சொறிக்கல்முனையில் அமரர் அருட்தந்தை எஸ்.செல்வராஜா அடிகளாரின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

396
அமரர் அருட்தந்தை எஸ்.செல்வராஜா அடிகளாரின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் சொறிக்கல்முனை சாந்த குரூஸ் அணி  ஞாபகார்த்த வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.
அமரர் அருட்தந்தை எஸ்.செல்வராஜா அடிகளாரின் 27ஆவது ஆண்டு ஞாபகார்த்தமாக  ஏற்பாடு செய்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி சொறிக்கல்முனை சாந்த குரூஸ் விளையாட்டுக்  கழகத்தின் தலைவர் யோசப் நிக்சன் டேவிட்  தலைமையில் நேற்று சொறிக்கல்முனை சாந்த குரூஸ்  மைதானத்தில் நடைபெற்றது.
இச்சுற்றில் கிழக்கு மாகாணத்திலுள்ள முன்னணி உதைப்பந்தாட்ட அணிகள் பங்குகொண்டன. இறுதி சுற்றுக்கு மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா  உதைபந்தாட்ட அணியும், சொறிக்கல்முனை சாந்த குரூஸ்  உதைபந்தாட்ட அணியும் மோதின. போட்டி  சமனிலையில் நிறைவு பெற்றமையால் இதில் 3 – 1  என்ற பினால்ட்டி உதையில் மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா உதைபந்தாட்ட அணியை தோற்கடித்து  சொறிக்கல்முனை சாந்த குரூஸ் உதைபந்தாட்ட அணி வெற்றியை தனதாக்கினர்.
இந்நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.புஸ்பராசா, சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு தந்தை எஸ்.இக்னேசியஸ்,  நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.சுதர்சன், விளையாட்டு கழக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை சொறிக்கல்முனை பிரதேசத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களும் பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
SHARE