பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எது இந்தச் சர்ச்சைக்கு சபையில் பிள்ளையார் சுழி போட்டார் ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார எம்.பி.

301

 

 

பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எது என்ற வினா தென்னிலங்கை அரசியல் களத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், இது விடயம் பற்றி நாடாளுமன்றத்திலும் நேற்று கேள்வி எழுப்பப்பட்டு சூடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம், சம்பிரதாயம், கடந்தகால வரலாறு ஆகிய விடயங்களைச் சுட்டிக்காட்டி இந்தச் சர்ச்சைக்கு சபையில் பிள்ளையார் சுழி போட்டார் ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார எம்.பி.. இதனைத் தொடர்ந்து தினேஷ் குணவர்த்தன எம்.பி., விமல் வீரவன்ஸ எம்.பி., அஜித்குமார எம்.பி. ஆகியோரும் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர். நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எது? எதிர்க்கட்சி எது? என்பதே அவர்களின் முக்கிய வினாவாக இருந்தது. இதை மையப்படுத்தியே அவர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

anura (1)

இவர்களின் வாதங்களையடுத்து கருத்து வெளியிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, மேற்படி விடயம் தொடர்பில் தனக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆகவே, இதுபற்றி தாம் ஆராய்ந்த பின் முடிவை அறிவிப்பார் எனக் கூறினார். நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சமல் ராஜபக்‌ஷ தலைமையில் கூடியது. சிங்கப்பூரின் முன்னாள் பிரதமருக்கு அனுதாபம் தெரிவிப்பு முடிவடைந்த பின்னர் சபாநாயகரின் அனுமதியுடன் சபையில் வினாவொன்றை எழுப்பிய அநுர எம்.பி. கூறியவை வருமாறு:- “நிலையியற் கட்டளைகளின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்படாத விடயங்கள் வரும்போது நாடாளுமன்றத்தில் பின்பற்றப்பட்டுவரும் சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த விடயம் தொடர்பில் நோக்கப்படும்.

அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் நிலையியற் கட்டளையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு அமையவே எதிர்க்கட்சித் தலைவர் பற்றிய விடயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1977ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1983 முதல் 1988 வரையான காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தைப் புறக்கணித்ததால், 8 ஆசனங்களைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுர பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார். இதைத் தொடர்ந்து 1989 முதல் 1994ஆம் ஆண்டுவரை 67 ஆசனங்களைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர் 1994.08.25 முதல் 1994.10.24 வரை 94 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் காமினி திசாநாயக்க எதிர்க்கட்சித் தலைவராகவும், 1994 முதல் 2000 ஆண்டுவரை 94 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவும், 2000 முதல் 2001 வரை 89 ஆசனங்களையும், 2001 முதல் 2002 வரை 77 ஆசனங்களையும் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மேலும் 2002 முதல் 2004 வரை 77 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ராஜபக்‌ஷவும், 2004 முதல் 2010 வரையும், 2010 முதல் 2015 வரையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தனர். இவ்வாறாக எதிர்க்கட்சித் தரப்பில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று என்ன நடந்துள்ளது? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக இருக்கிறார்.

பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை உள்ளது. பிரதமர் தலைமையிலான அமைச்சரவையைத்தான் அரசு என்று கூறுவோம். இப்போது இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசில் உள்ளது. எனவே, எது எதிர்க்கட்சி என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இவ்வாறிருந்தால் இந்த நாடாளுமன்றத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது. இதை விளையாட்டு மைதானமாக ஆக்க முடியாது. ஆனால், இன்று அப்படியான நிலையை நோக்கித்தான் இந்த நாடாளுமன்றம் செல்கிறது. எனவே, எதிர்க்கட்சி எது? எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பதை சபாநாயகர் என்ற வகையில் இதுபற்றி ஆழமாக ஆராய்ந்து நீங்கள் கூறவேண்டும். இதற்குத் தீர்வு வழங்கவேண்டும்” – என்றார். இதையடுத்து கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி., “நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு நாம் செயற்படமுடியாது. அதைப் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், எதர்க்கட்சி எது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தை நகைச்சுவைக்குரிய இடமாக மாற்ற இடமளிக்க முடியாது. நாடாளுமன்றத்தின் நலன்கருதி இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து தீர்வு கூறும் பொறுப்பு சபாநாயகர் என்றவகையில் உங்களுக்குள்ளது. எனவே, நீங்கள் சிறந்த தீர்வை வழங்கவேண்டும்” – என்றார். இதன் பின்னர் கருத்து வெளியிட்ட நிமல் வீரவன்ஸ எம்.பி., “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவின் ஆட்சியை ஏகாதிபத்திய ஆட்சி என்று கூறினார்கள். ஆனால், இது புதுமையான ஏகாதிபத்திய ஆட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி எது என்ற விடயத்தில் நீதியை நிலைநாட்டவேண்டும்” – என்றார். இதையடுத்து கருத்து வெளியிட்ட சுயாதீன எம்.பி. அஜித்குமார, “அரசு எது? எதிர்க்கட்சி எது? என்ற மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 எம்.பிக்கள் அரசில் இணைந்து அமைச்சு, இராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர். முன்னைய காலத்தில் மறைமுகமாக நடந்துவந்த விளையாட்டு இப்போது வெளிப்படையாகவே இடம்பெறுகின்றது” – என்றார். இவர்களின் உரையைச் செவிமடுத்த சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ “இந்த விடயம் தொடர்பில் காலம் எடுத்து ஆராய்ந்து சிறந்த தீர்வொன்றை வழங்குகிறேன்” – என்று கூறினார். இதன் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “11 ஆண்டுகள் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது அரசின் பிரச்சினை அல்ல. எதிர்க்கட்சியின் பிரச்சினை. இதை எதிர்க்கட்சிதான் பேசித் தீர்க்கவேண்டும். 1952ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளது. ஜனாதிபதி தனக்குத் தேவையான ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கமுடியும் என்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பொன்று உள்ளது” – என்றார். இதையடுத்து கருத்து வெளியிட்ட சுசில் பிரேமஜயந்த எம்.பி., “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 138 எம்.பிக்கள் இந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதிலிருந்த 26 உறுப்பினர்கள் அரசில் அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையிலும் 112 எம்.பிக்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இன்று நாடாளுமன்றம் ஒரு விசேட நிலையில் உள்ளது. கட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்” – என்றார். பின்னர் நகைச்சுவையாகக் கருத்து வெளியிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, “நீங்களும் அமைச்சுப் பதவியை எடுத்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம்” என்றார். இதன் பின்னர் கருத்து வெளியிட்ட எம்.பி. அநுர பிரியதர்ஷன யாப்பாவும், “இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்” என்று கூறினார். இதையடுத்து கருத்து வெளியிட்ட அநுரகுமார எம்.பி., “நீங்கள் (சபாநாயகர்) நாட்டைப் பார்த்து கருத்து வெளியிடக்கூடாது. நாடாளுமன்றத்தைப் பார்த்தே கருத்து வெளியிடவேண்டும்” – என்றார். இதையடுத்து கருத்து வெளியிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதாகக் கூறி சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

SHARE