முக்கொலை சந்தேக நபரின் பின்னணியில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல்?

346
மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வத்தளையில் கைது செய்யப்பட்ட 31 வயதுடைய பிரசான் குமாரசுவாமியின் பின்னணியில் பிரபலமான போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று உள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
prashan_arrested1

இவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் தனது தாய், தந்தை மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டு வழக்கை எதிர்நோக்கி தற்போது பிணையில் உள்ள சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை வத்தளை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட 7 நாள் விசேட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வருவதாகவும், அதனூடாக பல்பொருள் அங்காடிகளின் (சுப்பர் மார்க்கட்) வாகனத் தரிப்பிடங்கள் ஊடாக மிக சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்ட இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலான பின்னணியை வெளி ப்படுத்தவுள்ளதாகவும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யக் கூடியதாக இருக்கும் என நம்புவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நீண்ட காலமாக விசாரணை செய்துவந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றின் அடிப்படையில் செய்யப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த ஹெரோயின் போதைப் பொருளும் அதனூடாக வருமானம் ஈட்டப்பட்ட 24 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணமும், போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை ஜீப் மற்றும் சிவப்பு நிற கார் ஆகியவற்றையும் கைப்பற்றியதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்தளை பிரதேசத்தில் உள்ள பிரபலமான பல்பொருள் அங்காடியொன்றின் வாகன தரிப்பிடத்துக்கு வெள்ளை நிற சீ.ஏ.சீ. 9565 என்ற ஜீப் ரக வாகனத்தில் பிரசான் வந்துள்ளார்.

அந்த ஜீப் வண்டியில் அவர் ஹெரோயின் போதைப் பொருளினைக் கொண்டுவந்துள்ளார். 3கிலோ கிராம் நிறை கொண்ட அந்த ஹெரோயின் போதைப் பொருள் மூன்று வெவ்வேறு பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே அப்பிரதேசத்தில் சிவில் உடையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் இருந்த நிலையில் அவர்கள் நடப்பதைக் கண்காணித்தனர்.

இதன் போது குறித்த வெள்ளை ஜீப் வண்டி அந்த அங்காடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற சொகுசு கார் ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டுள்ளதையும் அதிலிருந்து இறங்கிய பிரசான், தனது கையில் இருந்த மற்றொரு திறப்பூடாக காரைத் திறந்து அதனுள் போதைப் பொருள் பொதிகளை மாற்றுவதையும் கண்டனர்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் பிரசானைக் கைது செய்ததுடன் ஹெரோயின் மூன்று கிலோ, 24லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஜீப், கார் ஆகியவற்றை தமது பொறுப்பில் எடுத்தனர்.

இதனையடுத்து பிரசானிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோகட் உணவிற்குள் விஷம் கலந்து வெள்ளவத்தை, இராமகிருஷ்ண வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து தனது தாய், தந்தை, மற்றும் தங்கை ஆகியோரை பிரபாத் 2012ம் அண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி கொலை செய்த பின்னர் குருணாகலை நோக்கி பஸ் வண்டியில் தப்பிச் செல்லும் போது சில தினங்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

அது முதல் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக பிரபாத் விளக்கமறியலில் இருந்த போது அவருக்கும் குடு லாலித்த என்ற பிரபலமான போதைப் பொருள் கடத்தல்காரருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் திகதி குடுலாலித்த அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்

இந் நிலையில் அதற்கு முன்பிருந்தே குடு லாலித்தவுடன் நெருங்கிப் பழகியுள்ள பிரபாத்தின் வழக்கு செலவுகளையும் லாலித்தவே ஏற்று முன்னெடுத்துள்ளார்.

இந் நிலையில் சிறைக்குள் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் பிரசான் கைவரிசையை காட்டியிருக்கலாம் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

குடு லாலித்த கொல்லப்பட்டதன் பின்னர் ஹெரோயின் வர்த்தகத்தின் அந்த இடத்தை சிறையில் இருந்தவாறு பிரசான் மேற்பார்வை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் குடு லாலித்தவுடன் இருந்த குழுவினருடன் பிரசான் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்தமை தொடர்பில் பிரசானுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளதுடன் அந்த விசாரணைகள் எதிர்வரும் 19ம் திகதி முதல் இடம்பெறவுள்ளன.

கடந்த மாத இறுதிக் காலப்பகுதியில் அவருக்கு பிணையும் வழங்கப்பட்டிருந்தது. பிணை தொகையும் குடு லாலித்தவின் குழுவூடாகவே செலுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் நிலையில் அதன் பின்னர் பிரசான் நேரடியாக போதைப்பொருள் வர்த்தகத்தில் இறங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரசானை 7 நாள் தடுப்புக் காவலின் கீழ் எடுத்துள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இந்த ஹெரோயின் வர்ததகம் குறித்து விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE