முதலாம் திகதி முதல் அமுலாகிறது வடமாகாணத்துக்கான வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டம் (Photos)

198

வடமாகாணத்துக்கான வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டம் விரைவில் உருவாக்கப்பட்டு ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் அதி உச்சப் பயனை அடையக் கூடிய வகையிலும், பாதுகாப்பான, தரமான போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளேன். எதிர்வரும்-01 ஆம் திகதி தொடக்கம் இந்த நியதிச் சட்டம் மூலமான நன்மைகளை எமது மக்கள் அனுபவித்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார் வடமாகாணக் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை- 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால் கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாடத் தொகுதிகள் மற்றும் சமையல் பாத்திரத் தொகுதிகள் வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் யாழ் மாவட்டக் கிராமமட்ட மாதர், கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கான உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (09) மாலை-4.15 மணி முதல் யாழ். ஆனைப்பந்தியிலுள்ள கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிமனையில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜே .சி.பெலிசியன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண அவைத் தலைவர் சீ. வி.கே. சிவஞானம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரட்ணம், க.தர்மலிங்கம், வே.சிவயோகம், என்.கே .சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், ச.சுகிர்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த இரண்டு வருடங்களாக வடமாகாணத்தில் போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும். வட மாகாணத்தின் போக்குவரத்துத் துறையை ஏனைய மாகாணங்கள் பின்பற்றும் வகையிலான தரமான சூழலை ஏற்படுத்தும் கனவுடனும், இலட்சியத்துடனும் நான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். மிகுந்த சிரமத்தின் மத்தியில் கடந்த-29 ஆம் திகதி வடமாகாணப் போக்குவரத்து அதிகார சபையை உருவாக்குவதற்கான நியதிச் சட்டத்திற்குக் கெளரவ ஆளுநர் ஒப்புதலளித்திருக்கின்றார்.

இந்த நியதிச் சட்டம் விரைவில் நிறைவேற வேண்டுமெனப் பல்வேறு தடவைகள் மாகாண சபையின் பேரவைத் தலைவருக்கு நெருக்கீடுகள் வழங்கியிருக்கிறேன். அதற்கமைவாகப் பேரவைத் தலைவரும், செயலாளரும் நியதிச் சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பித் தற்போது என்னுடைய செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

கடந்த பெப்ரவரி மாதம் சுவஸ்திகன் என்ற மாணவன் விபத்தினால் மரணித்திருக்கிறார். அதே போன்று 2009 ஆண்டிற்குப் பின்னர் இயற்கை மரணத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட விபத்துக்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வடமாகாணத்தில் அதிகமாகவுள்ளது. இதற்குத் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை ஆகியவற்றிற்கிடையிலுள்ள போட்டித் தன்மைகள் உட்படப் பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. ஆகவே, இவை யாவும் சீர் செய்யப்பட்டுத் தரமான போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றேன்.

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் போக்குவரத்துத் துறை மிகவும் முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. தரமான போக்குவரத்து ஒரு மாவட்டத்தின் அபிவிருத்தியிலும் பிரதான செல்வாக்குச் செலுத்துகிறது. வடமாகாணத்திலுள்ள பல பின் தங்கிய கிராமங்களுக்குப் போக்குவரத்துச் சேவை இன்னும் முற்றாக இல்லாமலுள்ளமை பெரும் குறைபாடாகவுள்ளது.

இவ்வாறான கிராமங்களில் திடீர் நோய் உபாதைகளால் பாதிக்கப்படும் நோயாளர்களை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்காத காரணத்தால் பலரும் அநியாயமாக உயிரிழந்திருக்கின்றனர். ஆகவே, இந்தப் பாதிப்புக்கள் அனைத்தும் சீர் செய்யப்படுவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை, தனியார் போக்குவரத்துத் துறையினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

2ece2a54-9715-4af8-8570-b9496b299f21

86803569-7fab-4d4f-b2bf-ddeaa3f24dba

f3ce4d0d-da7a-485d-a03f-2fcb2debaded

f38d0372-e546-449c-9ad6-1f434562fe66

a92929e6-724f-4eda-87c9-d2ee9ca5d3fd

a471a37e-15d5-4d5f-916d-964939a3ddb5

c92796c4-f8d8-4289-898e-443cb0d5a3d6

SHARE