கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அமைதியாக தொடங்கியது கதவடைப்பு போராட்டம்:

248

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு கோரி வடக்கு கிழக்கில்  அமைதியான முறையில் கதவடைப்பு போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.

கிளிநொச்சி நகரத்தில் கடைகளை பூரணமாக மூடி கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார். இதேவேளை கிளிநொச்சி நகரம் வழமைக்கு மாறாக வெறிச்சோடிக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மிகவும் குறைவான போக்குவரத்துக்களே வீதியில் இடம்பெறுவதாக குறிப்பிட்ட எமது பிராந்திய செய்தியாளர் வைத்தியசாலை போன்ற அடிப்படை தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தனது செய்தி பதிவில் குறிப்பிடுகிறார்.

வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், வங்கி நிறுவனங்கள் போன்றவை இன்று தமது செயற்பாடுகளை நிறுத்தி வைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் போராட்டத்தை வலிமைப்படுத்தியுள்ளன.

யாழ்ப்பாண நகரத்திலும் கடைகள் மூடப்பட்டு கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மிகவும் குறைவான அடிப்படை போக்குவரத்துச் சேவைகளே இடம்பெறுவதாக எமது யாழ் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை வடகிழக்கின் ஏனைய பிராந்தியங்களிலும் அமைதியான முறையில் கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றன. இதுவரையில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறாத முறையில் ஜனநாயக ரீதியான போராட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

SHARE