தங்கமகன் மாரியப்பனுக்கு கிடைத்த கௌரவம்

153

பிரேசிலில் நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்றுள்ளார்.

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தது.

இப்போட்டியில் 160 நாடுகளிலிருந்து 4.342 வீரர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடத்தப்பட்ட இந்த பாராலிம்பிக் திருவிழாவானது நேற்று அதிகாலை மரக்கானா மைதானத்தில் வான வேடிக்கைகளுடன் முடிவுக்கு வந்தது.

இப்போட்டியில், சீனா 107 தங்கப் பதக்கங்கள் உட்பட 239 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தையும், இங்கிலாந்து 147 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் 43வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதையடுத்து நடைபெற்ற கொடி அணிவகுப்பின் போது உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றவரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்தியாவின் சார்பாக இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

இதற்கிடையில் போட்டியின் போது, மரணமடைந்த ஈரான் சைக்கிள் வீரர் பாஹ்மன் கோல்பார்னிஸ்ஹத் – க்கு அஞ்சலி செலுத்தி ரியோ பாராலிம்பிக் கிராமத்தில் ஈரானின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படப்பட்டது.

இது குறித்து பேசிய சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பிலிப் க்ராவீன், போட்டிகள் தொடங்கிய நாளில் இருந்து உற்சாகம் மிகுந்திருந்த நிலையில், ஈரான் வீரர் பாஹ்மன்-இன் மறைவு அனைவரையும் வருத்தமடையச் செய்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஹ்மன் உயிரிழக்கக்காரணமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, 2020 ஆம் ஆண்டு நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுவதால் ஒலிம்பிக் கொடி அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE