சீ-பிளேனின் வருகையினால் நாசமாகும் மட்டக்களப்பு!

257
மட்டக்களப்பு வாவியின் சீ-பிளேன் திட்டத்தினால், வாவியும் அதனோடு இணைந்த சுற்றாடலும் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றது.

இதனைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர். ஓ.கே.குணநாதன், மட்டு அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அந்த மகஜரின் முழு வடிவம் வருமாறு,

அரசாங்க அதிபர்
கசடசேரி
மட்டக்களப்பு
அம்மணி

சீ-பிளேனின் வருகையினால் நாசமாகும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு நகரின் மத்தியில் லேடி மன்னிங் ட்ரைவில்; இயங்கும் சீ-பிளேனின் கருத்திட்டத்தினால் மட்டக்களப்பு வாவியும் அதனோடு இணைந்த சுற்றாடலும் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றமை அவதானிக்கப்படுகிறது.

சீ-பிளேனின் ஓடு தளம் லேடி மன்னிங் ட்ரைவ் பிரதான பாதையில் இருந்து சுமார் 25 மீற்றருக்குள்ளாக அமைந்துள்ளது. சீ-பிளேனின் இறங்கு தளம் லேடி மன்னிங் ட்ரைவ் பிரதான பாதையில் இருந்து சுமார் 10 மீற்றருக்குள்ளாக அமைந்துள்ளது.

பிரதான லேடி மன்னிங் ட்ரைவ் பாதையின் மருங்கே சுமார் 15 மீற்றருக்கு உள்ளாகவே மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. லேடி மன்னிங் ட்ரைவ் பிரதான பாதையின் ஊடாக தினமும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர்.

சீ-பிளேனில் இருந்து வரும் சத்தத்தினால் ஒலி மாசடைகிறது. சீ-பிளேனில் இருந்து வரும் எரிபொருள் மணத்தினால் வளி மாசடைகிறது. எரிபொருள் கழிவு நீரில் கலப்பதனால் மட்டக்களப்பு வாவி மாசடைகிறது.

சீ-பிளேனில் இருந்து வெளிவரும் மணத்தினால் சுற்றாடலில் வாழ்பவர்களுக்கு, சுற்றாடலில் உள்ள காரியாலயங்களில் வேலை செய்பவர்களுக்கும், சீ-பிளேனை வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கும் புற்றுநோய் ஏற்படுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டம் புற்றுநோயில் முன்னிலை வகுப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சீ-பிளேன் ஏற்படுத்தும் அதிர்வு சுற்றாடலில் வசிக்கும் பெண்களுக்கு இரத்தப் போக்கை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சுற்றாடலில் வாழ்கின்ற கரப்பிணிப் பெண்கள் குறைப் பிரசவ குழந்தைகளைப் பிரசவிக்கும் அவலங்களும், கருச் சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன. தினமும் கேட்கும் சீ-பிளேனின் அதிர்வோசையினால் கைக்குழந்தைகளின் செவிப்பறை பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றனர்.

சீ-பிளேன் ஏற்படுத்தும் அதிர்வும் சத்தமும் சுற்றாடலில் வாழும் முதியவர்களையும், இருதய நோயாளிகளையும் மாரடைப்பால் மரணிக்க வைத்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.

நேர காலமற்று எதிர்பாராத வேளையில் வந்திறங்கும் சீ-பிளேனின் சத்தத்தினாலும் அதிர்வினாலும் பாதையினால் போகும் பொதுமக்கள் திடீர் அச்சத்துக்குள்ளாவதுடன் குறிப்பாக கரப்;பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கூட அதிர்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தினமும் ஒருதடவை அல்லது இரண்டு தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் சீ-பிளேனினால் இவ்வளவு கொடுமையானால் எதிர் காலத்தில் சேவை விஸ்த்தரிக்கப்பட்டு பல சீ-பிளேன்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமானால் அச் சூழல் மக்களற்ற சூனியப் பிரதேசமாக மாற வேண்டி வரும்.

இங்கு இறங்குதுறை அமைந்துள்ள இடத்தில் மலசலகூட வசதிகள் எதுவுமே ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் பயணத்தை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் இறங்குதுறையை அண்டியுள்ள வீடுகளில் மலசலம் கழிக்க செல்கின்றனர்.

அதனால் அச்சூழலில் பால்வினை நோய் தொற்றும் அச்சமும், பாலியல் சேட்டைகளும் இடம் பெறச் சந்தர்ப்பங்களும் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்றன.

சீ-பிளேனை வேடிக்கை பார்க்க வரும் பார்வையாளர்கள் மலசல கூட வசதியின்மையினால் அவசர தேவையின் நிமித்தம் தெருவோரத்து மதில்களிலும் மறைவான இடங்களிலும் மலசலம் கழித்து விட்டு செல்வதனால் சூழல் அசுத்தமாகிறது.

சீ-பிளேனின் ஓடு பாதை அமைந்துள்ள இடத்தில் பல வகையான முதலைகள் கூட்டமாக வாழ்ந்தன. சீ-பிளேனின் வருகையின் பின்பு அந்த இடத்தின் முதலைகளே இல்லாமல் போய்விட்டது.

அதிகாலையில் வாவிக் கரையோரமாக வந்து நின்று மீன் பிடிக்கும் அழகழகான கொக்குகளும் மீன்கொத்தி மற்றும் நீர்க்காகங்கள் கூட அந்தப் பக்கம் வருவதில்லை.

சீ-பிளேன் வரும் வேளையில் ஓடுபாதையில் அன்றாட ஜீவனோபாயத்துக்காக மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை சீ-பிளேனின் பாதுகாப்பின் பொருட்டு விரட்டி விடுவது வேதனையானது.

எல்லாவற்றையும் விட மிகவும் கொடுமையானது சீ-பிளேனின் அதிர்வும் அது வாவியில் வெளியேற்றும் கழிவு எண்ணெய்களும் வாவியில் காணப்படும் நண்டு , இறால்களையும் நீர்த் தாவரங்களையும் அழித்து விடும் அபாயம் உள்ளது என்பது ஆய்வாளர்;களின் கருத்து.

குறிப்பாக சீ-பிளேனின் ஓடுதளம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கல்லடிப் பாலத்தின் கீழேதான் மட்டக்களப்புக்கு பெருமை தரும் “பாடும் மீன்கள்” இருக்கின்றன. அவை முற்றாக அழிந்து விடும். மட்டு இறால் கூட அழிந்து விடும் அபாயம் உண்டு.

சீ-பிளேன் கீழிறங்கும் நீரில் தான் சுவாமி விபுலானந்தர் அமர்ந்திருந்து பாடுமீன்களை பற்றி ஆராய்ச்சி செய்த கற்பாறையும் உண்டு.

இலங்கைக்கு முதன் முதலாக 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் சமாதானப் பேச்சு வார்த்தைக்காக மாலைதீவில் இருந்து கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்கு வந்திறங்கிச் சென்றார்.

சுனாமிப் பேரழிவையடுத்து சர்வதேச நிவாரணக் குழுக்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமுகமாக தெற்கில் கொக்கல ஏரியில் சேவையில் ஈடுபட்டன. அவை
நாட்டின் அவசிய தேவையின் பொருட்டு மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அதுபோல மட்டக்களப்பு வாவியில் சீ-பிளேன் வருகையின் திட்டமானது அரசினால் மக்களின் தேவை கருதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதல்ல.

சுற்றுலா பயணிகளின் வருமானத்தைப் பொருட்டாகக் கொண்டு தனியார் நிறுவனங்களால் நிகழ்த்தப்படும் இலாப நோக்கு சேவையாகும்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு செல்லும் ஒரு பயணிக்கு தலா 25000ரூபா முதல் 30000ரூபா வரை அறவிடப்படுகின்றது.

2010ஆம் ஆண்டு நீர்கொழும்பு வாவியிலே சுற்றுலா பயணிகளின் வருகைக்காக சீ-பிளேன் களப்பில் இறக்கப்பட்ட போது “ நீர் கொழும்பு களப்பு போராட்டம்” என்ற பெயரில் சுமார் ஒரு வருட காலம் கத்தோலிக்க மதக் குழுக்களினதும்,

மீனவர்களின் ஒத்துழைப்புடனும் ஊடகங்களின் பங்கேற்றலுடன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் போராடி நீர்கொழும்பு வாவியிலே சீ-பிளேன் இறங்குவதைப் போராடித் தடுத்துள்ளது.

கொழும்பு மறைமாவட்டத்தின் சில கத்தோலிக்க அருட் தந்தைமார்கள் சீ-பிளேன் கருத்திட்டத்தை நீர்கொழும்பு களப்பில் இருந்து அகற்றுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்கள்.

மட்டக்களப்பில் அமைதி பேண வேண்டிய கச்சேரி , பொது நூலகம் , நீதி மன்றம் காந்திப் பூங்கா, நீரூற்றுப் பூங்கா, வானிலை அவதான நிலையம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், மதுரை காமராசர் பல்கலைக்கழக இலங்கை வளாகம்,

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் காரியாலயம், பொலிஸ் அத்தியஸ்தகர் காரியாலயம் ஆகியவற்றுக்கு நடுவிலே சீ-பிளேன் தரையிறக்கப்படுவது எவருடைய கண்ணுக்கும் புலப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட கண்டு கொள்ளவில்லை.

மட்டக்களப்பு வாவியில் சீ-பிளேன் இறங்குவதை சாதாரணமாக எண்ணி விட முடியாது. மட்டக்களப்பு மீனவர்களின் தலை மீது இறக்கப்படும் சீ-பிளேன்களாகவே கருத வேண்டும்.

மீனவ மக்களின் உரிமைகளையும், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றாடல் சட்டங்களையும் மீறிய செயலாகும்.

திருத்தப்பட்ட 1980ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் படி பிரகடனப்படுத்தப்பட்ட 1993 ஜீன் 24 ஆம் திகதி 772/22 ஆம் இலக்க வர்த்த மானியின் அறிவித்தலின் படி விமான ஓடு பாதைகளை நிர்மாணிப்பதற்கு முன்னர் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயன்முறைக்குட்பட்டு முன் கூட்டியே எழுத்தாலான சுற்றாடல் சார் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

அப்படியானால் மட்டக்களப்பு வாவியின் சீ-பிளேன் இறங்கு தளத்திற்கு அனுமதி வழங்கியது யார்?

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE