பிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா?

267
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான தடுப்புக்காவல் உத்தரவு 2016ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் நாள் வரை செல்லுபடியாகும்.

இந்த நிலையில், பிள்ளையான் நேற்று மாதாந்த பரிசோதனைக்காக கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலபிட்டிய முன்னிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நிறுத்தப்பட்டார்.

அப்போது, சந்தேக நபரான பிள்ளையான், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக, பிள்ளையானிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பிள்ளையானை மாதாந்த பரிசோதனைக்காக டிசெம்பர் 10ஆம் நாள் முன்னிறுத்தும்படி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயன்றதாக, பிள்ளையான் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, இந்த வழக்கை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE