சுற்றுலா விசாவில் வரும் தென்னிந்திய கலைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்.!

185

தென்னிந்தியாவில் இருந்து வரும் தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் தை மாதம் முதல் ஆவணி மாதம் வரையில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த திருவிழா காலங்களின் போது தென்னிந்தியாவை சேர்ந்த தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களை யாழில்.உள்ள சிலர் சுற்றுலா விசாவில் யாழ்ப்பாணம் அழைத்து வருகின்றார்கள். அவ்வாறு அழைத்து வரப்படும் கலைஞர்களை வீடுகளில் தங்க வைத்து அவர்களை ஆலய திருவிழாக்களில் சேவகத்திற்கு அழைத்து செல்கின்றனர். இதனால் உள்நாட்டில் உள்ள தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

தென்னிந்தியாவில் இருந்து தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களை அழைத்து வருவதாயின் உரிய விசா நடைமுறைகளை பயன்படுத்தி அழைத்து வர வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் அவர்களை சுற்றுலா விசாவில் அழைத்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சுற்றுலா விசாவில் வருகை தந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபடும் தென்னிந்தியா வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதே போன்று தவில், நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் அவர்களை அழைத்து வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

SHARE