மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு

251
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளது.

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் சேற்று நிலமொன்றை அண்டிய பகுதிகளில் வசித்து வரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுவதற்காக பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாக கோரியதாகவும் அதில் 50 லட்ச ரூபா ஏற்கனவே முற்பணமாக பெற்றுக் கொண்டதாகவும் பிரசன்ன மற்றும் அவரது மனைவி மயூரீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடாத்துவதற்காக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு பிரசன்ன மற்றும் அவரது மனைவிற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் இருவரும் நேற்று விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருக்கவில்லை.

திடீர் நோய் காரணமாக பிரசன்னவின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்து முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே நீதிமன்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஏற்கனவே முதலமைச்சரின் மனைவி நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

மொரட்டுவை பிரதேச வர்த்தகர் ஒருவரினால் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது.

இதேவேளை பிரசன்ன ரணதுங்கவை வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் வரையில் விசாரணைக்கு அழைப்பதனை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் பொலிஸாரிடம் கோரியிருந்தார்.

SHARE