நவம்பர் 7 க்கு முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க! கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசர கடிதம்.

267

அரசியல் கைதிகள் தமது உடனடி விடுதலையை வலியுறுத்தி 12.10.2015 அன்று ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் 17.10.2015 வரை தொடர்ந்தபோது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள்,

அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை நவம்பர் 7க்கு முன்பாக பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதியை நம்பி, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் வாக்குறுதியை கைதிகளுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாக தற்காலிகமாக உண்ணாநிலை போராட்டத்தை அரசியல் கைதிகள் முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,

அரசியல் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகி, விரைவாக ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கூட்டமைப்பின் 16 எம்.பிக்களும் ஒப்படமிட்டு இன்று (05.11.2015) கையளிக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்கள்,

ஜனாதிபதி,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு.

ஜனாதிபதி அவர்களே!

எவ்வித நிபந்தனைகளும் இன்றி நவம்பர் 7 க்கு முன்பாக அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக.

மேற்படி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, பல தடவைகள் தங்களின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்றுவரை அவர்களின் விடுதலை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை. கைதிகளின் விடுதலை தொடர்பில் பலரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வந்தாலும் கூட, தங்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கைதிகள் தமது உடனடி விடுதலையை வலியுறுத்தி 12.10.2015 அன்று ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் 17.10.2015 வரை தொடர்ந்தபோது தாங்கள், அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை நவம்பர் 7க்கு முன்பாக பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதியை நம்பி, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் தங்களின் வாக்குறுதியை கைதிகளுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாக தற்காலிகமாக உண்ணாநிலை போராட்டத்தை அரசியல் கைதிகள் முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஆனால் இன்றுவரை கைதிகளின் விடையத்தில் எவ்விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. பல ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களோடு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், இவ்வாண்டு ஜனவரி 8 அன்று ஒன்றுசேர்ந்து ஜனநாயக ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தி தங்களின் தலைமையில் ஒரு நல்லாட்சி புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த நல்லாட்சியில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றாகிய அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இன்றுவரை முடிவு காணாமலிருப்பது எமக்கு மிகுந்த அவநம்பிக்கையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. 8 முதல் 20 வருடங்களாக நீதிக்கு புறம்பாக சிறைச்சாலைகளில் வதைபடும் எமது உறவுகளான அரசியல் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகி, விரைவாக ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

SHARE