பான் கி மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

169

download

பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வழங்குங்கள் என ஐ.நா செயலாளரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பொது மக்கள் முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவித்தார்.

போர் நடைபெற்ற போது, தமிழ் மக்களை ஐ.நா சபை காப்பாற்ற தவறியதென்ற குற்றச்சாட்டு பலரிடமும் இருக்கின்றது.

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான விசாரணை மற்றும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும், நாளை வெள்ளிக்கழமை நண்பகல் 12 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக பாதிக்கப்பட்ட ஈழ மக்கள் ஒன்று கூட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ.நா செயலாளர் பான்கீ மூன் அவர்களின் கவனத்தினை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், எமக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்இ நீதிகள் உறுதிப்படுத்தப்படவேண்டும். அதன் பின்னர் தான் தேசிய நல்லிணக்கம் ஏற்பட முடியும் என்பதனை ஆணித்தரமாக கூறுகின்றோம். அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.

ஆனால்,இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஐ.நா செயலாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு நீதி வழங்குங்கள் என அவரை எதிர்த்துக்கேட்பது போன்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்தபோராட்டத்தினை தவறான கண்னோட்டத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை எமது பிரச்சினையில் இனிமேலும் தவறு விடக்கூடாது. இலங்கை அரசின் பசப்பு வார்த்தைக்கு ஏமாறாமல், எமக்கு நீதி வழங்க முன்வர வேண்டுமென்று பணிவான வேண்டுகோளை விடுக்கின்றோம்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE