செவ்வாய் கிரகத்திற்கு செல்ல புதிய ஆடையை அறிமுகம் செய்யும் நாசா

675
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி வீரர்கள் வருங்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அணிந்து செல்லும் உடையினை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்வெளி பயணத்திற்காக நாசா 3 வடிவங்களை உருவாக்கியது. அது குறித்த அறிவிப்பினை கடந்த புதன்கிழமை நாசா வெளியிட்டது. பின் அது பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

அதில் இசெட்-2 என்ற விண்வெளி உடை 62 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டது.

இந்த உடை தொழில்நுட்பம் நிறைந்ததாக, வருங்காலத்தில் நாள்தோறும் அணியும் உடை போன்று காட்சி தருவதாக வடிவம் கொண்டது. இந்த உடையின் பயன்பாடு, விண்வெளியில் நடக்கும்போது வீரர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு உதவும் வகையில் இருக்கும்.

இது கடந்த 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட இசெட்-1 ரக விண்வெளி ஆடையின் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். மென்மையான தலை பகுதி கொண்ட இசெட்-1ல் இருப்பதை போன்று இல்லாமல், நீண்ட நாட்கள் உழைக்கும் வகையிலான தலை பகுதியும், கீழ் பகுதியில் உராய்வால் ஏற்படும் காயங்களை தடுக்கும் வகையிலும் இசெட்-2 ஆடை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதி நவீன வடிவிலான, தோள் மற்றும் இடுப்பு இணைப்பு பகுதிகளின் இயங்கு தன்மையை அதிகரிக்கும் வகையில், உருளும் தன்மை உடைய சிறிய இரும்பு குண்டுகள் கொண்டு இவை உருவாக்கப்பட்டு உள்ளன.

தலை பகுதியில், மின் வயர்கள் இணைக்கப்பட்டு அதனால், ஒளிரும் தன்மையுடையதாக காணப்படும் தலை பகுதி எளிதில் விண்வெளி வீரர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்ள உதவுகிறது.

விண்வெளிக்கு ஏற்றதான காலணிகள் இதில் உள்ளன. விண்வெளியில் வெற்றிட பகுதிக்கு ஏற்றாற்போன்ற உபகரணங்கள் இதில் உள்ளன. இந்த புதிய இசெட்-2 விண்வெளி ஆடை வருகிற நவம்பரில் சோதனை செய்யப்படும். நீண்ட நாட்கள் தாங்கும் தன்மை, இயங்கு தன்மை மற்றும் விண்வெளியில் இருப்பது போன்ற தளத்தில் வெற்றிட அறைகளில் பிற நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சோதனை மேற்கொள்ளப்படும்.

செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்று பாறைகள் உள்ள பகுதிகளில் மற்றும் பயிற்சி வீரர்களுக்கு விண்வெளியில் நடப்பதற்கு உரிய சோதனை ஆகியவை நடத்தப்படும். இந்த உடையில் உள்ள சில குறைபாடுகள் என்றால், இதன் உபகரணங்கள் மற்றும் வடிவமைப்பு பொருட்கள் விண்வெளியில் நடக்கும் வீரர்கள் அதிக வெப்பநிலை, தீங்கு விளைவிக்கும் கதிரியக்கம் மற்றும் விண்வெளியில் சிறிய எரிகற்கள் தாக்குதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படியான சிறப்பம்சங்கள் இதில் இல்லை.

எனினும், இவை அனைத்தும் தற்பொழுது தேவையான ஒன்று இல்லை என நாசா அறிவித்துள்ளது.

இந்த இசெட் ரக ஆடைகள் சர்வதேச விண்வெளி மையத்தை தாண்டி செல்லும் பயணத்திற்கு ஏற்றாற்போன்று மேம்பட்ட மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு நாசாவின் நவீன ஆய்வு அமைப்பு பிரிவு திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த இசெட்-2 ரக வடிவம் ஆனது பிரெடரிகா, டெலாவேர் விண்வெளி ஆடை வடிவமைப்பாளர்களான ஐ.எல்.சி. டோவர் மற்றும் பிலடெல்பியா பல்கலை கழகம் ஆகியோரோடு ஒரு பகுதியாக இணைந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும். மற்ற இரு வடிவங்கள் வருங்காலத்தில் அணியும் ஆடை வடிவத்திற்கு ஏற்றாற்போன்று மற்றும் இயற்கைக்கு ஏற்றாற் போன்று உருவாக்கப்பட்டவை ஆகும்.

SHARE