ஜிகாதிகளுக்காக 29 மில்லியன் டொலர் சொத்துகளை விட்டு சென்ற பின்லேடன்

265
தீவிரவாத செயல்களை தொடர்ந்து நடத்துவதற்காக 29 மில்லியன் டொலர் சொத்துகளை பின்லேடன் விட்டு சென்ற தகவல் அவரது உயில் மூலம் தெரியவந்துள்ளது.அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா பின்லேடன்.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இவர் கடந்த 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் கொல்லப்பட்ட வீட்டில் இருந்து ஏராளமான கடிதங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றிய சிறப்பு படையினர் அவற்றை அமெரிக்காவுக்கு எடுத்து சென்றனர்.

இந்நிலையில் அவற்றில் சில ஆவணங்கள் செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில், தான் இறந்துவிட்டால் தனது மனைவி மட்டும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி அவரது தந்தைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்றொரு உயிலில், நான் கொல்லப்பட்டால் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் சேர்த்து வைத்துள்ள சொத்துகளில் பெரும் பகுதியை ஜிகாதிகளுக்கு செலவிடுங்கள்.

சிறு பகுதியை எனது குடும்பத்தினருக்கு அளியுங்கள் என தெரிவித்துள்ளார். சுமார் 29 மில்லியன் டொலர் சொத்துகள் சூடான் நாட்டில் உள்ளதாக பின்லேடன் தெரிவித்துள்ளார்.

எனினும் அவை பணமாக உள்ளதா அல்லது பொருளாக உள்ளதா என்று குறிப்பிடப்படவில்லை.

மேலும் தான் கண்காணிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்த அவர், தனது மனைவி பல் சிகிச்சைக்காக சென்றபோது அவரது பல்லில் துப்பறியும் சாதனம் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பின்லேடனின் மேலும் பல ஆவணங்களும் விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.

SHARE