புலனாய்வு பிரிவில் ஆளணி வளப் பற்றாக்குறை

228
இலங்கையின் புலனாய்வு பிரிவில் ஆளணி வளப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்ற விசாரணைப் பிரிவில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 7000 கோவைகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த விசாரணைகளை மேற்கொள்ள அந்த துறைகளைச் சார்ந்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் 650 பேர் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் சுமார் 125 கோவைகள் என்ற அடிப்படையில் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விசாரணைகளை துரிதப்படுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொலிஸார், பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

நாளுக்க நாள் முறைப்பாடுகள் அதிகரித்துச் செல்வதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடத்தப்பட்ட ஆவணங்கள், வழக்குத் தொடர பரிந்துரை செய்யப்பட்ட ஆவணங்கள் பல சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை இன்னமும் திரும்பக் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கணனி குற்றச்செயல்கள், குடிவரவு குடியகழ்வு சட்ட மீறல்கள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள அதிகளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வு பிரிவிற்கு நேரடியாக கிடைக்கும் முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், பல்வேறு துறைகளின் அடிப்படையிலான முறைப்பாடுகளை விசாரணை செய்து தீர்வு வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் தொலைபேசி நிறுவனங்கள் மூன்று மாதங்களின் பின்னர் தகவல்களை அளிப்பதனால் விசாரணைகளை நடாத்திச் செல்வதில் சிக்கல் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

SHARE