பேச்சு சுதந்திரம் தொடர்பில் பிரதமரின் அதிரடியான நடவடிக்கை..!

118

இலங்கையில் பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்மூலம் இனமத ரீதியான வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதனை தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 44 ஆவது கூட்டத்தொடர் சனிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அத்தோடு சிங்கப்பூரின் மத நல்லிணக்கத்தை பாதுகாத்தல் சட்டம், பிரித்தானியாவின் இன மற்றும் மத வெறுப்புணர்வு தொடர்பான பொதுவான கட்டளை சட்டம், அவுஸ்திரேலியாவின் இன பாகுபாடு தொடர்பான சட்டம் மற்றும் கனடாவின் குற்றவியல் சட்டம் போன்றவற்றையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்தாலோசிக்க வேண்டும். அதன்மூலம் கிந்தொட்ட மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட இன மற்றும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தவிர்க்க முடியும்.

மேலும் பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதானது தற்போது காணப்படுகின்ற சுதந்திரத்திற்கு இடையூறாக அமையும் என சிலர் கருதலாம். ஆனால் மக்களுக்கிடையே வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கெதிராக மேற்படி சட்டங்களை முறையான விதத்தில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இன, மதங்களுக்கிடையில் ஏற்படும் வன்முறை சம்பவங்களை தடுக்க முடியும். அதனால் தற்போதுள்ள நிலையில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE