சீனாவில் களைகட்டும் ஐஸ் திருவிழா

265
சீனாவில் உள்ள ஹர்பின் நகரில் ஐஸ் மற்றும் பனிப் பொழிவுகளை பயன்படுத்தி அழகிய கட்டட அமைப்புகளும், கலை நயமான சிற்பங்களையும் வடிவமைத்து மக்களை கவரும் வகையில் நடக்கும் மாபெரும் பொருட்காட்சி.ஐஸ் திருவிழா( என்ற அதிரடி பெயரில், 1963 ம் ஆண்டில் ஆரம்பித்திருந்தாலும் கலாசார புரட்சிகளால் பல ஆண்டுகள் தடைப்பட்டது.

பிறகு, 1985 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெறுவது வழக்கமானது.

இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கலந்துகொள்கின்றனர்.

நான்குபெரும் பனி திருவிழா

பனி உலகில் படாடோபமும் கலைநுட்பமும் ஒருங்கே அரங்கேற, உலகில் நடக்கும் நான்கு இடங்களில் ஹர்பின் ஐஸ் திருவிழாவும் ஒன்றாக உள்ளது.

1. ஜப்பானின் சப்போரோ பனி திருவிழா, 2. கனடாவில் கியூபெக் நகரின் குளிர்கால திருவிழா, 3. நார்வேயின் ஸ்கை பனி திருவிழா ஆகிய மூன்றும் ஹர்பின் திருவிழாவுக்கு நிகரான உலகின் பனிச்சூழலில் நடக்கும் மாபெரும் மற்ற விழாக்களாகும்.

ஹர்பின் சர்வதேச பனிச்சிற்ப விழா (China- Harbin Ice and Snow Festival) எனவும் உலக அளவில் இந்த நிகழ்ச்சி அழைக்கப்படுகிறது.

ஹெய்லோஸ் ஜியாங் மாகாணத்தில், ஹர்பின் மாநாகராட்சியிலுள்ள சுற்றுலா நிர்வாகமே இதற்கான முழுமுயற்சி மற்றும் செலவில் ஈடுபட்டு வருமானத்தையும் பெற்றுக்கொள்ளும் அதிகாரத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் உரியது.

கலைகோல விழாகாலம்

இந்த பனிச்சிற்பங்களின் பண்டிகை நாள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 5 ம் திகதி. இது அங்குள்ள அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆனாலும், முன்வருட டிசம்பர் மாத மூன்றாவது வாரத்திலேயே அங்கு பனிவிழும் பருவநிலைக்கேற்ப பனி சிற்பங்கள் செதுக்கும் பணி துவங்கிவிடுகிறது.

ஆரவாரம் இல்லாமல் நடக்கும் அரும்பணி ஜனவரி 5 ம் திகதியில் முழுமுன்னேற்றம் அடைந்துவிடுகிறது. உச்சமான நாட்களை கடந்து பிப்ரவரியிலும் இரண்டு வாரம் வரை தொடர்கிறது.

பனிக்கட்டி விழாவில் தீம்பார்க் பங்களிப்பு

இந்த பனி திருவிழாவில் முக்கியமானதாக நான்கு தீம் பார்க் உள்ளது.

1. சூரிய தீவின் சர்வதேச பனி சிற்ப கலை எக்ஸ்போ

2. ஹர்பினின் ஐஸ் மற்றும் ஸ்னோ (Snow) உலகம்

3. ஷொங்குவா பனிக்கட்டி ஆறு மற்றும் ஹர்பின் பனிப் பள்ளத்தாக்கு

4. ஸோலின் பனி பூங்கா மற்றும் சிவப்பு விளக்கு

பரவசப்படுத்தும் பனிகாட்சிகள்

ஐஸ் கால்பந்து, ஐஸ் ஹாக்கி, பனிச்சறுக்கு விளையாட்டுகள், ஐஸின் தேவதை சிற்பங்கள், கலாசார சிற்பங்கள், பனியிலே ஓவியங்கள், பனியிலே திருமண நிகழ்ச்சிகள், பனியிலே வர்த்தக பேச்சு.

பனி மீன்பிடித்தல், ஐஸ் படகோட்டம், குறுக்கு துறையில் பனிச்சறுக்கு, ஸ்பீட் ஸ்கேட்டிங், சர்வதேச பனி சிற்ப போட்டிகள், நீச்சல், பனி படம் கலைநிகழ்ச்சி, கண்காட்சி, கையெழுத்து காட்சிகள், நாட்டுப்புற நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், விதவிதமான விளையாட்டுகள், கலைகள், தொழில்கள், வீரம், காதல், தெய்வீகம் என சகல வெளிப்பாடுகளும் பனிக்கட்டிகளில் உருவங்கள் படைக்கப்பட்டு நம்மை பரவசப்படுத்துகிறது.

வருந்தவைக்கும் நிரந்தரமின்மை

இந்த நான்கு பூங்காக்களும் மலர் பூங்காவிற்கும் மேலான மனிதனின் கலைப் படைப்புகள். ஆனால், பனிக்கட்டிகளால் அமைக்கப்பட்ட இந்த அதிசயங்கள் பல நூற்றாண்டுகளை கடந்தும் பத்திரப்படுத்த வேண்டியவை.

ஆனால், நம் ரசனையை கொள்ளைகொண்ட உருவங்கள் கோடையில் உருகவேண்டிய இயற்கை நியதியின் கட்டாயம் இருப்பதால், நம் உள்ளத்தோடு சேர்ந்தே உருகுகிறது.

சளைக்காத மனித உழைப்பால் அடுத்த பனிக்காலத்திலும் ஓராண்டு கலை மேன்மையோடு புதிய விதத்தில் தோற்றுவிக்கப்படுகிறது.

இது நிரந்திரத்திற்கான பெருமையை கூட, தனது அயராத உழைப்பால் மனிதன் குறைத்துவிட்டதற்கான அடையாளம்.

-மருசரவணன்.

SHARE