பொருளாதார நெருக்கடியும், IMFஇன் கடன் உதவியும்

99

கடந்த கால ஆட்சியாளர்களின் செயற்பாடுகள், கொவிட் தொற்றுப் பரவல், அரசியலில் ஏற்பட்ட ஸ்திரத்தன்மை என்பன இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்ற காரணிகளாகும். இவ் நெருக்கடிச் சூழலில் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இலங்கை மீளவேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தான் ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி, பலகட்டப் பேச்சுக்களையும் நடாத்தி, இன்று சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் முதல்கட்டப் பணம் இலங்கைக்குக் கிடைத்திருப்பதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்திருந்தபோதிலும், தற்போது விலைகளில் சிறியளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காணமுடிகிறது. எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் பெரிதாக ஏற்படவில்லை. டொலரின் பெறுமதியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கையின் ரூபாவின் பெறுமதியும் வலுப்பெற்று வருகிறது.

மறுபக்கத்தில், எதிர்க்கட்சிகள் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் எனவும், நீண்ட காலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கானத் தேர்தலையும் நடத்தவேண்டும் எனவும் கடுமையாக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். நாட்டில் தொழிற்சங்கப் போராட்டங்களும் அவ்வப்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களும் இதற்குள் அடங்கும். போராட்டங்களின் போது பொலிசாரின் அத்துமீறல்களும் தொடர்கின்றது.

இலங்கையினது தற்போதைய நெருக்கடிச் சூழலில் தேர்தல் ஒன்றிற்குச் செல்வதை விடுத்து, நாட்டினை பொருளாதார ரீதியாக வளப்படுத்துவதே தனது நோக்கம் என்பதனை வெளிப்படையாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறியிருக்கிறார். வரவுசெலவுத் திட்டத்தில் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி, தற்போது அரசிடம் இல்லை என்பதை பாராளுமன்றிலும், நீதிமன்றிலும் தெளிவாக அறிவித்துள்ளது அரசு.

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் நிலைப்பாடு தொடர்பில் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை அவதானிக்க முடிகிறது. அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடாத்துகின்றபோதிலும் தீர்மானங்களை சரியாக எடுக்க முடியாத நிலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது.
இதேவேளை, இலங்கை கோரிய கடனில் முதல் கட்ட பணத்தினை வழங்கியுள்ள சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரலில் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கடன்களைப் பெற்று சுமைகளை மக்கள் மீது ஏற்றிவிட்டு தாம் தப்பித்துக்கொள்வதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ள இலங்கையில், நிலையான அபிவிருத்திக் கொள்கைகள் அரசுகளால் கடைபிடிக்கப்படுவதில்லை. கடந்தகால அரசுகள் செய்த தவறே அதுதான். இறக்குமதிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உற்பத்திக்குக் கொடுத்திருந்தால் நாடு இன்று வங்குரோத்து அடைந்திருக்காது. நாம் மீண்டும் மீண்டும் சர்வதேச நாடுகளிடமும், அமைப்புக்களிடமும் கடன்களைக் கோரி நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியிருக்காது.

அதுபோல் தான் இன்றைய அரச கொள்கைகள் அனைத்தும் அடுத்துவரப்போகும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வரும் தரப்பால் கடைபிடிக்கப்படுமா?. அரச மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் மீண்டும் மக்களின் மீதே கடன் சுமையை ஏற்றும். இந்நாட்டிற்கு முதலீட்டாளர்கள் வரவேண்டும், சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படவேண்டும், உள்ளுர் உற்பத்திகள், ஏற்றுமதிகள் அதிகரிக்கப்படவேண்டும், வீணான செலவுகள் கட்டுப்படுத்தப்படவேண்டும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை பலப்படுத்தப்படவேண்டும். இவையெல்லாம் இந்நாட்டில் சரிவர நடைபெறவேண்டுமெனில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கானத் தீர்வும், பௌத்த மேலாதிக்க சிந்தனையிலும் மாற்றங்கள் வரவேண்டும். அப்போதுதான் இந்த நாடு வளம்பெறும்.

SHARE