மட்டு.சித்தாண்டியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன் மூவர் கைது

266
மட்டக்களப்பு, சித்தாண்டிப் பகுதியிலுள்ள சந்தனமடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பேரை திங்கட்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று மணல் ஏற்றப்பட்ட மூன்று உழவு இயந்திரங்களுடன் அதன் சாரதிகளையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தனமடு ஆற்றில் மணல் மண் ஏற்றுவதை கண்டித்து கடந்த வருடம் ஊர் மக்கள் ஒன்றினைந்து பல தடவை ஆர்ப்பாட்டங்கள் நடாத்தியிருந்தனர்.

அதன் பிற்பாடு குறித்த ஆற்று பகுதியில் இருந்து மணல் மண் ஏற்றுவது முற்றாக தடைப்பட்டு இருந்த போதிலும் ஒரு சில உழவு இயந்திர உரிமையாளர்கள் பலவேரை தனது கைக்குள் வைத்துக் கொண்டு அவர்களின் உதவியுடன் இவ்வாறான மண் ஏற்றுவதை இரவு வேளை மற்றும் பகல் வேளையில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE