சிங்கள அமைச்சர்கள் கொள்ளையடிக்கும் விதங்கள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கண்களுக்குத் தெரியவில்லையா? – இரணியன்

637

வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எவ்வளவு பணம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்றது என்பதை வைத்தே ஏனையவர்களுக்கும் இவ்வளவு பணம் வழங்கப்படுகின்றது அதற்கு இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்ற சந்தேகம் அவருக்குள்ளேயே எழுந்தபடியினால் தான் இவர்களுடைய வரவு செலவு எங்கே என்ற சந்தேகம் இவருக்குள் எழுந்துள்ளதே தவிர, சிங்கள அமைச்சர்கள் எத்தனையோபேர் எப்படி எப்படியெல்லாம் அரசாங்கத்திடம் இருந்து பணத்தை சுருட்டி வாழ்கின்றார்கள் என்பது அமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் கண்ணிற்கு மூடி மறைக்கப்பட்டதொன்றாகத் தெரிகின்றது. ஆனால் கூட்டமைப்பின் தெரிவால் வடமாகணசபை ஆசனத்தில் அமர்ந்த சி.வி.விக்கினேஸ்வரன் தான் ஒரு நீதி அரசர் என்ற தொனியை தற்பொழுது தான் பரப்பிவிட்டிருக்கின்றார். கள்ளனுக்கும், கொலைகாரனுக்கும், போதைப்பொருள் விற்பவனுக்கும், பயங்கரவாதச் தடைச்சட்டம் அளிக்கப்பட்டவனுக்கும் தீர்ப்பு வழங்கிய சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தரப்பின் ஊழல்மோசடிகளைப் பிடிக்கும் வித்தகனாக மாறியுள்ளார்.

TNA press meet 845
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சரவணபவான், சிவஞானம் சிறீதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோதராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், பொன் செல்வராசா, சுமந்திரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்டரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் இருந்து கோடி கோடியாகப் பணங்களைப் பெற்றிருப்பதாக நேரடியாகக் குற்றம்சாட்டிய சி.வி.விக்கினேஸ்வரன் எதை வைத்து இப்படிக்கூறியிருந்தார் என்பது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே இவர் சிங்களப் பேசினவாதத்தைச் சார்ந்தவர் என்பதைத் தெரிந்தும் இவரை வெற்றிலை வைத்து அழைத்து ஆசனத்தில் அமர்த்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தனுக்கும், தேசியப்பட்டியல் சுமந்திரன் அவர்கட்கும் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் செருப்பால் அடித்தார் என்றும் கூறலாம்.

இவருடைய கருத்தை உள்வாங்கிக் கொண்ட ஏனைய அரசதரப்பினர்கள், அரசதரப்பு ஊடகங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு மக்களுக்கு அதனை செலவிடாது அப் பணத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள் என்பது அவருடைய கருத்தாகும். இவ்வாறு கூறிக்கொள்ளும் சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாணசபையில் முதலமைச்சர் நிதியம் ஒன்றை நிறுவி அதன் ஊடாக மக்களுக்கு உதவி வழங்கமுடியும் என்னும் நல்லதிட்டத்தையும் முன் வைக்கின்ற அதே நேரம், இவரால் வடமாகாணசபையில் இருக்கக் கூடிய 36 உறுப்பினர்களுக்கும், வடமாகாணசபை அமைச்சர்களுக்கும் அவர்கள் உழைப்பில் வயித்தில் அடிக்கும் ஒரு செயலாக அமையப்பெற்றுள்ளது. தமது தனிப்பட்ட அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்வதற்கு விக்கினேஸ்வரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் முதலமைச்சர் நிதியம் ஒரு முட்டுக்கட்டையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விடயத்தை கேள்வியுற்ற ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

saraa-620x463
முதலமைச்சர் இதனைக் கூறுவதற்கு முதல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் இவருடைய தன்னிச்சையான செயற்பாட்டின் காரணமாக இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் ரா.சம்பந்தன் அவர்கள் ஒரு விளக்கம் ஒன்றைக் கேட்டுள்ளார். பொதுவாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசத்துக்கு இவ்வளவு நிதி ஒதுக்க வேண்டுமென்று கேட்பது வழக்கம் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அப்போது இருக்கக்கூடிய அரசாங்கங்கள் வீதி அபிவிருத்திக்கோ, அல்லது பாடசாலை புனரமைப்புக்கோ ஏனைய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கோ அவர்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி நிதிகளைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.

இதைவிடவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு ஐம்பது இலட்சம் (50,000,00.00)ரூபா அவர்களுடைய பிரதேசத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்படுகின்றது. ஆனால் இவ்வாண்டு அந்த ஐம்பது லட்சம் (50,000,00.00) ரூபாவும் இன்னமும் வழங்கப்படவில்லை. முதலமைச்சர் இவ்வாறு கண்மூடித்தனமாக கூட்டமைப்பினர் மீது குற்றம் சாட்டியிருப்பது தமிழீனத்திற்கு ஒரு அவமானத் தன்மையை தோற்றுவித்திருக்கின்றது. இதனையே கூட இருந்து குழிபறிக்கும் தன்மை எனக் கூறுவர். ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிச் செல்வாக்கினைப் பயன்படுத்தி பணங்களைப் பெற்று மக்கள் அபிவிருத்திக்காகவும், தமது தேவைக்காகவும் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். இது முதல் அமைச்சருடைய அப்பன் வீட்டிலிருந்து பெற்றுக் கொள்ளும் பணமல்ல என்பதை முதலமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும். தரவுகள் தெரியாதவகையில் எழுந்த மானத்தில் அவரது கருத்துக்கள் கூறப்பட்டிருக்கலாம். ஆனால் இவர் பகிரங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமும் வடமாகாணசபை உறுப்பினர்களிடமும் மன்னிப்புக்கேட்க வேண்டும். அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கக் கூடாது என்று கூறியபோதிலும், இவரொரு நீதியரசர் என்று நியமித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விட்ட மிகப்பெயரிய தவறாகும்.

cv-vigneswaran-600
வடமாகாணசபையிலும் பண மோசடிகள் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மேற்கொண்டிருந்தனர். இதனைக்கூட சிங்கள தரப்பினர் இவர்கள் பணமோசடி செய்கிறார்கள் என்று ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் தமிழத் தேசியக் கூட்டமைப்போ, தமிழ் அரசுக் கட்சியோ பண மோசடி செய்கின்றார்கள் என்ற அறிக்கையை விடவில்லை. இந்நிலையில் விக்கினேஸ்வரனுடைய கருத்தானது தமிழினத்தை தமிழ் அரசியல்வாதிகளை அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுக்கும் ஒரு விபரிதமான செயற்பாடே. இவ்வாறான நிலமை தொடருமாக இருந்தால் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்படலாம். பதவி தனக்குத் தேவையில்லையென்று நினைத்து இவ்வாறான செயற்பாட்டை சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் செயற்படுத்துகின்றாரோ அதுவும் தெரியாது. எது எவ்வாறு இருப்பினும் தமிழ்த்தேசியக் கூட்டமைபினார் அரசாங்கத்திடமிருந்து பெருவாரியான பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். என்று கூறியுள்ளமையானமை தமிழர் தரப்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அரசியல் வாதியாக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி இடம் பொருள் ஏவல் பார்த்து பேசவேண்டும். படித்த அறிவாளி கூழ்ப் பானையில் போய் விழுந்த கதைபோன்று முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுடைய செயற்பாடுகள் அமையப்பெற்றுவிட்டன. மிகப் பொறுப்புவாய்ந்த தலைமையினைப் பொறுப்பேற்றுள்ள சி.வி.விக்கினேஸ்வரன் சிங்கள அரசிற்கு விலைபோய்விட்டாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மாவையின் கேள்விக்கு என்ன பதில்.

SHARE