புத்தாண்டில் பதவி ஏற்ற பெண் மேயரை சரமாரியாக சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்: மெக்சிகோவில் பயங்கரம்

245

 

மெக்சிகோ நாட்டில் பதவி ஏற்று ஒரு நாள் முடிவடைவதற்குள் மேயரை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் டெமிக்ஸ்கோ என்ற நகர் அமைந்துள்ளது.

ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் மேயராக Gisela Mota என்ற பெண்மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மெக்சிகோ நாட்டின் ஜனநாயகப் புரட்சி கட்சியை சேர்ந்த அவர் கடந்த புத்தாண்டு தினத்தில் நடந்த கோலாகலமான விழாவில் நகர மேயராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இதே நகரில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு நேற்று மர்ம நபர்கள் 5 பேர் துப்பாக்கிகள் ஏந்தியவாறு காரில் வந்துள்ளனர்.

வீட்டிற்கு வெளியே பாதுகாப்பிற்காக இருந்த பொலிசாரை சுட்டுவிட்டு, மேயரையும் சரமாரியாக சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர்.

எச்சரிக்கை செய்யப்பட்ட பொலிசார் கொலையாளிகளை காரில் துரத்தி சென்றுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 கொலையாளிகள் கொல்லப்பட்டனர். எஞ்சிய 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.

எனினும், எந்த காரணத்திற்காக மேயரை சுட்டுக்கொன்றனர் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகத நிலையில், சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE