தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும் அபாயம் நிலவுகின்றது எஸ்.வியாழேந்திரன்

143

கிழக்கு மாகாணத்தில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல் போகும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய பயிற்சியைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்ந்து மேலும் உரையாற்றிய அவர், “இன்று அனேகமான இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தமது நேரத்தினை செலவிடுகின்றனர். மனிதன் மனிதனோடு பேசும் நிலமை மாறி தற்போது இயந்திரங்களோடு பேசி இயந்திரங்களாகவே மாறும் நிலை உருவாகிவருகின்றது.

சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடும் இளைஞர்கள் வேறு எதற்கும் முன்னிற்கமாட்டார்கள். அண்மையில் மட்டக்களப்பு நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றபோது அதில் இளைஞர்கள் பங்குபற்றவில்லை. முகப்புத்தகத்தில் படம் போடுவதற்கும் எழுதுவதற்கும் ஆனேக இளைஞர்கள் முன்னிற்கின்றனர்.

கிழக்கின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி இன்று எழுப்பப்படுகின்றது. தனது இனத்தினையும் தனது மக்களையும் சிந்திக்கின்ற ஒவ்வொரு இளைஞனும் தான் கிழக்கின் அடுத்த தலைவர்கள்.

இன்று இஸ்லாமிய சமூகம் தனித்துவமாக சிந்திக்கின்றது. அந்த தனித்துவங்கள் எங்களுக்கு வரவில்லை .இன்று எந்த முஸ்லிம் பகுதியிலும் மதுபானசாலையில்லை. ஒரு புத்தர் சிலையினை வைக்கமுடியாது.

இவ்வாறு சென்றால் கிழக்கில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல்போகும் நிலை உருவாகலாம். எனவே தமிழ் இளைஞர்கள் முற்போக்கு சிந்தனையுடையவர்களாக செயற்படவேண்டியது மிக அவசியம்” என்று “தெரிவித்தார்.

SHARE