத்தனையையும் லஞ்சம் கொடுப்பது முதற்கொண்டு. செய்தார்கள். அரசியலுக்குள் நுழைந்து தங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொண்டனர். ஆனால் சொல்லிக் கொள்ளும் படியாக அவர்கள் மீது ஐரோப்பியர்களுக்கு எந்தவித அக்கரையும் இல்லை. ஏசுவைக் காட்டிக் கொடுத்த கும்பல் , சுயநலவாதிகள் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருந்தது.

ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வாழ்ந்த யூதர்கள் அந்நாட்டினருக்கு வேண்டா விருந்தாளிகள். பல வகைகளிலும் அவமதிக்கப்பட்டாலும், தங்களுக்கான சுதந்திர நாட்டைப் பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

தாங்கள், தங்களது இனம், தங்களது முன்னேற்றம் என கடைந்தெடுத்த சுயநலவாதிகளாக இருந்ததால், பல நாடுகள் யூதர்களை வெளியேற்றுவதை, தங்களது இன்றியமையாத கடமை என நினைத்தனர்.1492 ல் ஸ்பெயின், 1497ல் போர்ச்சுக்கல் என அவர்களை வெளியேற்றின. எனவே துருக்கி ஒட்டாமான் பேரரசுக்குட்பட்ட மொராக்கோ, ஹாலந்து, பிரான்ஸ், இத்தாலி என குடிபுகுந்து, எதைப்பற்றிய கவலையுமின்றி, இஸ்ரேல் என்ற நாடு வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் விதைத்து, நம்பிக்கை உரமிட்டு அதை வளர்த்தனர்.

வலது கால் எடுத்து வைத்து…

கி.பி 1512 ல் பாலஸ்தீனம் துருக்கி சுல்தான் வசம் வந்ததுமே.. யூதர்களின் ஒரு குழு, அவரிடம் சென்று, பாலஸ்தீனத்தில் தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் மீண்டும் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்த அனுமதி பெற்றனர்.இருவரும் ஒரு தந்தை வம்சத்தில் வந்தவர்கள் அல்லவா? தாராளமாக தங்குங்கள்.என்றதும் சந்தோஷமாக ஆங்காங்கே இருந்த யூத கூட்டங்கள், தங்களது கனவுலகமான பாலஸ்தீனத்தில் அடியெடுத்து வைத்தனர்.சிறு சிறு நிலங்களை கையகப்படுத்தி , விவசாயம், கால்நடைகள் , சிறு வியாபாரிகள் என சிறிது சிறிதாக முன்னேறினர்.ஒரு கால கட்டத்தில் அரேபியர்கள் நிலங்கள் யூதர்கள் கைக்கு வந்தது. நிலமெல்லாம் சொந்தம் நாடு மட்டும் சொந்தம் இல்லை . காலம் கனியும்..காத்திருந்தனர்.

யூதர்களின் காலன் ஹிட்லர்:

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரது கைங்கர்யத்தால் பல லட்சம் யூதர்களும் , ரஷ்யர்களது கரங்களால் சில லட்சம் யூதர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் காய்களாய் சிதறி ஓடிய யூதர்களை, மதம் பிடித்த நாஜிகள் , தரையில் தேய்ப்பது போல் தேய்த்து நசுக்கினர். இதனால் மற்ற உலக நாடுகளின் அனுதாபத்தை யூதர்கள் சம்பாதித்திருந்தனர். அறிவில் சிறந்த யூதர்களை சில நாடுகள் தங்களது முன்னேற்றத்திற்கு பயன்படுத்தியும் கொண்டன.

கிரஹப்பிரவேசத்திற்கு முன்பே குடியேற்றம்:

பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம்.

போர் முடிந்ததும் புதிய நாடு யூர்களுக்காக உருவாக்கப்படும் என பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது . எனவே கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீன பகுதிகளில் குடியேற ஆரம்பித்து, அங்கிருந்த அரேபியர்களின் வறுமையை பயன்படுத்தி யூதர்கள் நிலங்களை அபகரித்தனர். அந்நேரத்தில் பிரிட்டனின் காலனி நாடாக பாலஸ்தீனம் இருந்தது. போர் முடிவுக்கு வந்ததும் பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு , இஸ்ரேல், பாலஸ்தீனம் , ஜோர்டான் என ஆகியது.

இஸ்ரேலில் உள்ள யூதர்கள் மற்றும் பாலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்கள் அந்நாட்டிலேயே தங்கலாம்.. பிரச்சனைகளின் முக்கிய புள்ளி ஜெருசலேம் ஐக்கிய நாடுகள் சபை கட்டுப்பாட்டில் இருக்கும். அங்கே அனைவரும் வரலாம்.

இஸ்ரேல் அரசு நாடுகள் போர் 1948:

இஸ்ரேல் தேசம் அறிவிக்கப் பட்ட மறுநாளே அரபு நாடுகளின் ராணுவம் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. அதுவரை இல்லாத அளவுக்கு யூதர்கள் மீது வெறுப்பை உமிழ காரணங்கள் நிறையவே இருந்தன. சிலுவைப் போர்கள் நடைபெற்ற போது , அரேபியர்கள் அனைவரின் ஆதரவுடன் இருந்தாலும் , யூதர்கள் அப்போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. திடீரென அனைவரும் அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள்.ஆனால் பாலஸ்தீனியர்கள் மட்டும் வாழ்வோ சாவோ தங்களது தேசத்திலேயே அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் மீண்டும் திரும்பி வந்து அரேபியர்கள் நிலங்களை தந்திரமாக அபகரித்துக் கொண்டனர். இதனால் யூதர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த அரேபிய நாடுகள் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர் முசோலினிக்கு தங்களது ஆதரவை இரண்டாம் உலகப் போரின் போது தெரிவித்தனர். தோற்கப் போகும் குதிரையின் மீது நம்பிக்கை வைத்தது அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சுமார் ஒரு வருட காலம் இஸ்ரேல் அரேபிய தேசங்கள் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தத்தை அறிவித்தது. இஸ்ரேல் முதலில் தற்காப்பு போரில் இறங்கினாலும் பின் சுதாரித்துக் கொண்டு அதிரடியில் இறங்கி தாக்கியது.

ஐ.நா.வின் அறிக்கையின் படி ஜெருசலேம் பிரச்சனைக்குரிய பகுதி. எனவே அது ஐநாவின்பொறுப்பில் இருக்கும். ஆனால் போரின் முடிவில் எகிப்து ராணுவம் காஸா பகுதியில் இருந்தது.மேற்கு கரை முழுவதிலும் டிரான்ஸ் ஜோர்டான் கால் பதிந்திருந்தது. இஸ்ரேலின் ராணுவம் பாலஸ்தீன பகுதியில் இருந்தது. ஐநாவின் போர் நிறுத்த அறிவிப்பால் , எதுவரை ஒரு நாட்டின் ராணுவம் இருந்ததோ, அதுவரை அது அந்த நாட்டிற்கு சென்று விடும். பிடிபட்ட இப்பகுதிகள் முழுவதும் பாலஸ்தீனப் பகுதிகள். போரின் முடிவில் அனைத்தையும் இழந்த பாலஸ்தீனியர்கள் தெருவுக்கு வந்தது தான் உண்மை. கிழக்குப் பகுதி ஜெருசலேம் ஜோர்டானிடமும் , மேற்குப் பகுதி ஜெருசலேம் இஸ்ரேலிடமும் சென்றது. காசா பகுதி எகிப்து வசம் சென்றது.

எனவே ஒப்பந்தத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஜெருசலேம் வருவதிலோ, ஆலயங்களில் வழிபாடு நடத்துவதிலோ இரு அரசுகளும் எந்தவித பிரச்சினையும் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

ஆனால் நாளடைவில் ஜொர்டானின் கிழக்கு ஜெருசலேமில் யூதர்கள் வர தடை விதித்தனர். எனவே அங்கிருந்த யூதர்கள் இஸ்ரேல் நோக்கி நகர, பதிலுக்கு இஸ்ரேல் அரேபியர்களை அவர்களது புனிதத் தலமான ஜெருசலேமுக்குள் வர தடை செய்தது.

அனைத்து அரபு தேசங்களும் தங்கள் நாட்டிலுள்ள யூதர்களை வெளியேற்றின.

அரபு தேசங்களும், இஸ்ரேலும் கண்டு கொள்ளாமல் விட்டவர்கள் பாலஸ்தீனர்களே..

இதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் ஜோர்டான் மற்றும் எகிப்து மீது போர் தொடுத்து , அவர்கள் வசம் இருந்த பாலஸ்தீன பகுதிகளை அபகரித்துக் கொண்டது. இறுதியாக அனைத்து நாடுகளும் கூடி பேசி , குறைந்தது இரண்டு ஆண்டுகள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த மக்கள் தங்களது நாட்டிற்கு திரும்பலாம்…என்றனர். போர் பாலஸ்தீனத்தில் நடை பெற்றதால் பாதுகாப்பு கருதி இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி பிற பகுதிகளில் அதாவது முகாம்களில் தங்கி இருந்தனர்.

அம்புக் குறியிட்ட காசா பகுதியில் சுருங்கிப் போன பாலஸ்தீன அகதிகள்.. அதிலும் இஸ்ரேல் அடக்குமுறைகள்.

இப்போது சொந்த தேசத்திற்கு செல்லலாம் என்றால் அப்படி ஒன்று இருந்தால் தானே???

உலகெங்கும் வாழும் யூதர்களை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ , பிற நாட்டு மக்களை அமெரிக்கா எப்படி ஏற்றுக் கொள்கிறதோ, அது போல பாலஸ்தீன முஸ்லிம்களை அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. அப்படி போடு அருவாளை.. சொன்னது இஸ்ரேல்.

அரபு நாடுகள் இதை ஏற்றுக்கொள்ள வில்லை.அவைகளுக்கு நியாயமான பல பொருளாதார சமூகப் பிரச்சினைகள் இருந்தன.

கடைசியில் தான் பிடித்த பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் விட்டுக் கொடுத்து விட்டால் சரியாகி விடும். ஆனால் கோரிக்கை எழுமுன் இஸ்ரேல் வேகமாக தலையாட்டி மறுத்து விட்டது.

ஒண்ட வந்த பிடாரி..ஊர் பிடாரியை விரட்டிய கதை நடந்தது. பாலஸ்தீனியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல நாடுகள் வெறிபிடித்த நாய்களாய் விரட்டிய போது, ஓடிவந்த யூதர்களை அரவணைத்து ஏற்றுக் கொண்டவர்கள் இவர்களே.இருவரும் ஒரே மூதாதையர் வழி வந்தோர்.எனவே இரு இனங்களும் ஒற்றுமையாக வாழ நபிகள் நாயகம் வேறு வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் இப்போது அனைத்தையும் மறந்து, தாங்கள் வாழ்ந்த பூமியை அபகரித்ததோடு, தங்களது புனித தலமான அல்- அக்ஸா மசூதிக்குள் நுழையும் உரிமையையும் பறித்துக் கொண்டதை எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் மன்னிக்க தயாராக இல்லை.

போராட்டம், யுத்தக் குழுக்கள் மூலம் தாக்குதல்.சுமுகமான பேச்சு வார்த்தை எதிலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. உரிமை என்பது முற்றிலும் பறிக்கப்பட்டது. இல்லாத ஊருக்கு அவர்கள் வழி தேடிய கதையானது.

நாடில்லாமல் அலைந்து, பலராலும் துரத்தப்பட்டு .. ஓடி ஓடி அலைந்த வலியை பூரணமாக யூதரைத் தவிர யாரும் அறிந்திருக்க முடியாது. இருந்தும் அதே வலியை தங்களை சகோதரர்களாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நினைத்து வாழ்ந்த பாலஸ்தீனர்களுக்கு எப்படி இவர்களால் கொடுக்க முடிந்தது?

ஆம்.. பலரும் நினைத்தது போல யூதர்களுக்கு தனது இனம், தன் மதம், தனது நாடு அனைத்திலும் உயர்ந்தது. தான் பெரியவன் என்ற அகங்காரம் , சுயநலம்.. இதைத் தவிர காரணம் என்ன இருக்கப் போகிறது?

அல்- அக்ஸா மசூதியைக் காவல் காக்கும் பொறுப்பு இன்று வரை பாலஸ்தீனிய இளைஞர்கள் வசமே உள்ளது. ஆயினும் அந்த மசூதிக்கருகே உள்ள ஒற்றைச் சுவர்.. சாலமோன் தேவாலயத்தின் எச்சம்.எனவே இந்த மசூதி இடிக்கப்பட்ட சாலமோன் தேவாலயத்தில் அமைந்துள்ளது என்று..இன்றுவரை .. தொடரும் கலவரங்கள்.. அதை இடித்து மீண்டும் தேவாலயம் எழுப்பியே தீருவது என்ற எண்ணத்தை மனதில் வைத்து அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்றது…

பாலஸ்தீனியர்கள் நிலை??? நாடே இல்லை. புனிதத் தலம் எப்படி கிடைக்கும்?? ஏழை சொல் அம்பலம் ஏறாது..

SHARE