மக்களை ஏமாற்றுதல் அரசியல்வாதிகளின் இரத்தத்தில் ஊறிய ஒன்று

361

மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக லஞ்ச- ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக பொது பல சேனா அமைப்பு எச்சரித்துள்ளது. அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களின் போது மோதல்களை ஊக்கப்படுத்தியதாக- பிக்குகள் மீது அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியதாக ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். நோர்வே அரசாங்கமும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பிக்குகளை ஊக்கப்படுத்துவதாக ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியதாக கூறியுள்ள ஞானசார தேரர்- இவை அனைத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு பாரிய பொறுப்புகள் இருப்பதாகவும் அவர் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக் கூடாதெனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ராஜித சேனாரத்ன நிரூபிக்க வேண்டும் என ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார். மற்றையவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விடுத்து அமைச்சர் தன்மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்களுக்கு பதில் அளிக்க தயாரில்லை என்ற போதும் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என தேரர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பொது மக்களின் பணத்தை பயன்படுத்துவதாக ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றங்கள் இழைப்பது பொது மக்களை ஏமாற்றுவது அரசியல்வாதிகளின் இரத்தத்தில் ஊரிய ஒன்று என தெரிவித்துள்ள ஞானசார தேரர்- இன்று இது பொழுது போக்காகிவிட்டதென சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE