முசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் 

84
(மன்னார் நகர் நிருபர்)
முசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவரை உடனடியாக  இடமாற்றம் செய்யக் கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் பிரதேசச் செயலாளர் பாகுபாடு காட்டுவதாகவும், அரசியல் வாதிகளின் சொல் படி குறிப்பிட்ட நபர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதாகவும்,மண் கொள்வனவு செய்வதற்காக அனுமதி பத்திரம் பாகுபாடு காட்டி வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் பிரதேசச் செயலாளர் பல்வேறு துஸ்பிரையோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதோடு,மக்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொள்ளுவதாகவும் தெரிவித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய முசலி பிரதேச மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முசலி மக்கள் மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயில் வரை சென்றனர்.
பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
மகஜரை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே குறித்த பிரதேசச் செயலாளர் விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார்.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முசலி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த குழுவினர் உடனடியாக அங்கு சென்று பிரதேசச் செயலாளாரிடம் விசாரனைகளை மேற்கொள்ளுவார்கள்.
நீங்கள் என்னிடம் சமர்ப்பித்த மகஜர் உடனடியாக அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE