புயலின் தேடல் ; வவுனியா வடக்கில் அழிந்து செல்லும் வெடிவைத்தகல் தமிழ்க் கிராமம்!

656
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வெடிவைத்தகல் கிராமம் மெல்ல மெல்ல அழிந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தின் வடுக்களை தாங்கிய இக்கிராமம் வவுனியாவின் பழைய கிராமங்களில் ஒன்றாக காணப்பட்ட போதிலும்- போர் சூழல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதால் இப்பகுதி காடுகள் நிறைந்ததாக மாறியுள்ளது. 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த இக்கிராமத்தில் தற்போது வசிப்பார் அற்ற நிலையில்- வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவில் உள்ள கோவில் புளியங்குளத்தில் மாத்திரம் 9 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.வயல் வெளிகளும் காடுகளும் சூழப்பெற்று- நீர் வளம் நிறைந்திருந்த வெடிவைத்தகல் கிராமமானது தற்போது செழிப்பிழந்து- மக்களை இழந்து வெறும் வனாந்தரமான கிராமமாக மாறியிருக்கின்றமை கவலைத் தரும் விடயமாகும்.இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் பலர் இன்று வவுனியாவிலும் வேறு பிரதேசத்தில் குடியேறியிருக்க அங்குள்ள அழிந்த கட்டிடங்களும் மக்கள் குடியேறுவார்கள் என கட்டப்பட்ட புதிய பாடசாலையும் பற்றைக்காடுகளால் நிறைந்து ஆளரவம் அற்ற பிரதேசமாக மாறியிருக்கின்றது.

இந்நிலையில் இக்கிராமத்திற்கு மின்சார வசதி- வீதி வசதிகள்- காடுகளை அழித்து பாதுகாப்பான இடமாக மாற்றி அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாமையினாலேயே மீள்குடியேற வில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE