மட்டு.வெல்லாவெளியில் வீதி மற்றும் பிரதேச செயலகத்தினை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

465
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் யானைகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நிரந்தர நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி பிரதேச மக்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வீதியினை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 8.30மணி தொடக்கம் போதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் வாயில் கதவினை மூடி பிரதேச செயலாளர் உட்பட ஊழியர்களை உள்செல்ல அனுமதிக்கவில்லை.

அத்துடன் மண்டூர்- மட்டக்களப்பு பிரதான வீதியை வழிமறித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன்போது வாகனங்கள் குறுக்கு வீதியை பயன்படுத்த முனைந்தபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறுக்கு வீதியையும் வழிமறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட எல்லைப் பகுதியில் உள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கடந்த ஒரு மாத காலத்தில் போரதீவுப்பற்றின் எல்லைப் பிரதேசங்களில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் யானையின் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கொழுந்துவிட்டெறியும் வெயிலின் மத்தியிலும் கைக்குழந்தைகளுடன் பெருமளவான பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவ்விடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதச செயலாளர், என்.வில்வரெத்தினம், வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ரகிக்க சம்மபத் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்ககளுடன் கலந்துரையாடி தமக்குரிய தீர்வைப் பெற்றுத்தருவோம் என உறுதியளித்த போதிலும் கடந்த காலங்களில்,

இதுபோன்ற பல உறுதிமொழிகளால் தாம் தொடரந்து ஏமாற்றப்பட்டு வருவதால் தற்போது இவ்விடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் வருகை தந்து எமது பாரிய பிரச்சினையாகவுள்ள காட்டுயானைகளின் தொல்லைகளுக்கு தீர்வு பெற்றுத்தராத விடத்து தாம் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

யுத்த காலத்தில் நாங்கள் அனுபவிக்காத துன்ப நிலையில் தாங்கள் இன்று வாழ்ந்துவருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று கல்வியை சரியான முறையில் பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் தமது வாழ்வாதாரத்திற்கான தொழிலை செய்யமுடியாத நிலையிலும் தாங்கள் வாழ்ந்துவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பல்வேறு சுலோகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் யானையின் தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களின் பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.

இன்று காலை முதல் நடைபெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்பிள்ளை மட்டுமே கலந்து கொண்டுள்ளார்.

எனினும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களோ இதுவரையில் கலந்து கொள்ளாமை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.

SHARE