காவல்துறை உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

224

காவல்துறை உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு ஜனாதிபதி இந்த உடனடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வவுனியா பிரதிக் காவல்துறை மா அதிபர் காரியால விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த காவல்துறை சார்ஜன்டே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குணதிலக்க என்ற சார்ஜன்டே இவ்வாறு காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். “புதையல் தோண்டுதல் தொடர்பில் வாக்கு மூலம் அளித்த காவல்துறை சார்ஜன் எங்கே?” , “ஜனாதிபதி மாமா எங்களது தந்தையை தேடித் தாருங்கள்” என்ற தலைப்பில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து ஜனாதிபதி இது குறித்து காவல்துறை மா அதிபருக்கு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 7ம் திகதி குறித்த காவல்துறை உத்தியோகத்தர் வீட்டுக்கு செல்வதாக வவுனியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற போதிலும் இதுவரையில் வீடு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உயர்காவல்துறை அதிகாரியும் புதையல் தோண்டல் நடவடிக்கையுடன் தொடர்புபட்டிருந்தமை குறித்து இந்த உத்தியோகத்தர் சாட்சியமளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE