கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் ..!

168

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் குடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பால்குடம் எடுத்தல், பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், ஆட்டோ இழுத்தல், அந்தரத்தில் தொங்கி அம்மனுக்கு மாலை அணிவித்தல்,காரை முள் மிதித்தல், மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றைத் தொடர்ந்து இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கொதிக்கும் எண்ணெயில் கைகளால் வடை சுட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ஏழு வடைகள் அவ்வாறு சுடப்பட்டன. இந்த வடைகளைச் சாப்பிடும் தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த வடைகளை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி நிலவியது.

அதன்படி, முதல் வடை ரூ.11100க்கு ஏலம் போனது. அதனைத் தொடர்ந்து முறையே 2வது வடை ரூ.3700, 3வது வடை ரூ.4400 என மொத்தம் 7 வடைகளும் ரூ.26,600க்கு ஏலம் போனது. பின்னர், மாலை 6 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.vadai-festival

SHARE