தன்னை ஈவ்டீஸிங் செய்த இளைஞனுக்கு பேஸ்புக் மூலம் பாடம் புகட்டிய தைரிய மங்கை!

160

ஆணும் பெண்ணும் சமம் என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறை வேறு விதமாக உள்ளது. போதைப் பொருளாகவும் ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாகவும் பெண்கள் பார்க்கப்படுகிறார்கள். வரதட்சணை, குடும்ப வன்முறை, பாலியல் வன்புணர்வு, ஈவ் டீசிங் உட்பட ஏராளமான வன்முறைகள் தினந்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு பெண் வீட்டைவிட்டு கிளம்பி மீண்டும் வீடு திரும்புவதற்குள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.

படிக்கச் செல்லும் மாணவிகள், வழியில் ஈவ் டீசிங் செய்யப்பட்டாலும் அதை வீட்டில் சொல்ல இயலாத நிலை. சொன்னால் படிப்பு நிறுத்தப்படுமோ என்ற அச்சம். இப்படிப் பல பிரச்னைகளைச் சகித்துக்கொண்டுதாம் ஒவ்வோர் அடியையும் எடுத்துவைக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டவர் ராஸ்மி. தனது செயல்மூலம் மற்ற பெண்களுக்குத் தைரியத்துக்கான வழிகாட்டியாக மாற்றியிருக்கிறார்.

மங்களூரைச் சேர்ந்த ராஸ்மி, தன்னைத் பின்தொடர்ந்து வந்து ஈவ் டீசிங் செய்த இளைஞன் ஒருவனின் டூவீலர் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்து, பெயர் மற்றும் விவரங்களுடன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தார். இது, சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து அவருடன் பேசினோம்.

எனது சொந்த ஊர் மங்களூர். மதங்கள் பற்றி முதுகலைப் பட்டப்படிப்பை பீகாரில் படித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த ஞாயிற்றுகிழமை வழக்கமாகச் செல்லும் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன்.

அப்போது, அறிமுகம் இல்லாத ஒருவன் டூவீலரில் என்னைப் பின்தொடந்தான். பிறகு வழியை மறித்து நிறுத்தி, பாலியல் சைகைகளைச் செய்தான். எனக்கு அருவருப்பாக இருந்தது. அவன் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. ஆனாலும், பொறுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டேன். அவன் டூவீலரை ஓரமா நிறுத்திவிட்டு பக்கத்தில் வந்து நின்றுவிட்டான். மீண்டும் வக்கிரமான பார்வையுடன் பேசினான்.

அப்போது நான் அடைந்த மனவேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதுபோல பாதிக்கப்படும் பெண்கள் சார்பாக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தேன். என் மொபைலில் அவனுடைய வண்டியின் நம்பர் பிளேட்டைப் படம் பிடித்துவிட்டு, பக்கத்திலிருந்த ஷாப்புக்குள் நுழைந்துவிட்டேன். ரொம்ப நேரம் கழித்து வெளியே வந்து அவன் போய்விட்டதைப் பார்த்த பிறகுதான் நிம்மதியானது.

சம்பந்தமே இல்லாத அவனால் நான் அடைந்த மன உளைச்சலுக்கு ஒரு தீர்வை எதிர்பார்த்தேன். இதுபோன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என நடவடிக்கையில் இறங்கினேன். என் நண்பரிடம் காட்டி அவரின் உதவியுடன் அந்த டூவீலருக்குச் சொந்தமானவனின் பெயர் மற்றும் விவரங்களை வாங்கினேன். அன்றிரவே ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தேன். போலீஸில் புகார் செய்திருந்தால், அவனை எச்சரித்து அனுப்பிவிடுவார்கள். நாளை இன்னொரு பெண்ணை சீண்ட ஆரம்பித்துவிடுவான். பெண்கள் தினந்தோறும் பொது இடங்களில் எந்தளவுக்கு ஈவ் டீசிங்கை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியும். நம்மை மாதிரி ஒவ்வொருவரும் துணிந்து வந்தால்தான் இதுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்னு இப்படிச் செய்தேன். சிறு வயதிலிருந்தே நான் போல்டாக இருப்பேன். பசங்க கிண்டல் பண்ணினா நாலு வார்த்தை கேட்டுட்டுதான் போவேன். என் பெற்றோரும் என்னை அப்படி தைரியமா இருக்கச் சொல்லித்தான் வளர்த்தார்கள். கூட்டம் அதிகமா இருக்கும் இடத்தில் ஒதுங்கி நின்றால், நமக்கான வழி கிடைக்காது. நாமதான் வழியை ஏற்படுத்திக்கொண்டு போகணும். இது மாதிரி மற்ற பெண்களும் தவறுகளைத் தைரியமாக பொதுவெளியில் சுட்டிக் காட்டணும்” என்கிற ராஸ்மி, அந்தப் பதிவுக்காக வந்த பாராட்டுகள் மற்றும் எதிர்வினைகளையும் சொன்னார்.

சிலர் லைக்ஸ் வாங்குவதற்காகப் பதிவுசெய்ததாக கமென்ட் போட்டார்கள். சொல்கிறவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்காகக் கவலைப்படவே இல்லை. என் நண்பர்கள், பெற்றோர், நல்ல எண்ணம்கொண்டவர்கள் பாராட்டினார்கள். இது எல்லாரும் வந்துசெல்லும் பொதுவெளி. என்னை ஓர் இடத்தில் அவமானப்படுத்தினவனை, ஃபேஸ்புக் வழியே உலகத்துக்கு வெளிச்சமிட்டு காட்டிட்டேன். தன் செயலுக்காக அவன் வெட்கப்படணும். இனிமேலாவது பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை, அவன் உணர வேண்டும். அவனைப் போன்றவர்களுக்குப் பயம் வரணும்” என்கிற ராஸ்மி குரலில் தைரியம் பளிச்சிடுகிறது.

SHARE