சுவாதி கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு ராம்குமார் மீண்டும் வாக்குமூலம்…

217

ramfinal

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந் திகதி பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமாரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து, விசாரணை மேற்கொண்டனர்.

நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அவர் இந்த வழக்கின் முக்கிய சாட்சி ஆவார்.

நேற்றைய விசாரணையின்போது, ராம்குமாரை அவரது வக்கீல் பார்த்து பேசினார். இந்த வழக்கு தொடர்பாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த வழக்கை பொறுத்தமட்டில், ராம்குமார் தான் குற்றவாளி. ஏற்கனவே நெல்லையில் ஆஸ்பத்திரியில் வைத்து ராம்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டு, வாக்குமூலம் அளித்தார். அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவேண்டியது இருந்தது. அதற்காக அவரை காவலில் எடுத்து விசாரித்தோம்.

ஆஸ்பத்திரியில் சொன்ன அதே வாக்குமூலத்தைதான், ராம்குமார் மீண்டும் கொடுத்து உள்ளார். அவரது வாக்குமூலம் மீண்டும் விரிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சுவாதியை அவர் ஒருதலையாக காதலித்து உள்ளார். அவரது காதலை ஏற்காமல் சுவாதி இழிவாக பேசி, திட்டி உள்ளார். ‘தேவாங்கு’ போல இருக்கிறாய்… என்றும் ‘பொட்டப்பயல்’ என்றும் அவமானப்படுத்தும் வகையில் திட்டினார் என்றும், அதனால் தான் சுவாதியை தீர்த்து கட்டினேன் என்றும் ராம்குமார் மீண்டும் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

அவர்தான் குற்றவாளி என்பதற்கு எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே தடயங்களும், சாட்சிகளும் உள்ளன. ரத்தக்கறை படிந்த ராம்குமாரின் சட்டை அவரது அறையில் கைப்பற்றப்பட்டு உள்ளது. சட்டையில் படிந்துள்ள ரத்தமும், சுவாதியின் ரத்தமும் ஒன்றுதான் என்று தடய அறிவியல் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதுதொடர்பான அறிக்கையை தடய அறிவியல் துறையினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

சுவாதியின் செல்போன் ராம்குமாரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. ராம்குமார், சுவாதியை வெட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாளில் அவரது கைரேகை பதிவாகி உள்ளது. மேலும் ராம்குமார் சுவாதியை வெட்டியதை கண்கண்ட சாட்சியான கடைக்காரர் ஒருவர் சிறையில் அடையாளம் காட்டியுள்ளார்.

ராம்குமார் ஏற்கனவே சூளைமேட்டில் ஒருமுறை சுவாதியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தனது தந்தையை சுவாதி செல்போனில் அழைத்துள்ளார். சுவாதியின் தந்தை நேரடியாக வந்து தகராறு செய்த ராம்குமாரை கண்டித்து உள்ளார்.

இதை ராம்குமாரே தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு உள்ளார். ராம்குமார் தான் தகராறு செய்தவர் என்பதை சுவாதியின் தந்தையும் சிறையில் அடையாளம் காட்டியுள்ளார். சி.சி.டி.வி. கேமராவில் ராம்குமாரின் உருவம் பல இடங்களில் பதிவாகி உள்ளது.

மேன்சனில் ராம்குமாருடன் தங்கியிருந்த காவலாளியும் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். எனவே விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் 15 நாட்களில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

விசாரணை முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் ராம்குமார், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.

SHARE