நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

349

 

 

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் திரில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. ஆட்டத்தின் இறுதி வரை எந்த அணி வெற்றி பெறும் என்று தீர்மானிக்கமுடியாத நிலை இருந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரின் இறுதி 2 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் நியூஸிலாந்து அணி இருந்தது. ஸ்ரெய்ன் வீசிய 5ஆவது பந்தை எதிர்கொண்ட எலியட் எல்லைக்கோட்டுக்கு அப்பால் சிக்ஸராக விரட்டியதன் மூலம் நியூஸிலாந்து அணி வெற்றியைத் தனதாக்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதையடுத்துக் களமிறங்கிய அந்த அணி 38 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. சிறிது நேரத்தின் பின்னர் பந்து வீச்சு 7 ஓவர்களால் குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணி 43 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றது. டூ பிளிசிஸ் 107 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 82 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் வில்லியர்ஸ் 45 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார். கொரி அன்டர்சன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். டக்வேர்த் – லூயிஸ் முறைப்படி 43 ஓவர்களில் 299 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நியூஸிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 42.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீராக களமிறங்கிய மக்கலம் சிக்ஸர், பெளண்டரி என பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அப்பால் விரட்டினார். 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஸ்ரெய்னிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் எலியட் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 73 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பெளண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றார். மொர்கல் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக டேவிட் எலியட் தெரிவானார்.

SHARE