நாட்டின் துரோகிகள் கொல்லப்பட வேண்டும்மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

159

 

நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேசத் துரோகிகளே. அவர்களுக்கு 1987 1989 காலப்பகுதியை போன்று மரணத்தையே தண்டனையாக வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற
இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, இவ்வாறு தேசத் துரோகிகளாகக் கொல்லப்படுபவர்களின் இறுதிக் கிரியைகள் கூட மரியாதையாக நடக்கக் கூடாது என்றும்    தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் “வியன்மஹ’ (சிறந்த எதிர் காலத்திற்கான நிபுணர்கள்) எனும் தொனிப்பொருளில் முன்னாள் இராணுவ அதிகாரிகளினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தரங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய கமல் குணரட்ண மேலும் கூறுகையில்;

2009 மே 19 ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தைச் சேர்ந்த சகலரையும் அழித்து நாம் நாட்டில் அமைதியை ஏற்படுத்தினோம். நான் பல வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். 35 வருட சேவைக்காலத்தை முடிவு செய்து கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் அந்த சேவையிலிருந்து ஓய்வு பெற்றேன்.

இதன்பின்னர் நாட்டில் நடப்பதை பார்க்கும் போதும் இராணுவத்தினருக்கு தற்போது இருக்கும் நிலைமையை பார்க்கும் போதும் வீட்டில் ஓய்வாக இருப்பது பொருத்தமற்றது என்பதனால் நான் உங்கள் முன்வர வேண்டியுள்ளது.

30 வருடங்கள் நாட்டில் யுத்தம் நடந்தது. பிரபாகரன் ஒருநாள் கூறியிருந்தார், 3 வாரங்களில் சிங்களவர்களுக்கு எல்லாம் மறந்துவிடுமென்று அவர் கூறியது சரிதான் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதனால் சில விடயங்களை நினைவூட்ட வேண்டிய தேவையுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பட்ட துன்பங்களை யாவரும் அறிவார்கள்.

அப்போது சிலநேரங்களில் இராணுவப் பேச்சாளர், பயங்கரவாதிகள் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 12 இராணுவத்தினரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிப்பார். அந்தக் காலப்பகுதியில் இது தொடர்பாக எத்தனையோ பொய்களை கூறியுள்ளோம். ஆனால், உண்மையாக எத்தனை பேர் இறந்தார்கள் என்பதனை சவப் பெட்டிக் கடை வைத்திருப்பவர்களுக்குத் தெரியும்.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கும் உண்மைத் தொகை தெரியும். ஊடக பேச்சாளர் அப்போது 12 பேர் என கூறினாலும் உயிரிழந்துவர்களின் எண்ணிக்கை 50 , 60ஆகவே இருக்கும்.

இறுதிக்கட்ட யுத்தம் மாவிலாறிலிருந்து ஆரம்பித்து நந்திக்கடலில் முடியும் போது இறுதி நாளில் உயிரிழந்த இராணுவ வீரர்களும் உள்ளனர். இந்த இறுதிக்கட்ட யுத்த காலத்தில் 3 வருடத்திற்குள் 5900 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். 20,000 பேர் வரை காயமடைந்துள்ளனர். இவர்களில் 10,000 பேர் வரை தற்போதும் நடமாட முடியாது படுக்கையிலேயே இருக்கின்றார்கள்.

இப்போது யுத்தம் இல்லை. மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால், இப்போது யுத்தக் குற்றம் , தண்டனை வழங்க முயற்சிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்கள் உள்ளடங்கலாக சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்க்கும் போர்வையில் நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஏன் நாங்கள் இத்தனை அர்ப்பணிப்புகளை செய்தோம். எமது குடும்பத்தை சேர்ந்தவர்களை ஏன் இழந்தோம்.

நாங்கள் யுத்தக் குற்றமிழைத்தவர்கள் என்றால் தாயின் மகனாக , சகோதரியின் சகோதரனாக , பிள்ளையின் தந்தையாக நாங்கள் கூறப்படுவது போல் யுத்தக் குற்றமிழைத்து பெண்களை வன்புணர்வு செய்திருந்தால் எங்களை அவர்கள் வீட்டுக்கு உள்ளே எடுத்திருப்பார்களா?. நாங்கள் சமூகத்தில் கீழ்த்தரமான செயல்களை செய்தவர்கள் இல்லை. எமது சேவையை கௌரவமாக நிறைவேற்றி நாட்டையும் காத்தவர்கள். நாங்கள் யுத்தக் குற்றவாளிகள் அல்ல.

நான் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி, 56 வயதுடையவர். எனக்கு இன்னும் 15 , 20 வருடங்களுக்கு வாழ முடியும். நாட்டுக்காக சேவை செய்து நாட்டை பாதுகாத்தது தவறு என்றால் சிறைகளில் இருக்க நாங்கள் தயார்.

இதேவேளை, சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கென அரசியலமைபொன்றை கொண்டு வரவுள்ளனர். இவ்வேளையில் ஒன்றைக் கூற வேண்டும். அதாவது, இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் சிறுபான்மையினத்தவரின் பிரச்சினைகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

முடிந்தால் எங்களுக்கு, அதாவது சிங்களவருக்கு உள்ள, சிறுபான்மையினத்தவருக்கு இல்லாத ஒரு விடயத்தை யாராவது கூறுங்கள் பார்ப்போம். அமிர்தலிங்கம் , சம்பந்தன் போன்றோருக்கு எதிர்க்கட்சி தலைவராக முடியுமென்றால் சிவா பசுபதிக்கு சட்டமா அதிபராக முடியுமென்றால் ,ஸ்ரீபவனுக்கு பிரதம நீதியரசராக முடியுமென்றால் சின்னையாவுக்கு கடற்படை தளபதியாக முடியுமென்றால் இருக்கும் பிரச்சினைதான் என்ன? எங்களுக்கு உள்ள சகலதும் அவர்களுக்கும் உள்ளது.

இப்படியிருக்கையில், எதற்காக இந்த அரசியலமைப்பை கொண்டு வருகின்றார்கள். இதனை முற்றுமுழுதாக சர்வதேச புலம்பெயர் தமிழர்களின் தேவைகளுக்காகவும் எமக்கு எதிரான சர்வதேச சமூகத்தினருக்காகவுமே  இது கொண்டு வரப்படுகின்றது.

நான் கடந்த 25 வருட காலத்தை வடக்கு கிழக்கில் கழித்தவன் என்ற ரீதியில் அங்குள்ள மக்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதனை அங்குள்ள அரசியல்வாதிகளை விட அதிகமாக நான் அறிவேன். அவர்களுக்காக உணவு , மருத்துவம் என சகலதையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.

இதன்படி அங்குள்ளவர்களின் மனநிலையை நாங்கள் நன்கு அறிவோம். இந்நிலையில், புதிய அரசியலமைப்பு மூலம் அங்குள்ள சாதாரண மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. பதவிகளை வகிக்கும் மற்றும் டயஸ்போராக்களின் (புலம்பெயர்ந்தோர்) தாளத்திற்கு ஆடும் அரசியல்வாதிகளுக்குமே இதன் நன்மை கிடைக்கும்.

இதேவேளை நல்லிணக்கம் என்ற வசனம் அழகிய வசனமாக சமூகத்தில் பயன்படுத்தப்படுகின்றது. எனக்கு தெரிந்த நல்லிணக்கம் எல்லோரையும் இணைத்துக்கொண்டு செல்வது என்பதேயாகும். ஆனால், அரசியலமைப்பின் மூலம் அதிகாரங்களை பகிர்ந்து காணி, பொலிஸ், சட்டம், நீதிமன்றம் என சகல அதிகாரங்களையும் வழங்கி சமநிலைப் பட்டியலை இல்லாது செய்வர். இவ்வாறான அரசியலமைப்பைக் கொண்டுவருவதில் அச்சுறுத்தலான இரண்டு விடயங்கள் உள்ளன. முதலாவதாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம். அடுத்தது சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுதல் என்பனவே அவை.

இந்த மூன்றில் இரண்டு அதிகாரத்தை இல்லாது செய்ய முடிந்தவரை உதவிகளை எல்லோரும் வழங்க வேண்டும். பிரதேசத்தில், விகாரைகளில் பிக்குகளை இதற்காக அழுத்தம் கொடுக்குமாறு கூறுங்கள். அவ்வாறாக பாராளுமன்றத்தில் ஆதரவாக கையுயர்த்துபவர்களுக்கு பிரித் நூலை கட்டவும் இடமளிக்கக்  கூடாது.

அத்துடன், எனக்கு, அரசியலுக்கு வரும் எண்ணம் கிடையாது. ஆனால் நாட்டை நேசிக்கின்றேன். நாட்டின் பிள்ளையாக பிறந்து நாட்டை அழிப்பதற்காக முயற்சிப்பவர்கள் தேசத்துரோகிகளே. இவ்வாறான தேசத்துரோகிகளுக்கு 1987 , 1988 , 1989 காலப்பகுதியில் தேசத்துரோகிகளுக்கு மரணமே என ஜே.வி.பி.யினரால் எல்லா இடங்களிலும் எழுதப்பட்டிருந்தது.

அதேபோன்று தேசத்துரோகிகளுக்கு மரணத்தையே தண்டனையாக வழங்க வேண்டும். நாட்டை காட்டிக்கொடுக்கும் , நாட்டை துண்டுகளாக பிளவுபடுத்தும் தேசத்துரோகிகள் இருந்தால் அவர்களுக்கு மரணமே தண்டனை.  87, 88,89 காலப்பகுதியில் தேசத்துரோகிகள் என கொல்லப்பட்டவர்களின் சடலங்களை புதைக்க எடுத்துச் செல்லும் போது 6 அங்குலத்திற்குகூட அந்த சடலத்தை உயர்த்த இடமளிக்கவில்லை. கயிறுகளை பயன்படுத்தி இழுத்துச் செல்லப்பட்டனர் . இதேபோன்றுதான் இந்த தேசத் துரோகிகளுக்கும் செய்ய வேண்டுமெனத் தெரிவித்தார்.

SHARE