மதவாத போர்முனையை உருவாக்கி ஞானசார தேரர் மூலம் போப்பாண்டவரை அவமானப்படுத்த இந்த அரசு திட்டம்: மனோ கணேசன்

506

 

கடந்த தேர்தலின் போது தமிழர்களுக்கு எதிராக   இனவாத தீயை தூண்டி விட்டு வளர்த்து  யுத்தத்திலும், தேர்தலிலும் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மதவாத தீயை தூண்டி விட்டு வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு பொதுபல சேனை பொதுசெயலாளர் ஞானசார தேரர் பயன்படுத்தபடுகிறார்.

இந்நோக்கில் இஸ்லாமிய மதத்தவர்களுக்கு எதிராக கலவரம் செய்தார்கள். நரேந்திர மோடியை உடனடியாக ஆத்திரபடுத்த விரும்பாததால், உடனடியாக இந்து மதத்தவர்களை எதிர்க்கும் திட்டம் பின்போடப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது அடுத்த குறி, இப்போது கத்தோலிக்க மதத்தவர்களின் பக்கம் திரும்பியுள்ளது. இந்நோக்கில் இன்று ஞானசாரர் கத்தோலிக்கர்களுக்கு எதிராக புதிய ஒரு மதவாத போர்முனையை உருவாக்க முயல்கிறார்

இந்த அடிப்படையிலேயே போப்பாண்டவரை அழைத்து ஞானசார தேரர் மூலம் அவரையும் அவமானப்படுத்த இந்த அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதன் காரணமாகவே போர்த்துகீசியர்கள் காலனித்துவ ஆட்சி காலத்தில் உடைத்ததாக சொல்லப்படும் பெளத்த விகாரைகள் தொடர்பில்  போப்பாண்டவர் மன்னிப்பு  கேட்க வேண்டும் என ஞானசார தேரர் இப்போது சொல்ல தொடங்கியுள்ளார்.

சிறுபான்மை இன, மதத்தவர்களின் வாக்குகள் தனக்கு ஒருபோதும் கிடைக்காது என்பதால் முழுக்க, முழுக்க சிங்கள பெளத்த மதவாதத்தை தூண்டிவிட்டு பெரும்பான்மை இனத்தின் வாக்குகளை முழுமையாக கவருவதே இந்த அரசாங்கத்தின் எதிர்வரும் தேர்தல் பிரச்சார நோக்கமாக இருக்க போகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதிகாரத்தை  பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இவர்களுக்கு  ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  இந்த நாட்டில் இன்று கத்தோலிக்க மதமும், கிறிஸ்தவ முறைமையும் உள்நாட்டு மத மார்க்கமாக மாறிவிட்டது. பேராயர் மல்கொம் ரஞ்சித்  அவர்களும், ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களும் போர்த்துகீசியர்களோ, டச்சுகாரர்களோ, ஆங்கிலேயர்களோ அல்ல. அவர்கள் இலங்கையர்கள். பெளத்த, இந்து, இஸ்லாமிய மதங்களுடன் கத்தோலிக்கமும் இந்நாட்டு மக்களின் மதங்கள். இதை இனி எவரும் மாற்றியமைக்க முடியாது.

காலனியாதிக்கவாதிகள் இந்த நாட்டில் பெளத்த விகாரைகளை மாத்திரம் உடைக்கவில்லை. இந்து ஆலயங்களையும் உடைத்தார்கள். திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவையும் உடைப்புக்கு உள்ளாயின. ஆனால், நானூறு, ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு இன்று இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களை அவமானப்படுத்துவது நியாயமில்லை. போப்பாண்டவரை கேவலப்படுத்துவது முறையில்லை. முதலில் இந்த ஞானசாரர், தாம் இந்த நாட்டில் எத்தனை பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணி பார்க்க வேண்டும்.

போப்பாண்டவரை உலகம் முழுக்க வாழும் கத்தோலிக்கர்கள் தம் வழிகாட்டி தலைவராக கருதுகிறார்கள். கிறிஸ்தவ பிரிவினரும் மதிக்கின்றார்கள். ஏனைய மதத்தவர்களும் மதிக்கின்றார்கள். அத்தகைய மதத்தலைவரை இங்கே வருகை தரும்படி இந்த அரசு அழைத்துள்ளது. அவரை அழைத்து, அவரிடம் கேள்வி எழுப்பி, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து,  அவமானப்படுத்துவது இவர்களின் திட்டம். அதன்மூலம் பெளத்த மதவாதத்தை தூண்டிவிட்டு, சிங்கள பெளத்தர்களின் ஒரே ஏக தலைவர்கள் தாங்களே என்ற  கருத்தை உருவாக்குவது இவர்களின் புது திட்டம்.

இன்று இங்கே வந்த தென்னாபிரிக்க  ஜனாதிபதி ரமபோஷாவின்  தூதுக்குழுவை அழைத்தது இந்த அரசாங்கம்தான்.  கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றது, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  ஆகும். விமானத்தில் இருந்து இறங்கி இலங்கை மண்ணில் காலடி வைத்ததும் ரமபோஷா, நிமல் சிறிபால டி சில்வாவிடம் சொன்ன வார்த்தைகள்  என்ன? “உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்கிறேன்” என்று சொன்னார். அதன் அர்த்தம் இவர்கள் அங்கே போய் அவரை இங்கே  வருக என அழைத்துள்ளார்கள். இப்போது அழைப்பை ஏற்று வந்தவர்களை, விமல் வீரவன்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஞானசார தேரர், குணதாச அமரசேகர ஆகியோரை கொண்டு அவமானப்படுத்துகிறார்கள். அதாவது வெளிநாட்டுகாரர்களை நாட்டுக்கு அழைத்து வந்து அவமானப்படுத்துவது மகிந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு  கொள்கை.

இதையே இப்போது புனித போப்பாண்டவரின் விடயத்திலும் மகிந்த அரசு செய்ய முயல்கிறது. இவர்களுக்கு வெள்ளை தோல், கருப்பு தோல் என்று வெளிநாட்டுகாரர்கள்  எவரையுமே பிடிக்காது. சிங்கள, பெளத்தம் தவிர எந்த ஒரு இனமும், மொழியும், மதமும் இந்த நாட்டில் இருக்க கூடாது என்ற பைத்தியம் பிடித்தாட்டுகிறது.  ஆனால், உலகம் இனிமேலும் இவர்களை கணக்கில் எடுக்க தயார் இல்லை. ஒருபுறம், சர்வதேச விசாரணை குழு வந்து நிற்கிறது. மறுபுறம், அரசியல் தீர்வுக்காக ரமபோஷா குழு வந்து நிற்கிறது. அரசில் உள்ள இனவாதிகள் எவ்வளவுதான் கூச்சல்  எழுப்பினாலும், பதவி சுகங்களுக்காக அரசில் உள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் எவ்வளவுதான் அரசின் அழுக்கை கழுவி குடித்தாலும், இந்த ஆட்சியின் நாட்கள் இப்போது எண்ணப்பட்டு வருகின்றன. இவர்களின் கழுத்தில் சுருக்கு கயிறு மெல்ல, மெல்ல இறுகுகிறது.

SHARE