மயங்க் யாதவ் அபாரம்… பெங்களூருவை வீழ்த்தி லக்னோ அணி அதிரடி

49

 

மயங்க் யாதவ், நவீன் உல் ஹக் பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி தோல்வியை பதிவு செய்துள்ளது.

டி காக் 81 ஓட்டங்கள்
இன்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற டு பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து லக்னோ அணியின் துவக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 20 ஓட்டங்களில் வெளியேற, தொடர்ந்து படிக்கல் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபுறம் தொடக்க வீரர் டி காக் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். அவர் 56 பந்துகளில் 81 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் நிக்கோலஸ் பூரன் சிக்சர்களை பறக்க விட 21 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 181 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட், யாஷ் தயால் , சிராஜ் , டாப் லீ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகள்
இதனையடுத்து 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இதில் டு பிளிஸ்சிஸ் 19 ஓட்டங்களில் ரன் அவுட் ஆன நிலையில், விராட் கோலி 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ரஜத் படிதார் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மகிபால் லாம்ரோர் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆதிரடி காட்டிய நிலையில், 33 ஓட்டங்களில் கேட்ச் ஆனார்.

முகமது சிராஜ் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களூரு அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் மூலம் லக்னோ அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த், யஷ் தாக்கூர் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

SHARE