போதனா வைத்தியசாலையில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்! வெளிவராத உண்மைகள் பல

13

 

வைத்தியசாலைகளில் சில தவறுகள் இடம்பெறுகின்றன. அவற்றை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதற்கான காரணம் வைத்தியசாலை நிர்வாகம் தமது வைத்தியசாலையில் இடம்பெறும் தவறுகளை இனங்கண்டு அவற்றை சீர் செய்ய வேண்டும் என்பதாகும்.

யாழ். போதனா வைத்தியசாலையின் அசமந்த போக்குகளை செய்தியாக வெளியிட்டு தனது ஊடகக் கடமையைச் செய்த ‘தமிழ்வின்’ இணையத்தளத்தை ‘நிராகரிக்க வேண்டும்’ என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

வைத்தியரின் பதிவு
இந்த விடயம் தொடர்பான அவரின் முகப்புத்தக பதிவுக்கு எமது மக்கள் அவர்களின் கருத்துகள் மூலம் சில கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

அதாவது,”யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மீது தொடர்ந்து இத்தகைய குற்றசாட்டுகள் வந்த வண்ணமே இருக்கிறது. ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றசாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் செய்தி வெளியிடும் ஊடகங்களின் மீது வெறுப்பை ஏன் உமிழ்கிறீர்கள்?”

”எல்லா ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருகின்றன. அப்படியிருக்கையில் இந்த ஊடகத்தை மட்டும் குறிப்பிட்டு புறக்கணிக்க கோருவது ஏன்?”

”ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகின்றன என்றால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலமும் தவறானது என்கிறீர்களா?”

ஒரு விடயத்தில் நடுநிலையாக இருந்து அதன் உண்மைத்தன்மையை அறிய விரும்பும் பல மக்களின் கேள்விகளாகவே மேற்காண்பவை அமைகின்றன.

இவ்வாறு சமூகத்தில் நடக்கும் தவறுகளை வெளிக்கொண்டுவரும் நோக்கிலே தமிழ்வின் தளமும் யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுகளை செய்தியாக வெளியிட்டோம்.

அனைத்து ஆதாரங்களுடனும் செய்தியை வெளியிட்ட எமது தமிழ்வின் தளத்தின் மீது காழ்ப்புணர்வை வெளியிட்டிருந்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி மக்களின் இந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அவர்கள் தமிழ்வின் தளத்திற்கு ஆதரவளிப்பதாக முகப்புத்தகத்தில் பதிவிட்டாலும் அது ஆச்சரியமளிக்கப்போவதில்லை.

தமது வைத்தியசாலையில் இடம்பெற்ற தவறுகளுக்கு பதில் சொல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து பயணிக்கும் தமிழ்வின் ஊடகத்தை தாங்கள் குறி வைப்பதன் நோக்கம் என்ன?

எங்கள் செய்தி தளம் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எந்த அதிகாரவர்கத்திற்கும் அடிபணியாமல் துணிந்து உண்மைகளை உரக்க சொல்வதை நீங்கள் தடுக்க நினைகின்றீர்களா? அல்லது எமது செய்தி தளத்தின் உண்மைத்தன்மையை அறிந்த மக்கள் எமது செய்தியை பார்த்துவிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் தவறுகளை அறிந்துகொண்டு உங்களிடம் கேள்விகளை கேட்டால் பதில் சொல்ல முடியாத அச்சமா? என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன.

நாம் வெளியிட்ட அத்தனை செய்திகளுக்கும் தகுந்த ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. அதிலும் பாதிக்கப்பட்ட மக்களே உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய”ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகின்றன என்றால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலமும் தவறானது என்கிறீர்களா?” என்ற பொதுமகன் ஒருவரின் கேள்வியை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம்.

இவை அனைத்திற்கும் அப்பால், ”பல்லாயிரக்கணக்கான மக்கள் தினம் சிகிச்சை பெறும் நிலையத்தில் ஒரு சில தவறுகள் நடந்தால் அதனை எமக்கு சுட்டிக் காட்டலாம். நாம் அவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுப்போம் .”என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்தின்படி எம்மை போன்ற பொறுப்புமிக்க ஊடகங்கள் அவர் கடமையாற்றும் வைத்தியசாலையின் தவறுகளை சுட்டிக்காட்டும் வரை அவை பற்றிய எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதற்கு எத்தனிக்க மாடடார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றது.

எனினும் மீண்டும் ஒருமுறை எங்கள் கடமையை சரியாக செய்ய தமிழ்வின் தளத்திற்கான ஒரு வாய்ப்பாக நாம் இதை கருதி பின்வரும் தவறுகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கடந்த 08.04.2024 அன்று கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட இதய சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கு வைத்தியர்களின் தவறே காரணம் என அப் பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் 18.4.2024 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்வாறு யாழ்.ஊடக அமையத்தில் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? அல்லது இத்தனை ஊடகங்களை அழைத்து குறித்த நபர் உங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றாரா என்பதை மக்களுக்கு அறிய தருமாறு தமிழ்வின் தளம் சுட்டிக்காட்டுகின்றது என்பதை அறிய தருகின்றோம்.

இதேபோன்று யாழ்ப்பாணம் – அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகையின் அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்படுவதால் பிரதேசவாசிகள் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டி, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

”தவறுகள் நடந்தால் அதனை எமக்கு சுட்டிக்காட்டலாம். நாம் அவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுப்போம் .” என்று கூறிய வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி, மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளீர்களா? மக்கள் இனிவரும் காலங்களில் உங்கள் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கமாட்டார்கள் என நம்புகின்றோம்.

01.02.2024 அன்றைய பொழுதில் வடமாகாணத்தின் பல இடங்களில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த கிளினிக் நோயாளர்கள், யாழில் தாதியர் வேலை நிறுத்தத்தினால் திருப்பியனுப்பப்பட்டதனை அவதானிக்க முடிந்ததுடன் இதன்போது மக்கள் அனுபவித்த துயரங்கள் தொடர்பிலும் தமிழ்வின் செய்தி வெளியிட்டிருந்தது.

இவ்வாறு சிகிச்சைக்காக நீண்ட தூரத்திலிருந்து வருகை தந்தவர்களின் பரிதாபமான நிலையை சமூக அக்கறையுடன் பார்த்த சிலர், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் சிகிச்சைக்காக செல்லும் தேவையுடையோர் வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்த பின் செல்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க உதவும் என தெரிவித்திருந்தனர்.

மேலும் இணையத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கத்தினை பெற முடியும் என்று கிளினிக் நோயாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கண்ணுற்ற சமூக விடய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஆனால் மக்கள் மீதான இந்த அக்கறையை கருத்திற்கொண்டு அன்றைய தின வைத்திய சேவைகள் குறித்து வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி எந்த கருத்தும் மக்களுக்கு தெரிவிக்காமல் இருந்தமை சற்று வருத்தமளிக்கின்றது.

குறைந்தது முகப்புத்தகத்திலாவது அன்றைய சேவை குறித்து அறிவித்திருக்கலாம்.

தனது தாயாரை கண் சத்திர சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்த பெண்ணொருவர் அவரது தாயாருக்கு உணவு வழங்க சென்ற போது யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அநாகரிகமான முறையில் நடந்து நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை அருகில் இருந்த விடுதிக்கு சென்று வேறொரு ஆணொருவருடன் முரண்பட்டு அவரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இதற்கு முன்னரும் பல தடவைகள் நோயாளிகளுடனும் பார்வையாளர்களுடனும் அநாகரீகமான முறையில் நடந்ததால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் இவர் தொடர்ந்தும் இவ்வாறே செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தியே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்னும் அங்கு கடமையில் உள்ளாரா? அவரின் நடவடிக்கைகள் முன்னதாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நீங்கள் தொடர்ந்து அவரையும் மக்களுக்கான அவருடைய சேவையையும் கண்காணித்து வருவீர்கள் என்று நம்புகின்றோம்.

இவை மட்டுமன்றி இன்னும் பல குற்றச்சாட்டுகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இறுதியாக ஒரு மனிதாபிமான விடயத்தை வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடுமையாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தரப்பு தெரிவித்திருந்தது.

அவர் மது போதையில் தவறாக நடந்துகொண்டார் என கூறிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தரப்பு தாம் நிதானமாக இருந்தும் கடைக்கோடி மக்கள் நாடிவரும் வைத்தியசாலையில் ஒருவரை இவ்வளவு மோசமாக தாக்குவது அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிட்டார்களே!

இதன் மூலம் மது போதையில் தவறாக செயற்பட்டவரை நியாயப்படுத்தவில்லை என்பதையும் அவ்வாறானவர்களையும் பொறுமையாக கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கருதுகின்றோம்.

தமது உயிர்களை காப்பாற்ற வைத்தியசாலையை நாடி வரும் மனித உயிரின் மதிப்பை வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அறிவார் என்று நினைக்கிறோம்.

அப்படியிருக்கையில் மக்களுக்கு மருத்துவம் மட்டுமன்றி அவர்களுக்கு சற்று கரிசனையும் காட்டும் உத்தியோகத்தர்களை வேலைக்கு அமர்த்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

யாழ்.போதனா வைத்தியசாலை குறித்து வெளிவந்த குறித்த குற்றச்சாட்டுகளை எப்போது மக்களுக்கு அறிய தர தமிழ்வின் தளம் தவறியதில்லை. இனிவரும் காலங்களிலும் இவ்வாறான அனைத்து விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிடுவதை தடுக்க முயல்வது என்றும் நிறைவேறாத விடயமாகும்.

எனவே யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி கூறியதை போன்று தகுந்த ஆதாரங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலோ அல்லது இனிவரும் காலங்களில் நடைபெறும் தவறுகள் தொடர்பிலோ நீங்கள் அதாவது உங்கள் நிர்வாகம் முன்னெடுக்கும் தீர்வு நடவடிக்கைகளையும் தமிழ்வின் தளம் தவறாமல் செய்தியாக வெளியிடும் என்பதை கடமையுணர்வுடன் அறிய தருகின்றோம்.

SHARE