ஜெயவர்த்தனே ஏமாற்றம்: கவாஜாவின் அபார சதத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிட்னி தண்டர்

255

 

பிக் பாஷ் லீக் டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற சிட்னி தண்டர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடந்த பிக் பாஷ் டி20 லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்- சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வென்ற அடிலெய்டு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அலெக்ஸ் ராஸ் 47 ஓட்டங்களும், நேஸர் 16 பந்தில் 27 ஓட்டங்களும், ரஷித் 3 பந்தில் 14 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்த ஜெயவர்த்தனே 2வது ஓவரில் வாட்சன் பந்தில் சிக்சர் விளாச ரசிகர்கள் உற்சாகமாகினர். ஆனால் அதே ஓவரில் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 பந்தில் 104 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதனால் 17.4 ஓவரிலேயே அந்த அணி 160 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வாட்சன் 8 பந்தில் 7 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அணித்தலைவர் மைக் ஹசி 11 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த வெற்றியால் சிட்னி தண்டர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மெல்போர்னில் இன்று நடக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்- பெர்த் ஸ்காட்செர்ஸ் அணிகள் மோதுகின்றன.

SHARE