அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன?அந்த வகையில், ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன?

704
images (3)

ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன, தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார், அதற்கான காரணிகள் எவை, ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன, அதை எப்படி அடையலாம், அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம் என பல கேள்விகள் அனைவரிடமும் எழுந்த வண்ணமுள்ளன.

 

இலங்கையில் தனிமனித சுதந்திரம் ஊடக சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவை சரியாக இல்லை. மனிதஉரிமை மீறல்கள் மனிதத்திற்கெதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் நடைபெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் உள்ளன.

சிறுபான்மை இன, மத மக்களுக்கெதிரான தாக்குதல்கள் நடந்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்டோருக்கான மீள் குடியேற்றம் அடிப்படை வசதிகள் தொழில் வாய்ப்பு போன்றவை நடைபெற்றிருந்தாலும் அது முழுமையான முறையில் இடம்பெறாததோடு ஆயுதப் படைகள் நிலங்களைப் பிடித்திருப்பதால் பல மக்கள் மீள்குடியேற முடியாமல் உள்ளது. நீதிச் சேவையாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர் போன்றோர் சுதந்திரமாகச் செயற்பட முடியவில்லை.

நீதி நிர்வாகம் தேர்தல் ஆணையம் போன்றவை சுதந்திரமாகச் செயற்பட வாய்ப்புகள் இல்லை. நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக ஆட்சி இலங்கையில் முறையாக நடைபெறவில்லை. சர்வதேச நியமங்களுக் கேற்ப இவற்றைச் சீர்செய்ய இலங்கை கடமைப்பட்டுள்ளது.

அதைச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது உட்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை அதற்காகக் கொடுக்கப்பட்ட கால எல்லையுள் ஸ்ரீலங்கா அரசு கணிசமாக எதையும் செய்யாததோடு நிலைமைகள் அப்படியே தொடர்கின்றன.

ஆதலால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதோடு, முறையான சுயாதீன விசாரணைகள் மூலம் பொறுப்புக் கூற வேண்டு மென்றும் அதிகாரப் பரவலாக்கலோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்து மாறும் சபை சிறிலங்காவைக் கேட்டுககொண்டிருக்கின்றது.

அந்தச் செயற்பாட்டிற்கு மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கையின் ஒத்துழைப்போடு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து மேற்பார்வை செய்வதோடு; பொருத்தமான நிபுணர் கொண்ட ஒரு சர்வதேசப் பொறிமுறை மூலம் தானே ஒரு விசாரணையை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் வேண்டப்பட்டுள்ளது. இதுதான் தீர்மானத்தின் சுருக்கம்.

ஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தோர் யார், அதற்கான காரணிகள் எவை?

தீர்மானத்தை அமெரிக்கா பிரித்தானியா மொன்டிநீக்ரோ மசிடோனியா போன்ற நாடுகள் கூட்டாகக் கொண்டு வந்தார்கள். பெயரளவில் இந்த நாடுகள் கொண்டு வந்திருந்தாலும் அமெரிக்க அணியிலான நாடுகள் கொண்டுவந்தார்கள் என்பதுதான் உண்மையான நிலை. இவர்கள் இந்தத் தீர்மானத்தை ஏன் கொண்டுவந்தார்கள்?.

அதற்கான காரணத்தை அறிய வேண்டுமானால் நாங்கள் இந்த உலகத்தின் நடைமுறைகளையும் அது அப்படி இயங்குவதற்கான அடிப்படைத் தன்மைகளையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தில் எந்தவொரு தனிமனிதனானால் என்ன இனமானால் என்ன நாடு என்றால் என்ன முதலில் தத்தம் நலன்களைப் பற்றியே சிந்திப்பார்கள். சரி, பிழை நீதி நேர்மை தர்மம் இவையெல்லாம் பின்னால் ஒளிந்திருப்பவையே தவிர தத்தம் நலன்களை விட்டுக்கொடுத்து நீதியை சரி, பிழையை முதன்மைப் படுத்திப் பார்ப்பதில்லை. இந்த உண்மையின் அடிப்படையில் நாம் சிந்திக்காவிட்டால் நிச்சயம் நாம் சரியான முடிவுக்கு வரமுடியாது.

ஒவ்வொரு நாடும் தத்தம் அரசியல் நன்மை பொருளாதார நன்மை உலக ஆதிக்க நன்மை பிராந்திய நன்மை என்று இவற்றின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன. அமெரிக்காவும் சீனாவும் இன்றைய உலகின் வல்லரசுகளாகத் திகழ்கின்றன. அமேரிக்கா தனக்குப் பக்கபலமாக கனடா பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளையும் சீனா தனது பக்கத்தில் ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளையும் கொண்டுள்ளன.

download (2)மற்ற உலக நாடுகள் எல்லாம் இந்த இரு கூட்டணியில் ஏதாவது ஒரு கூட்டணியில் தான் இருக்கின்றன. நடுநிலையாகவும் சில நாடுகள் உள்ளன.ஒவ்வொரு அணியும் தத்தம் நலன்களின் அடிப்படையில் தான் செயற்படுகின்றன.

(இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக இருப்பதோடு அதற்குச் சவாலாக இருக்கும் சீனாவோடு பகையாக இருப்பினும் தன் பிராந்திய நலன் கருதி அமெரிக்காவுடன் முழுமையான உறவு என்று கூறிவிட முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியாவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சீனா இந்தியாவைச் சுற்றிவர ஒரு முத்து மாலைத் திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதிலிருந்து விடுபட இந்தியா திணறுகிறது. தன் தெற்கு எல்லையில் உள்ள இலங்கையாவது சீனாவில் இருந்து விடுபட்டு தனது அணியில் இருக்க வேண்டுமென்பதே அதனது குறிக்கோள்.

அமெரிக்காவின் உதவி அதற்குத் தேவை என்றபடியால் அமெரிக்காவை இந்தியா எதிர்க்காது. ஆனால் இலங்கையை முழுமையாக எதிர்த்து அதை தன் வழிக்குக் கொண்டுவர முடியாதென்றும் அழுத்தங்களைப் பிரயோகித்து நட்பான வழியில்தான் அதை சாதிக்கலாம் என்பதே தற்போதைய இந்தியக் கொள்கையாகும்.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கையில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் அமெரிக்க அணிக்கு இந்தியா ஆதரவாக இருப்பினும் அமேரிக்கா இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் கட்டுபடுத்தக் கூடாதென்பதில் இந்தியா குறியாக உள்ளது. )

உலக சக்தி வளம் அதாவது எரிபொருள் வளம் மத்திய கிழக்கு நாடுகளில் தான் அதிக அளவில் இருக்கிறது.அவை இந்து சமுத்திரத்தினூடாகவே பிற நாடுகளுக்குச் செல்கிறது. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியக் கட்டுப்பாடுதான் உலகக் கட்டுப்பாட்டையே தீர்மானிப்பதாக உள்ளது. இப்போது இந்துசமுத்திரக் கட்டுப்பாடு குறிப்பாக இலங்கையின் கட்டுப்பாடு சீனாவிடம் சிக்கிவிட்டதால் இலங்கையை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதுதான் அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் நோக்கம்.

அத்துடன் ஸ்ரீலங்காவில் உள்நாட்டுபிரச்சனை இருக்கும்வரை நல்லாட்சி இல்லாதவரை வெளிநாட்டுத் தலையீட்டைத் தவிர்க்க முடியாது என்பதால் அங்கே ஒரு நல்லாட்சியைத் தோற்றுவிக்கவும் வேண்டும். ஆனால் உள்நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவிக் காமல் இலங்கையில் சர்வதேச நியமங்களுக்கேற்ப நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதைக் கொண்டு வருவதாக வெளியில் சொல்லப் படுகிறது.

ஈழத்தமிழரின் தேவை நோக்கம் என்ன?. அதை எப்படி அடையலாம்?

உலகில் வாழும் ஏனைய இன மக்களைப் போல எந்த விதமான இன, மத, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளும் இல்லாமல் நாம் வாழும் நாட்டில் அனைத்து மக்களும் சமமான உரிமைகளோடு வாழ வேண்டுமென்பதுதான் ஈழத்தமிழரின் நோக்கம்.

தனி நாடு எமது நோக்கமோ குறிக்கோளோ அல்ல. எமது குறிக்கோளை அடைய இருக்கும் பல வழிமுறைகளில் தனிநாடு என்பதும் ஒரு வழி. அது மட்டும் தான் சரியான வழி என்பது தமிழர் தமது கடந்த கால அனுபவத்தால் எடுத்துள்ள முடிவு. இதை நாங்கள் மிக நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். சரி எமது இந்த நோக்கத்தை எப்படி அடையலாம?. இதுதான் எங்களுடைய மிகப் பெரும் கேள்வி.

இந்த உலகம் இயங்கும் தன்மையின் அடிப்படைகளை சற்று முன்னர் தெரிந்து கொண்டோம். அதனுடைய தற்போதைய நிலைமைகளையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டால் தான் எமது நோக்கத்தை அடையும் சரியான வழியை நாங்கள் காண முடியும்.

ஒவ்வொரு நாட்டினதும் தேவைகள் என்ன நோக்கங்கள் என்ன அதற் கேற்ப அவை ஒவ்வொரு விடயத்திலும் எப்படியான முடிவை எடுக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உலகமே தத்தம் நலன்களின் அடிப்படையிலேதான் அசைவதால் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தரப் பகைவனும் இல்லை என்பது மிக மிக பெரிய உண்மை.

இந்தியாவை நம்பலாமா? அமெரிக்காவை நம்பலாமா என்பதெல்லாம் அர்த்தமற்ற மிக முட்டள்த்தனமான கேள்வி. குறிப்பிட்ட விடயத்தில் குறிப்பிட்ட நாடு ஆதரவா, அப்படியென்றால் அதில் மட்டும் அது எமது நண்பன் அடுத்த விடயத்தில் அது ஆதரவில்லையா அப்போது அது எமக்கு எதிரி. அவ்வளவுதான். நாம் வெற்றி பெற வேண்டுமானால் நாம் பலமடையவேண்டும், எதிரி பலவீனப்பட வேண்டும். இதுதான் அடிப்படை.

தீர்வு உடனடியாக நடந்து விடாது. மந்திர மாயா சாலத்தால் தனிநாடு கிடைக்காது. ஆனால் நாம் பலமடைவதும் எதிரி பலவீனமடைவதும் இரண்டுமே தொடருமானால் நிச்சயம் ஒருநாள் நாம் வெற்றி அடைவது உறுதிதானே. என்றோ ஒரு நாள் நமக்குக் கிடைக்கவேண்டிய ஒன்றுக்காக இன்று கிடைப்பதை வேண்டாம் என்பது முட்டாள்தனம். அது நாம் பலம் அடைவதற்கு அல்லது எதிரியைப் பலவீனப்படுத்துவதற்கு பயன்படுமானால் அதை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல எதிரியை இது முழுமையாக அழிக்காது சும்மா கொஞ்சம் பலவீனப்படுத்துவதால் பயன் இல்லை என்று அதைப் புறக்கணிப்பதும் வெற்றிக்கு வழி அல்ல. நாம் திடமாக உணர வேண்டியது வெற்றி ஓரிரவில் கிடைப் பதல்ல.நாம் பலமடைந்துகொண்டும் எதிரி பலவீனப்பட்டுக்கொண்டும் போகும்போது இறுதியில் கிடைப்பது தான் வெற்றி. இதுதான் எமது மிகச் சிறந்த போராட்ட வழி.

 

ஈழத்தமிழர் பிரச்சினை மிக மிக நுட்பமாக மிகக் காரசாரமாக அக்கு வேறு ஆணி வேறாக ஒரு சர்வதேச அரங்கில் அலசப்பட்டிருக்கிறது. தத்தம் ஆதாயங்களுக்காக சில நாடுகள் எதிர்த்தும் சில வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தாலும் அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் எமது பிரச்சனை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சர்வதேசத்தில் இருந்து தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. இலங்கை அரசு தீர்மானத்தை செயற்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. சர்வதேச விசாரணையாளரையும் நாட்டிற்குள் அனுமதிக்காமல் இருக்கலாம். ஆனாலும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கத்தின் மோசமான கெடுபிடிகள் குறையும்.

nadukadantha-elam-1தமிழர் தமது போராட்டங்களைத தொடர சர்வதேச ஆதரவு இருக்கும். இவற்றிற்கு மேலாக பல நாடுகள் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தும் சாத்தியம் உண்டு. அதனால் இலங்கைக்கு நெருக்கடி அதிகரிக்கும்.

இலங்கை தொடர்ந்து அடம்பிடித்தால் அடுத்த வருடம் இன்னும் கடுமையான சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும். உடனடியாக நாம் எதையும் பெற முடியாது. ஆனால் எமது விடுதலைப் பாதையில் நாம் சற்றுத் துரிதமாக முன்னேற இது வழி சமைத்துள்ளது.

நிச்சயமாக இது எமது எதிரியைப் பலவீனப்படுத்துவதோடு, நாம் பலமடைய உதவும். அதனால் எங்களுக்கு சுயநிர்ணயம் கிடைக்கவில்லை தனிநாடு கிடைக்கவில்லை அதைப் புறககணிப்போம் என்று கூறினால் அதைவிட மூடத்தனம் என்ன இருக்கமுடியும்.

அமெரிக்கா சொன்னார்களா தமிழருக்காகத்தான் நாங்கள் பிரேரணை கொண்டு வருகிறோம் என்று. அவர்கள் தமது தேவைக்காக கொண்டுவருகிறார்கள். அதை முடிந்தவரை எமக்குச் சாதகமாக வலிமையாக்கி நாம் பயன் பெற வேண்டுமே தவிர அதை எதிர்க்கவோ நிராகரிக்கவோ கூடாது. அதுவும் சும்மா வெளிப்படையாக சரி பிழை நீதி அநீதி என்பவற்றைக் கதைப்பதொடு நில்லாமல் அகப்புற இராஜதந்திரச் செயற்பாடுகள் அவசியம்.

இராஜதந்திரச் செயற்பாடுகள் முழுவதும் பகிரங்கப் படுத்தக் கூடியதாக இருக்காது. அதற்காக உண்மையை விளங்கிக்கொள்ள முடியாத பொதுமக்களைக் குழப்பி செயற்பாட்டாளர்களை விமர்சிப்பதால் எம்மை நாமே பலவீனப் படுத்திக் கொள்கிறோம்.

இது தேவை தானா?. அமெரிக்கா தமிழருக்கு தீர்வு தரப்போகிறார்கள் என்று முதலில் இல்லாததொன்றைக் கூறி மக்களைக் குழப்பி உசுப்பேற்றிவிட்டு பின்னர் அமெரிக்கா எங்கள் எதிரி

இந்தியா துரோகி என்று ஏன் இந்த ஊடகங்கள் மக்களை தவறாக வழி நடத்த வேண்டும்?. உதவியாய் இல்லாவிட்டாலும் உபத்திரம் இல்லாமல் ஆவது இருப்பது நல்லது.
தீர்மானத்தின் வெற்றிக்கு உழைத்தோர் யார் யார்?. தீர்மானத்தை வரவேர்றிருப்போர் யார் யார்?.

அதற்கான செயற்பாட்டில் நிட்சயமாக சனல்-4 மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அத்திவாரமாக உள்ளன. பின்னர் அமெரிக்க அணியிலுள்ள நாடுகளைத் தான் முதலாவதாக குறிப்பிட வேண்டும். அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சொல்லலாம். தொடர்ந்து புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகளும் நல்ல பயனைக் கொடுத்தன.

தமிழ் நாட்டின் பலமும் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தது. தீர்மானத்தின் வெற்றிக்கு இவர்கள் அனைவரின் செயற்பாடுகளும் பாராட்டப் பட வேண்டியவைதான்.இதன் வெற்றிக்காக உழைத்த அனைத்து நாடுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் TGTE, CTC, BTF, GTF போன்ற அமைப்புகளும் இதை வரவேற்றிருக்கின்றார்கள்.

தீர்மானத்தை எதிர்ப்போர் யார் யார்? அவர்களின் தேவை, நோக்கம் என்ன?.

இலங்கையையும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சீனாவும் சீனஅணிநாடுகளும் இதை எதிர்க்கிறார்கள்.அது விளங்கிக்கொள்ளக் கூடியது தானே. தனது தனிச் சிங்களப் பவுத்த நாட்டு உருவாக்கத்திற்கு எதிரானதால் இலங்கை எதிர்க்கிறது. அதுவும் யதார்த்தமானது. சர்வதேச விசாரணையால் இலங்கையோடு சேர்ந்து தானும் அகப்பட வேண்டி வரும் என்பதால் இந்தியா ஆதரிக்க வில்லை.

அதுகூட விளங்கிக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் ஒரு தமிழ்க் குழுவினர் இதை ஏன் எதிர்க்கிறார்கள்?. அதுதான் பலருக்கும் விளங்கிக் கொள்ள முடியாத புதிராக உள்ளது. தமிழருக்குச் சாதகமான ஒன்று தம்மால் சாதிக்கப்படாமல் வேறு யாரோ அதற்குக் காரணமாகிறார்கள் என்ற பொறாமையா, அல்லது எதையாவது கூறி குழப்புவதன் மூலம் தம்மை முன்னிலைப் படுத்தலாம் என்பதாலா?. அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அடுத்து என்ன நடக்கலாம்?. ஈழத்தமிழரின் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்?

download (3)ஜெனீவாக் களத்தால் மட்டும் தமிழர் வெற்றி பெற முடியாது. ஏதோ ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டினால் மட்டும் அதைப் பெற முடியாது. பல்வேறு தளங்களில் பல்வேறு செயற்பாடுகளில் நாம் ஈடுபட வேண்டும்.

நமக்குப் பலம் சேர்க்கும் விடயங்களையும் எதிரியைப் பலவீனப் படுத்தும் விடயங்களையும் தொடர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம். அனைத்துத் தமிழர் தரப்பும் தாம் தாம் செய்யக்கூடியதை செய்துகொண்டு அதை மட்டும் மக்களுக்கு தெரிவிப்பதோடு, நிற்க வேண்டுமே தவிர இன்னொரு அமைப்பு செய்யும் செயற்பாடுகளை விமர்சிப்பதால் எம்மை நாமே பலவீனப் படுத்தக் கூடாது.

மக்களுக்கு நன்மை செய்யாத அமைப்புகளை மக்களே இனம்கண்டு தவிர்த்துக் கொள்வார்கள். அதை இன்னொரு அமைப்புச் செய்ய வேண்டியதில்லை. ஒற்றுமைதான் வெற்றியின் அத்திவாரம். எந்த நாட்டையும் நிரந்தர எதிரியாகவோ நிரந்தர நண்பனாகவோ பாராமல் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சாதுரியமாய் சாணக்கியமாய் செயற்படுவோம்.

 

SHARE