மீள்குடியேற்றப்பட்ட தொப்பிகல மக்கள் அடிப்படை வசதிகளின்றி கடும் அவதி

481
மட்டக்களப்பு, தொப்பிகல பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கடும் நெருக்கடியான வாழ்க்கையை கழித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பு நியூஸ் டுடே செய்திச் சேவை தொப்பிகல மீள்குடியேற்ற மக்களின் கருத்துக்களை உள்ளடக்கி, கள ஆய்வுக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறைவின் பின்னர் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்ற வாக்குறுதியுடன் தொப்பிகல பிரதேச மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர். மீள்குடியேற்றம் நடைபெற்று ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் அந்த மக்களுக்கு அரசாங்கம் எதுவித வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் தொப்பிகல பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் பிரதேச மக்களுக்கு சில வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்திருந்தார்கள். அக்காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களும் சில வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்திருந்தன. இவை தவிர மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசாங்கம் ஒரு வீட்டைக் கூட நிர்மாணித்துக் கொடுக்கவில்லை. யுத்த காலத்தில் சேதமுற்ற வீடுகளை செப்பனிட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுமில்லை.

தொப்பிகல பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மீன்பிடி, விறகு வெட்டுதல் தவிர்ந்த வேறு தொழில் வாய்ப்புகளோ, வருமானமோ அற்ற நிலையில் தவிக்கின்றார்கள். அப்பகுதிக்கான பாதை சேதமடைந்து, போக்குவரத்து வசதிகள் இன்மையும் அதற்கான ஒரு காரணமாகும்.

குறைந்த பட்சம் அங்குள்ள மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான ஆரம்பப் பாடசாலை ஒன்றைக் கூட அரசாங்கம் இதுவரை அமைத்துக் கொடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE