சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து 40 இலட்சம் தமிழர்களை அவர்களது தாயக மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கி சிங்கள பௌத்த பேரினவாதம்

290

 

வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள பௌத்த பேரினவாதம் எப்போதும் தனது பேரின வெறியில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது. மேற்குலகின் போக்கிரித்தனத்தால் உருவான நல்லிணக்கப் போர்வையைப் போர்த்திச் சிங்கள பௌத்த பேரின வெறியிலிருந்து வெளிக்கிளம்பும் பிணவாடையை மறைத்துவிட முடியாது. எமக்குவப்பில்லாத வரலாற்றுச் சூழமைவில் பேரம் பேச வல்ல எல்லா வலுவையும் இழந்து பேதலித்த நிலையில் பதுங்கிப் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் மக்களிற்கு ஒளிமயமான வாழ்க்கையை உருவாக்க அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து சாதித்துக் காட்டப் போவதாகச் சொல்லுவது அரசியற் போக்கிரித்தனத்தின் உச்சமே என்பதில் மறுபேச்சுக்கிடமில்லை. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தைக் கடத்துகின்றதே தவிர, எவ்வளவோ அருஞ் சாதனைகளை அந்த இடத்திலிருந்தால் செய்திருப்போம் என்று சொல்லும் மக்களால் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கவர்ச்சிகரமான அரசியற் சொற்பொழிவுகளைப் புலுடா என்று தான் வகைப்படுத்த வேண்டும். ஏனெனில் உலகின் மாபெரும் அதிசயமாக மைத்திரி, ரணில் போன்ற சிங்களத் தலைவர்களின் மனநிலை அசோகச் சக்கரவத்திக்கேற்பட்ட மனமாற்றம் போல மாறினாலும் கூட, சிறிலங்கா அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்ட விதத்தின் விளைவாக, அவர்களால் தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுத்து நிறுத்தவியலாது.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களுக்கெதிரான அதனது வக்கிர வளர்ச்சியில் ஆர்முடுக்கலான பரிணாம வளர்ச்சியை எய்தியே வந்துள்ளது என்பதை வரலாற்றை மீள் வாசிக்குட்படுத்தி ஐயம்திரிபறப் புரிந்துகொள்வதோடு அதனது இயக்கம் இனியும் எவ்வாறு அமையுமென்பதை உறுதியாக விளங்கிக்கொள்ள இப்பத்தி உதவுமென்ற நம்பிக்கையுடன் எழுதப்படுகின்றது.

வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கையின் தெற்கு மற்றும் மத்தியப் பிரதேசங்களில் சிங்களவர்களும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்குப் பிரதேசங்களில் தமிழர்களும் வாழ்ந்து, ஆட்சி புரிந்து வருகின்றனர். தமக்கேயுரிய இன, மொழி, மத பண்பாட்டு அடிப்படையில் தமிழர்கள் உயரிய நெறியுடன் தமது மண்ணில் அறவாழ்வு நடத்தி வந்தனர். ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புடன் தமிழரின் வாழ்விடத் தொடர்ச்சி கணக்கெடுக்கப்படாமல் அவர்களின் நிருவாக வசதிக்கேற்றாற் போல ஆட்சிமுறைமை மாற்றமடைந்தது. சிங்கள தேசியம் அநாகரிகதர்மபால போன்றோரால் ஒரு அரசியற் சமூகமாகத் தன்னை வெற்றிகரமாகக் கட்டியமைக்கும் வரை, கொழும்பு வாழ் தமிழ் மேட்டுக் குடிகள் அவர்களின் நலன்களிற்காகத் தமிழரின் அரசியலைக் குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் அதிகார இலாபம் ஈட்டி வந்தனர். சிங்கள தேசிய வாதம் அரசியற்பரிமாணம் பெற ஆரம்பித்ததன் நேரடித்தாக்கத்தை இந்தக் கொழும்பு வாழ் மேட்டுக்குடிகள் உணர ஆரம்பிக்கும் வரை தமிழர் என்ற தனித்தன்மையான சொல்லை ஒரு சொல்லுக்கேனும் தமது சிந்தையில் நிறுத்தாமல், அதிகாரத்தில் பங்கு கேட்கும் அவர்களின் மேட்டுக்குடி ஆதிக்கப் போக்குத் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

சிங்கள தேசியத்தின் எழுச்சியால் தமது அதிகார அரசியல் ஆட்டம் காணுவதை உணர்ந்த கொழும்பு வாழ் தமிழ் மேட்டுக்குடிகளின் பிரதிநிதிகளில் ஒருவரான சேர். பொன்.அருணாசலம், அவர்களது வர்க்க நலனுக்காகவேனும் 1920 இல் தமிழர் தேசியவாத எழுச்சியைத் தோற்றுவித்தார். 1920 இல் அவர் காலமாக அந்தத் தேசியவாத எழுச்சியும் தேக்க நிலைக்கு வந்துவிட்டது.

1931 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டொனமூர் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் இலங்கைத்தீவில் எண்ணிக்கையளவில் சிறிய தேசிய இனங்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய வகையில் இன-பிரதேச ரீதியிலான அரசியல் ஏற்பாடுகளைச் செய்யாமல், தொகுதிவாரித் தெரிவு முறையில் சர்வசன வாக்குரிமை கொண்டுவரப்பட்டமையானது சிங்களப் பேரினவாத பெரும்பான்மையினரால் தமிழர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை நசுக்குவதற்கான ஏற்பாடானது அரசியலமைப்பினூடாக உறுதியாக்கப்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி நடக்கவிருந்த தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி கண்டி பேரின்பநாயகம் தலைமையிலான யாழ்ப்பாண மாணவர் காங்கிரசானது (Jaffna Students Congress) பல போராட்டங்களைச் செய்தது. ஆனால் G.G.பொன்னம்பலம் இவ்விடயத்தில் தமிழ் மக்களுக்கு மாபெரும் இரண்டகம் இழைத்து தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மந்திரி சபை உருவாக்கத்திற்குப் பெரிதும் பங்காற்றினார். இதில் வெற்றியீட்டிய D.S.சேனநாயக்க வேளாண்துறை அமைச்சராகப் (Minister of Agriculture) பொறுப்பேற்று தமிழர்களின் நிலங்களை அரச வளங்களைப் பயன்படுத்தி வன்கவர்ந்து தமிழர் தாயக நிலங்களை சிங்களமயமாக்கினான்.

1947 இல் ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டுப் போகும் நோக்கில் வடிவமைத்த சோல்பரி அரசியலமைப்பு சிங்கள மேலாதிக்கத்திற்கு எவ்வளவு மோசமாக அடித்தளமிடுகின்றது என்று கோடிட்டுக் காட்டி முழுமூச்சாக எதிர்த்து 50- 50 பிரதிநிதித்துவம் கேட்ட G.G. பொன்னம்பலம் பின் இளகுநிலை ஒத்துழைப்பு என்பதாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இலங்கையின் முதற்பிரதமராகப் பதவியேற்ற நாயக்கர் வம்சாவழியான D.S. சேனநாயக்காவுக்கு ஆதரவு வழங்கி அவனது அமைச்சரவையில் 1948 இல் அமைச்சுப் பதவியையும் பெற்று முழுத் தமிழர்களையும் முட்டாள்களாக்கினார்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததும் முதற்கட்ட தமிழினக் குரோத நடவடிக்கையாக மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து தமிழர்களின் இன விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் D.S.சேனநாயக்காவின் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவழித்து ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத கறையை G.G.பொன்னம்பலம் என்ற கொழும்பு வாழ் மேட்டுக்குடி அரசியல்வாதி ஏற்படுத்தினார். இதனால் வெட்கமும் அவமானமும் சீற்றமுமுற்ற தமிழ் அரசியல்22 தலைமைகள் 1949 இல் பின்னாளில் தமிழரசுக் கட்சி என்று பெயர்மாற்றத்திற்குட்பட்ட சமஸ்டிக் கட்சியைத் தந்தை செல்வா தலைமையில் தொடங்கினார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தமது செல்வாக்குக் குன்றிவிடுமென்று கிலிகொண்ட S.W.R.D.பண்டாரநாயக்கா ஐ.தே.க வுக்குப் போட்டியான ஒரு கட்சியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்குவதற்காகத் தனிச் சிங்களச் சட்டத்தினைக் கொண்டு வரப்போவதாக சிங்கள மக்களிற்கு வாக்குக்கொடுத்து அதன்படி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனே தனிச் சிங்களச் சட்டத்தை 1956 இல் கொண்டு வந்தான். D.S.சேனநாயக்க 10 இலட்சம் தமிழர்களை அரசியல் ஏதிலிகளாக்கி விட்டுச் செல்ல, S.W.R.D.பண்டாரநாயக்கவோ தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து 40 இலட்சம் தமிழர்களை அவர்களது தாயக மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர்களுக்கெதிரான வக்கிர வளர்ச்சியை உறுதிப்படுத்தினான். இதை எதிர்த்து அமைதி வழியில் காலி முகத்திடலில் போராடிய தந்தை செல்வா தலைமையிலான தமிழர்கள் மீது சிங்கள இனவெறிக் காடையர்களின் வெறியாட்டத்தை பண்டாரநாயக்கா ஏவினான். பின்னர் 1956 இல் கல்லோயா கலவரத்தைத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துத் தமிழர்களை வகை தொகையின்றிக் கொன்றொழித்தான் பண்டாரநாயக்கா. நிலைமை மிக மோசமடைவதைக் கண்ட பண்டாரநாயக்கா தந்தை செல்வாவுடன் பண்டா- செல்வா உடன்படிக்கை என்றழைக்கப்படும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டான். எனினும் தனிநாட்டிற்கான முதற்படி இதுவென பொய்ப் பரப்புரை செய்த J.R.ஜெயவர்த்தன கண்டி தலதா மாளிகை நோக்கி நடைப்பயணம் செய்து சிங்கள பௌத்த பேரின பூதத்தை இன்னும் வெறி கொள்ளச் செய்ய 300 பௌத்த பிக்குகளின் முன்பு அந்த உடன்படிக்கையைக் கிழித்துப் போட்டான் பண்டாரநாயக்கா. எனினும் தமிழர்களுடன் உடன்படிக்கைக்குச் சென்றமைக்காகவும் 1943 இல் ஜே.ஆர் சிறிலங்காவின் அரசவையில் முன்மொழிந்த சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்கா எதிர்த்ததாலும் அவன் எவ்வளவு சிங்கள வெறியாட்டம் ஆடியும் அவன் மீது பௌத்த பிக்குகள் சந்தேகம் கொள்ள 1959 இல் பௌத்த பிக்குவினால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தனது கணவனின் இறப்பின் பின்பு 1960 இல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிப் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது இந்தப் பதவிக்காலத்தில் சிங்கள “சிறி” யினை வாகன எண் பதிவில் கட்டாயமாக்க, இதனை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வா தலைமையிலான தமிழர்கள் தமிழ் முத்திரை வழங்கினர். இதனால் தந்தை செல்வாவை வீட்டுக் காவலில் வைத்த சிறிமா ஏனைய சமஸ்டிக் கட்சித் தலைவர்களை பனாகொடை இராணுவ முகாமில் அடைத்து வைத்தார். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 60- 80% ஆக அரச பணியிலிருந்த தமிழர்களின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் 8- 12% ஆனது. மேலும் 100% சிங்களவர்களைக் கொண்ட சிங்கள இராணுவமும் வெறும் 2% மட்டுமே தமிழர்களைக் கொண்ட சிங்கள பொலீசும் உருவாக்கப்பட்டது.

சிறிமாவின் மிலேச்சத்தனமான சிங்கள வெறியாட்ட நடவடிக்கைகளால் கொதித்துப் போயிருந்த தந்தை செல்வா தலைமையிலான தமிழ்த் தலைமைகள் டட்லி சேனநாயக்காவுடன் ஒரு உடன்படிக்கை செய்வதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியினால் 1965 இல் டட்லிக்கு ஆதரவு வழங்க பிரதமரான டட்லி பின்பு தான் கையெழுத்திட்ட டட்லி– செல்வா என்றழைக்கப்படும் உடன்படிக்கையைக் கிழித்துப் போட்டான்.

இதன் பின்னர் இடதுசாரிகளின் ஆதரவுடன் 1970 களில் ஆட்சிக்கட்டிலுக்கு சிறிமா வந்தார். இனரீதியில் சிங்கள மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக உள்நுழைக்கும் நோக்கில் சிறிமா கல்வியில் தரப்படுத்தல் எனும் திட்டத்தைக் கொண்டு வந்தார் (இன விடயத்திற்கு புறம்பாகச் சென்று இத்தகைய கல்விக் கொள்கையை ஒரு சமூக அறவடிப்படையில் மாற்றுக் கோணத்தில் பார்க்கும் பார்வை இப்பத்தி எழுத்தாளருக்கு உண்டு என்பதை இங்கு சுட்டும் அதேவேளை இது குறித்து ஒரு பத்தி வேறு தலைப்பின் கீழ் பின்னர் எழுதப்படும் என இங்கு குறிப்பிடப்படுகிறது). இந்தக் கல்விக் கொள்கைக்கு எதிராக அறவழியில் அமைதியாகப் போராடிய தமிழ் மாணவர் பேரவையினர் மீது அரச பயங்கரவாதத்தை சிறிமா ஏவிவிட்டார். மாணவர்களைக் கைது செய்து கொடும் சிங்களச் சிறைகளில் விசாரணை இன்றித் தடுத்து வைத்து சிங்கள வெறியாட்டத்தைத் தமிழ் மாணவர்கள் மீது தொடர்ந்தார் சிறிமா. அத்துடன் 1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியலமைப்பைக் கொண்டு வந்து சோல்பரி அரசியலமைப்பில் பெயரளவுக்கேனும் இடம்பெற்றிருந்த 29ம் சரத்திலுள்ள சிறுபான்மையினருக்கான காப்பீட்டை இல்லாதொழித்ததுடன் அரசியலமைப்பு ரீதியாகப் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்தார்இவ்வாறாக தமிழ் மக்களை அரசியலமைப்பு ரீதியில் இரண்டாந்தர குடிமக்களாகிச் சிங்கள வக்கிர வளர்சியை ஆர்முடுக்கினார் சிறிமாஇதன் தொடர்ச்சியாக உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதன் மீது அரச பயங்கரவாதத்தை ஏவினார் சிறிமா.

தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என 1976- வைகாசி– 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையைத் தமிழ் அரசியற் தலைவர்கள் முன்வைத்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் குறிப்பிட்ட தனியரசுக் கோரிக்கைக்கான மக்களாதரவைக் காட்டுவதற்காகவே தாம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் பங்கேற்பதாகக்  குறிப்பிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம், அந்தத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஈட்டி சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரான பின்பு, J.R.ஜெயவர்த்தனவால் 1977, 1981 இல் பாரிய இனப்படுகொலையைச் செய்து முடித்த பின்னர் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை 1981 இல் ஏற்றுக்கொண்டு தமிழீழத் தனியரசு நோக்கி முன்னேறிய ஈழத்தமிழர் அரசியலை பொறுப்புணர்வில்லாமல் பின்தள்ளி தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தினார்.

ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியும் என்றளவில் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பை ஏற்படுத்தி அனைத்து அதிகாரமும் படைத்த சிங்கள அதிபராகப் பதவியேற்ற J.R.ஜெயவர்த்தன தமிழின அழிப்பை சகல தளங்களிலும் ஆர்முடுக்கி விட்டான். 1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறைவேற்றிஅப்பாவித் தமிழ் இளைஞர்களை வகை தொகையின்றி விசாரணையில்லாமல் சிறையிலடைத்தான். தொடர்ந்து 1981 இல் தமிழரின் அறிவியற் சொத்தாகவும் வரலாற்று ஆவணக் காப்பகமாகவும் திகழ்ந்த யாழ் நூல்நிலையத்தை அதில் இருந்த 95,000 கிடைத்தற்கரிய நூல்களுடனும் ஓலைச் சுவடிகளுடனும் சேர்த்து J.R.ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசு திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கியது. இதன் தொடர்ச்சியாக 1983 ஆடி மாதம் தமிழர் மீது தீவளாவிய ரீதியில் இனவழிப்பு வன்முறை சிங்கள அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு ஏவிவிடப்பட்டது. இதில் 2000 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட, பல பெண்கள் பலாத்காரத்திற்குட்பட, குழந்தைகள் கொதிக்கும் எண்ணைய்த் தாச்சியில் போடப்பட, பல மில்லியன் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட, 1 இலட்சம் பேர் சொந்த நாட்டில் ஏதிலிகளாக, 40,000 பேர் கடல் கடந்து ஏதிலிகளாகினர்.

இதையடுத்துஅரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவது சரத்துப்படி சிறிலங்காவின் ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் ஏற்று உறுதிமொழி வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரும் என்றாகஅதனை நிராகரித்து விட்டுத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் இந்தியாவிற்குத் தஞ்சம் புகுந்தனர்.

ஜே,ஆரின் பின்னர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிரேமதாசவோ இந்திய கொடும் படைகளை இலங்கைத் தீவிலிருந்து அகற்றுவதற்குத் தமிழரோடு இணைந்து வேலை செய்வதாகச் சொல்லிக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கண்டுகொள்ளாமல் பௌத்த பிக்குகளின் சொற்கேட்டுத் தொடந்து ஆடி வர அவரின் இறப்பின் பின்பு சிறிலங்காவின் சனாதிபதியான டி.பி.விஜயதுங்க பௌத்த சங்கத்தினரின் செல்லப்பிள்ளையாகவிருந்து எல்லா சிங்கள ஆட்சியாளர்களையும் விஞ்சியவனாக இலங்கைத் தீவில் இனச் சிக்கல் என்று ஒன்று கிடையாதெனவும் பயங்கரவாதச் சிக்கல் என்ற ஒன்று மட்டுமே உண்டெனவும் கூறி வந்தான்.

1994 ஆம் ஆண்டுஆட்சிக்கட்டில் ஏறிய நாயக்கச் சூழ்ச்சியின் வாரிசான சந்திரிக்கா அம்மையார் தன்னைச் சமாதனப் புறாபோல் பாசாங்கு செய்து 1994 ஐப்பசியில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி 6 மாதமாக எந்தவித முன்னேற்றமும் இன்று இழுத்தடித்து பாரிய போரிற்கான ஒழுங்குகளைச் செய்தார். தனது மனங்கவர்ந்த அன்புக்குரியவனான லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழினத்திற்கு இரண்டகம் செய்த கொடியவனை வெளிவிவகார அமைச்சராக்கி தமிழின உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாக பரப்புரை செய்தவாறே அதிகாரப் பரவலாக்கம் என்ற தனது தீர்வுப் பொதியை சந்திரிக்கா கொண்டு வர அதனை அப்போதைய பிரதமராகவிருந்த ரணில் நாடாளுமன்றில் வைத்துக் கிழித்துப் போட்டான். பின்பு புலிகளின் மீதான தடையை நீக்கி இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை வடக்குகிழக்கினைத் தாயகமாகக் கொண்டு வாழும் தமிழர்களுக்குக் கொடுக்கப் போவதாக பாசாங்கு செய்து 2001 இல் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற ரணில் அமைதிப் பேச்சில் ஈடுபடுவதாகக் கூறி பன்னாட்டுச் சதிவலையைத் தமிழர்கள் மீது ஏற்படுத்தினான். எனினும் ரணில் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடுவதைக் காரணம் காட்டி ஜே.வி.பி மற்றும் பௌத்த மதகுருமார்கள் போன்ற சிங்கள பௌத்த பேரினவாத வெறியர்களின் ஆதரவைத் திரட்டியவாறே தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திச் சந்திரிக்கா பாராளுமன்றைக் கலைத்து மீண்டும் தேர்தல் நடத்தி வெற்றியீட்டினார்முதன் முதலில் பௌத்த பிக்குகளையும் தேர்தலில் போட்டியிட வைத்து என்றுமில்லாதவாறு பௌத்த பேரினவாதத்தினை பாராளுமன்றுக்குள்ளும் நேரடியாகக் களமிறக்கினார் சந்திரிக்காஇதில் தனது உள்ளங் கவர்ந்த அன்பரான லக்ஸ்மன் கதிர்காமரை பிரதமராக்கத் துடித்த சந்திரிக்கா பௌத்த சங்கத்தின் பாரிய எதிர்ப்புகளின் விளைவாக மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார்.

பின்னர் சனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி சனாதிபதியான மகிந்த ராஜபக்ச காலத்தில் நீதித்துறையைக் கையில் வைத்திருந்த மகிந்த 13 ஆவது திருத்தச் சட்டம் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அது திணிக்கப்பட்ட உடன்படிக்கை எனவும் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தைத் தீர்ப்புச் சொல்ல வைத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர்களுக்கெதிரான வக்கிர வளர்ச்சியில் இன்னும் வேகமாகப் பங்கெடுத்தான்.

மேற்குலக– இந்தியக் கூட்டுச் சதியால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட நல்லிணக்க அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற இன்னுமொரு சிங்கள பௌத்த பேரினவாத இணையாட்சியானது தனது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்னுரையில் இடம்பெற்ற தேசிய இனச் சிக்கலிற்கான தீர்வுபுதிய அரசியலமைப்பு போன்ற விடயங்களை கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புகளைக் காரணம் காட்டி நீக்கியுள்ளதுமுன்னுரையிலேயே இல்லாத ஒன்று தொடர்பாக நாம் “அதைத் தந்து ஏமாற்றி விடுவார்களோ இதைத் தந்து முடக்கி விடுவார்களோ” என்றெல்லாம் எண்ணிப் பீதியடையத் தேவையில்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் ஒரு துரும்பைத் தானும் தமிழர்களுக்குத் தீர்வென்று சொல்லிக் கொடுக்காது. அது தமிழர்களுக்கெதிரான தனது வக்கிர வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சியடைந்தே வந்துள்ளது. வருகிறது. வரும். இதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்துக்கொண்டார்கள்.

இதனாலே தான் “தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் விலகினால் என்னை என் மெய்ப்பாதுகாவலர்களே சுடலாம்” என்று உறுதியுடன் கூறி தமிழீழம் என்ற ஒற்றைக் கனவுடனேயே வாழ்ந்து தமிழ் மக்களின் மனதில் இறையாகக் குடிகொண்டு நிற்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுபிரபாகரன் அவர்களே தமிழீழம் நோக்கித் தனது இயக்க நடவடிக்கைகளை முடுக்கியவாறு பன்னாட்டு சதி வலையில் சிக்குண்டு கிடந்த தமிழர்களின் அரசியலை முள்ளில் அகப்பட்ட சேலையை மெதுவாக எடுப்பது போல மெதுவாக வெளியேற உள்ளகத் தன்னாட்சி உரிமை (Internal Self-determination), இடைக்கால தன்னாட்சி அதிகார சபை (Interim Self Governing Authority) போன்ற எமது இலட்சிய நோக்கின் மயிருக்கும் சமனில்லாத தீர்வுகளை பரிசீலிக்க இணக்கம் தெரிவிப்பது போல பீதியடையாமல் தெரிவித்து விட்டுத் தமிழீழ விடுதலை நோக்கிய இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதிலிருந்து சிங்கள தேசம் தமிழர்களுக்கு ஒரு துரும்பைக் கூட அதனையும் பெயரளவிற்கேனும் தீர்வாகத் தராது என்பதை எவ்வளவு தெளிவாக விடுதலைப் புலிகள் புரிந்து வைத்தார்கள் என்பது புலனாகும். எனவே இம்முறையும் அதுவே நடக்கப் போகிறது. எனவே,  சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சிப்போக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாததன் விளைவே அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய இப்போதைய குறைப்பேச்சுகள்.

எனவே உப்புச்சப்பில்லாமல் தீர்வு வரப் போவதாகவும் அதுவும் தமிழர்களுக்கு எதிரான தீர்வை தமிழர்களை வைத்தே சிங்களம் ஏற்றுக்கொள்ளச் செய்யப்போகின்றது என்ற குறைப்புரிதலிலிருந்து வெளிவந்து கீழ்வருவனவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்;

  • சிங்கள தேசம் தமிழர்களுக்கு ஒரு துரும்பைக் கூட அதனையும் பெயரளவிற்கேனும் தீர்வாகத் தராது. பதிலாக அது தனது தமிழர்களுக்கெதிரான வக்கிர வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சி எய்தியே வரும்.
  • சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரச இயந்திரத்தை ஆழக் கீறிஅடித்துத் தகர்த்துச் சிதைத்தெறியாமல்தமிழர்களின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுத்து நிறுத்துவதென்பது கல்லிலே நாருரிப்பதற்கு ஒப்பானது

எனவே, சிறிலங்கா அரச இயந்திரத்தைச் சிதைக்காமல், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிலிருந்து தப்பித்து தமது தாயகத்தில் தமது இருப்பைத் தமிழர்களால் உறுதிப்படுத்த முடியாது என்பதே வெள்ளிடைமலை. விடுதலைக்குக் குறுக்கு வழி கிடையாது. மனுக் கொடுத்து ஐ.நா மன்றில் முறையிட்டுத் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காது. வெறென்ன வழி? அடுத்த கட்டப் பாய்ச்சலிற்குத் தமிழினம் அணியமாவது ஒன்றே ஒரே வழி. எனில் தொடர்ந்தும் ஈகம் செய்ய வேண்டியதைத் தவிர தமிழினத்திற்கு வேறு வழியில்லை.

“தமிழர் தமிழீழத்திற்காகப் போராடி தமிழீழம் மீட்டனர் என்று வரலாறு எழுதப்பட வேண்டும். இல்லை தமிழர் என்று ஒரு இனம் இருந்தது அது தமிழீழத்திற்காக உறுதியுடன் போராடி மாய்ந்தது என்று வரலாறு எழுதப்பட வேண்டும்”

-நெடுஞ்சேரன்-

SHARE